

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
தீபாவளியன்று அதாவது நவம்பர் 6 அன்று சர்கார் படம் வெளியாகவுள்ளது. ஆனால் படத்தை நான்கு நாள் முன்னதாக அதாவது நவம்பர் 2 அன்று வெளியிடவேண்டும் என்று புதிதாகக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மெர்சல் படத்தை விடவும் அதிக விலைக்கு சர்கார் படம் வியாபாரம் ஆகியுள்ளதால் அதிக விடுமுறை தினங்கள் இருந்தால்தான் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறமுடியும் என்கிற நிலைமையில் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளார்கள். நவம்பர் 2 அன்று வெளியானால் படத்துக்குப் போட்டியே இருக்காது. அதனால் முதல் மூன்று தினங்கள் முழு வசூலையும் அள்ள முடியும். அதன்பிறகு நவம்பர் 6 அதாவது செவ்வாய் முதல் ஞாயிறு வரை தொடர்ந்து நல்ல வசூலைப் பெறமுடியும். இதனால் முதலீடு செய்ததை விடவும் அதிகத் தொகையை பட வசூலாகப் பெறமுடியும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனால் படத்தை முன்கூட்டியே வெளியிடவேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அதேசமயம் இதை நிறைவேற்ற முடியாத அளவுக்குச் சில சிக்கல்களும் உள்ளன. இதுகுறித்து சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
நவம்பர் 2 அன்று வெளியாவது என்பது சரியான முடிவு. ஆனால் நமக்கு இன்னும் 10 நாள்களே உள்ளன. செங்கல்பட்டுப் பகுதி வியாபாரம் இன்னும் முடியவில்லை. திரையரங்குகள் உறுதி செய்யப்படவில்லை. முன்பதிவுகள் தொடங்கவேண்டியுள்ளன என்று கூறியுள்ளார்.
ராகேஷ் கெளதமனின் இக்கருத்துக்கு ஒரு பதில் இவ்வாறு வந்துள்ளது: அனைத்து வருடங்களுக்குமான அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் மாதத்தின் முதல் வாரம் ஆரம்பமாகின்றன. இறுதி வருட மாணவர்களுக்கு நவம்பர் 2-ம் தேதி ஆரம்பமாகிறது. எனவே நவம்பர் 6 அன்று சர்கார் வெளியாவதுதான் சரியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
சர்கார் படம் நவம்பர் 2-ம் தேதி வெளியாகவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தாலும் சன் பிக்சர்ஸ் சார்பில் இதுவரை வெளியீட்டுத் தேதி குறித்த புதிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் நேற்று வெளியான ட்விட்டர் விளம்பரத்தில் படம் வெளியாக இன்னும் இரு வாரங்களே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்கார் படத்தை நவம்பர் 6 அன்று வெளியிடவே சன் பிக்சர்ஸ் விரும்புகிறது. இதையும் தாண்டி, வெளியீட்டுத் தேதியில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது வரும் நாள்களில்தான் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.