

ரஜினி நடித்துள்ள காலா படம் வெளியாகும்போது ரஜினி கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதைத் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் ஜூன் 7 அன்று வெளிவருகிறது.
கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காலா படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடும் என்பது அதன் தணிக்கைச் சான்றிதழ் வழியாகத் தெரியவந்துள்ளது. காலா பட டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி ரஜினிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தங்களைப் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின்ற முதல் நாள் தொடங்கி குறைந்தபட்சம் மூன்று நாள்கள் வரை திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். அதனை அன்பின் மிகுதியாக எடுத்துக்கொண்டாலும் கூட அவ்வாறு பாலாபிஷேகம் செய்வதற்காக ஒரு சில ரசிகர்கள் எங்களது பால் முகவர்களின் கடைகளுக்கு வெளியே நள்ளிரவில் இறக்கி வைக்கப்பட்டிருக்கும் பாலினை திருடிச் சென்று விடும் சம்பவங்கள் தமிழகத்தில் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள சுமார் 15% மேற்பட்ட மக்கள் பால் வாங்கவே வழியின்றி அல்லல்பட்டு வரும் இன்றைய சூழலில் உயிற்ற கட்அவுட்களுக்குத் தங்களைப் போன்ற நடிகர்களின் மீதுள்ள வெறித்தனமான அன்பினால் பாலாபிஷேகம் எனும் பெயரில் பாலினை வீணடிப்பதால் பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளாகிறார்கள். கட்அவுட்களுக்குப் பாலாபிஷேகம் செய்வதற்குப் பதில் தங்களுடைய திரைப்படம் வெளியாகிற நாளிலிருந்து முதல் 10 நாள்கள் வரை திரையரங்குகளின் வெளியே தங்களின் ரசிகர்களின் சார்பில் மாபெரும் இரத்த தான முகாம் நடத்திடவும் உடலுறுப்பு தானம், கண் தானம் மற்றும் மது, சிகரெட் போன்ற போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடத்திடவும் நீங்கள் உங்களுடைய ரசிகர்களுக்கும் ரசிகர் மன்றங்களுக்கும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பிக்கவேண்டும்.
தமிழகத்தில் கட்அவுட் கலாசாரத்துக்கும் உயிரற்ற கட்அவுட்களுக்குப் பாலாபிஷேகம் எனும் பெயரில் பாலினை வீணடிக்கிற கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்த முயற்சி எடுப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு நாங்கள் காத்திருக்கிறோம் என அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.