தமிழ் சினிமாவில் சாதிக்க நிறைய பொறுமை வேணும்! ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி!

சின்னத் திரையில் இருந்து சினிமாவுக்கு நடிக்க வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சினிமாவில் சாதிக்க நிறைய பொறுமை வேண்டும்.
தமிழ் சினிமாவில் சாதிக்க நிறைய பொறுமை வேணும்! ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி!
Published on
Updated on
2 min read

சின்னத் திரையில் இருந்து சினிமாவுக்கு நடிக்க வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சினிமாவில் சாதிக்க நிறைய பொறுமை வேண்டும். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்கிறார். அவர் அண்மையில் தந்த பேட்டியிலிருந்து சில துளிகள்:

வட சென்னை படத்தில் நடித்த அனுபவம்?

வட சென்னை படத்துல நடிச்சதுக்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சிருக்கு. அதே சமயம் சிலர் கெட்ட வார்த்தை எப்படி பேசி நடிச்சீங்கன்னும் விமரிசனம் செஞ்சாங்க. என்னைப் பொருத்தவரைக்கும் டைரக்டர் சொன்னா அது சரியா இருக்கும்னு நினைச்சேன். அதனால தான் இப்படியொரு வசனம் பேசணும்னு சொன்னதும் மறுக்கலை. ஏன்னா அந்த கேரக்டர் அப்படி. பத்மா தான் அந்த வார்த்தைகளை சொன்னது, அது கதாபாத்திரத்தோட வெளிப்பாடு. ஐஸ்வர்யா பேசலை. அவளுக்காக நான் பேசியிருக்கிறேன். அவ்வளவுதான். இதைப் புரிஞ்சுக்கங்க. அந்த சீனுக்கு தியேட்டர்ல நல்ல ரெஸ்பான்ஸ். மக்கள் எதுவும் சொல்லலை. அதை இயல்பா எடுத்துக்கிட்டாங்க. காரணம் அவங்க யாருமே ஐஸ்வர்யா ராஜேஷ் இதை பேசினா அப்படின்னு எடுத்துக்கலை. பத்மா பேசினது அதுங்கற தெளிவு அவங்களுக்கு இருக்கு. 

இது குறித்த நெகடிவ் விமர்சனம் வந்தப்போ உங்களை அது பாதிக்கலையா?

இதுல பாதிப்படையறதுக்கு எதுவும் இல்லை. நான் ஒரு நடிகை. அதுக்கு மேல இதுல சொல்றதுக்கு எதுவுமில்லை. தமிழ் சினிமாவில பத்மா மாதிரி ஒரு கதாபாத்திரம் இதுவரை காட்சிப்படுத்தவில்லை. திரையில அப்படியொரு பொண்ணை யாரும் பார்க்காததால, முதல் தடவையா அந்த கேரக்டர்கல நான் நடிக்கறப்ப விமரிசனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கு. இதுக்கப்பறம் யார் வேணும்னாலும் இந்த மாதிரி ரோல் பண்ணலாம். ஆனால் நான் தான் முதல். இதுல பெருமைப் படறதுக்கோ அவமானமா நினைக்கறதுக்கோ எதுவுமில்லை. ஒரு நடிகையா என்னோட பங்களிப்பை சரியா செஞ்சிருக்கேன்னு நினைக்கறேன்.

செக்கச் சிவந்த வானம் படத்துல நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

என்னோட ஆக்டிங் கேரியர்ல செக்கச் சிவந்த வானம் ரொம்ப முக்கியமான படம்னு நினைக்கறேன். மணி சாரோட படத்துல நடிக்கறது எல்லாருக்கும் பெரிய கனவா இருக்கும். எனக்கும் அப்படித்தான். ரொம்ப சந்தோஷமா நடிச்சேன். மணி சாரைப் பொருத்தவரைக்கும் ஒரு நடிகரோட  பெர்ஃபார்மன்ஸ் லெவலைப் பார்த்து, அதுக்கேத்தபடி அவங்ககிட்டேர்ந்து வேலை வாங்குவார். ஒரு சீனை ரொம்ப அழகா விளக்கி நம்மளோட ரோலை சொல்லிக் கொடுப்பார். அவரோட தனித்தன்மை அதுதான்னு நினைக்கறேன். சிசிவில நடிச்சது எனக்கு மனநிறைவை கொடுத்திருக்கு.

ஒரு பக்கம் சீனியர் ஹீரோக்களுடன் நடிக்கறீங்க, இன்னொரு பக்கம் இளம் கதாநாயகர்களுடன் நடிக்கறீங்க? என்ன வித்யாசம்?

சீனியர் ஆக்டர் யங் ஆக்டர் இப்படி பகுத்துப் பார்க்கறது இல்லை. இந்த ரெண்டு பேர் கூட நடிக்கறது எனக்கு எந்த வித்யாசமும் இல்லை. சீனியர் நடிகர்கள் கூட நடிக்கறப்போ சக நடிகைகளை ஒரு கம்ஃபோர்ட் லெவல்ல நடத்துவார். நடிப்புல சில இம்ப்ரூவ்மெண்ட் பண்ணச் சொல்லித் தருவாங்க. அதே போலத் தான் யங் ஹீரோக்களும்.

அடுத்து என்ன படம்?

செக்கச் சிவந்த வானம், வடசென்னை இந்த ரெண்டு படம் முடிச்சதுக்கு அப்பறம் புது படங்கள் இன்னும் கமிட் பண்ணிலை. கனா மற்றும் துருவ நட்சட்திரம் விரைவில் வெளிவரும். புதிய இயக்குநர்களிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஹீரோக்களை மையப்படுத்தின கதைகள் நிறைய வருது. எனக்கு பிடிச்ச கதை வந்தா தான் நடிக்கணும்னு ஒரு முடிவில் இருக்கேன். அடுத்து வெளிவரவிருக்கிற கனா படத்துல எனக்கு முக்கியமான ரோல். இது முழுக்க பெண் மையக் கதாபாத்திரம். எனக்கு கதை ரொம்ப பிடிச்சுது. இந்தப் படத்துல நான் விமன் கிரிக்கெட்டியரா நடிச்சிருக்கேன்.  இது நிச்சயம் கவனம் பெறும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com