சுடச்சுட

  

  தாதாசாகேப் பால்கே விருது பெற்ற புகழ்பெற்ற வங்க இயக்குநர் மிருணாள் சென் காலமானார்  

  By DIN  |   Published on : 30th December 2018 04:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mirnal_sen

   

  கொல்கத்தா:  தாதாசாகேப் பால்கே விருது பெற்ற புகழ்பெற்ற வங்க இயக்குநர் மிருணாள் சென் உடல்நலக்குறைவால் ஞாயிறன்று காலமானார் 

  இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் மிருணாள் சென். தான் இயக்கிய வங்காள மொழித் திரைப்படங்கள் மூலம் இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவர். 

  இவர் இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்காளம் ஆகிய 4 மொழிகளில் சுமார் 30 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் மற்றும் 4 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். 

  இளம் வயதில் பல புத்தகங்களைப் படித்ததால் மிருணாள் சென்னுக்கு இயல்பாகவே  திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தின் காரணாமாக திரைப்பட விமர்சனங்கள் எழுதிவந்தார். பின்னர் கொல்கத்தா ஸ்டுடியோவில் ஆடியோ தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றினார். 

  1950 முதல் முழுநேரமாக திரைப்படப் பணிகளில் இறங்கினார். இவர் இயக்கி 1969-இல் வெளிவந்த ‘புவன் ஷோம்’ (திரு. ஷோம்) என்ற திரைப்படம் இவரை உலக அளவிலும் இந்திய அளவிலும் பெரிய இயக்குநராக அடையாளப்படுத்தியது. இத்திரைப்படம் இன்றுவரை நவீன இந்திய திரைப்பட இயக்கத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. 

  சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது மற்றும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதுகளை இவர் பலமுறை பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, பத்மபூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்பித்தன. 

  அத்துடன் இவரின் பல திரைப்படங்கள் இந்தியாவில் விருதுகளை வென்றது மட்டுமல்லாது கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, விருதுகளை வென்றன. 

  வயோதிகத்தின் காரணமாக உடல்நலக்குறவால் அவதிப்பட்டு வந்த அவர் கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் ஞாயிறு காலை 10.30 மணியளவில் அவர் காலமானார். 

  மிருணாள் சென் மறைவுக்கு திரைப்படத் துறை பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai