காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநருடன் விஷால், நாசர் சந்திப்பு!

தமிழ்த் திரையுலகம் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆளுநரிடம் அளித்தார்கள்...
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநருடன் விஷால், நாசர் சந்திப்பு!

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைகளில் அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ்த் திரை அமைப்புகள் ஒருங்கிணைந்து சென்னையில் ஏப்ரல் மாதம் மௌனப் போராட்டம் நடத்தினார்கள். தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரை அமைப்புகளின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்கள் விவரம்: மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்கக் கூடிய எந்தவொரு விஷயத்தையும் அரசு அமல்படுத்தக் கூடாது. காவிரி நீர் பங்கீட்டில் தமிழக விவசாயிகளுக்கான உரிமைகள் முறைப்படி கிடைக்க வேண்டும். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொது நோக்கத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துத் தீர்வு காணப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் அப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆகிய 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவில் தமிழ்த் திரையுலகினரின் கையெழுத்து பெற்று தமிழக ஆளுநரிடம் விரைவில் அளிக்கப்படும் என்று நடிகர் விஷால்
தெரிவித்தார்.

அதன்படி நடிகர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட திரையுலகினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்தார்கள். தமிழ்த் திரையுலகம் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆளுநரிடம் அளித்தார்கள். 

ஆளுநரைச் சந்தித்த பிறகு நாசர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் மனுவில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த ஐந்தாயிரம் பேர் கையெழுத்திட்டு உள்ளார்கள். அந்த மனுவை நாங்கள் ஆளுநரிடம் அளித்தோம். அதை வாங்கிக்கொண்ட ஆளுநர், அடுத்த இரு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தினோம். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் என நாசர் பேட்டியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com