வாயைப் பிளக்க வைக்கும் அளவிலான கோலிவுட் ஹீரோக்களின் சம்பள விவரம்!

முன்னணி ஹீரோக்கள் என்றால் அவர்களின் சம்பளமும் முன்னணியில் தான் இருக்கும்.
வாயைப் பிளக்க வைக்கும் அளவிலான கோலிவுட் ஹீரோக்களின் சம்பள விவரம்!
Published on
Updated on
2 min read

முன்னணி ஹீரோக்கள் என்றால் அவர்களின் சம்பளமும் முன்னணியில் தான் இருக்கும். இந்திய சினிமாவைப் பொருத்தவரையில் ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஹீரோ யார், அவருக்கு ஏற்ற வகையில் கதை உள்ளதா, என்று ஹீரோக்களை மையப்படுத்தியே படம் எடுக்கும் போக்கு வெகு காலமாக இருந்து வருகிறது. 

ஒரு ஹீரோவுக்கு மார்கெட்டில் அவருக்கு எந்தளவு மவுசு என்பதற்கேற்ற வகையில் அவர்கள் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. முந்தைய படங்களின் வெற்றி தோல்விகள் சில உச்ச நட்சத்திரங்களின் சம்பளத்தில் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாது. காரணம் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் நடிப்பது பணத்துக்காக இல்லை எனும் நிலை வந்து, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவே என்பதாகிவிடுகிறது. 

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகிய இருவரும் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால் தான் அவர்களை உச்ச நட்சத்திரங்கள் என்று கோலிவுட் குறிப்பிடுகிறது. அதற்கு அடுத்த நிலையில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் விஜய்யும், அஜித்தும் என்கிறது கோலிவுட் பட்சி.

விஜய் தற்போது நடித்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்துக்கு தன்னுடைய சம்பளமாக 40 கோடி வாங்கியிருக்கிறாராம். போலவே அஜித் தற்போது படப்பிடிப்பில் உள்ள விசுவாசம் படத்துக்காக 3.5 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். இயக்குநர் சிவா இயக்கும் இப்படத்துக்கு முந்தைய படமான விவேகம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்ற காரணத்தால் ஐந்து கோடியை குறைத்து பெற்றுள்ளாராம். விசுவாசம் படத்துக்காக 10 கோடியை அட்வான்ஸாகப் பெற்றுவிட்ட அஜித், படத்தை 5 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் மீதித் தொகையை ஒவ்வொரு மாதம் 5 கோடி கொடுத்து விட வேண்டும் என்று அக்ரிமெண்ட் போட்டுள்ளார் என்கிறது தயாரிப்பாளர் வட்டம். எதிர்பாராத வகையில் நடந்த திரையுலக வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்பு தாமதம் ஆனாலும் சம்பளப் பணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த உச்ச நட்சத்திரமான சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்கிறார். சம்பளமாக 25 கோடிகளைப் பெற்ற சூர்யா அதில் ஐந்து கோடியை அட்வான்ஸாகப் பெற்றிருக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கிறார் விக்ரம். அவருக்கு சம்பளமாக 15 கோடி பேசப்பட்டது. இதற்கு முன் ஒப்பந்தமான வேறு ஒரு படத்தில் 17 கோடி சம்பளம் பெற்றுள்ளார் விக்ரம். அவரை அடுத்து கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோரின் சம்பளங்கள் 10 கோடியிலிருந்து 7 கோடி வரை. விஜய் ஆண்டனி அண்மையில் நடித்த அண்ணாதுரை படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை, 5 கோடி வரை லாபம் பெறும் அவர் இனி சொந்தப் படம் எடுக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம். மூடர் கூடம் இயக்குநர் நவீனின் புதிய படத்தில் நடிப்பதற்கு 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் விஜய் ஆண்டனி. அரவிந்த்சாமி, மாதவன், ஜீவா ஆகியோர் 3 கோடிகள் சம்பளமாகப் பெறுகிறார்கள். இயக்குநர்கள், நல்ல பேனர் எனும் பட்சத்தில் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறார்கள்.

விக்ரம் பிரபு, அதர்வா, ஆகியோரின் சம்பளம் ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடி வரை என்கிறார்கள். கெளதம் கார்த்திக் முன்பு வாங்கிக் கொண்டிருந்த சம்பளமான எண்பது லட்சத்திலிருந்து ஒரு கோடிக்கு தாவியுள்ளாராம். இதே ரேஞ்சில் சம்பளம் பெறுபவர் அட்டக்கதை தினேஷ். ஜி.வி.பிரகாஷ் 75 லட்சம் பெறுகிறார். விமல் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை சம்பளமாகப் பெறுகிறார்.

சரி, விஜய்சேதுபதி, சிம்பு, தனுஷ், ஆர்யா, சிவ கார்த்திகேயன் ஆகியோரின் சம்பளம்? சிவ கார்திகேயன் 15 கோடிக்கும் மேலாக சம்பளம் வாங்குகிறார். தனுஷ் 7 முதல் பத்து கோடிகள் வரை சம்பளம் பெறுகிறாராம். விஜய் சேதுபதி 5 கோடி வாங்கிக் கொண்டிருந்தவர் விக்ரம் வேதா படத்தின் வெற்றிக்குப் பிறகு  7 கோடிக்கு வந்திருக்கிறாராம். கதை மிகவும் நன்றாக இருந்தால் 5 கோடி போதும் என்று சொல்லிவிடுகிறாராம். 'நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதால் பெரிதாக எதுவும் ஆகிவிடப் போவதில்லை. தமிழ் சினிமாவில் 10 நடிகர்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்குகின்றனர். கடவுள் புண்ணியத்தில் நானும் அதில் ஒருவன்' என்று சிம்பு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு படத்துக்கு ஒரு கோடியிலிருந்து மூன்று கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எட்டு கோடி வாங்கியிருக்கிறார் என்கிறது சானல் தரப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com