நேருக்கு நேர் விவாதத்துக்கு நான் ரெடி, நீங்க ரெடியா அங்கிள்?! அன்புமணிக்கு அழைப்பு விடுக்கும் சிம்பு!

தயவு செய்து நாட்டில் நடக்கக்கூடிய அத்தனை விஷயங்களுக்கும் திரைப்படங்களைக் காரணமாக்கி விடாதீர்கள். திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்த்து ரசியுங்கள்... சிம்பு
நேருக்கு நேர் விவாதத்துக்கு நான் ரெடி, நீங்க ரெடியா அங்கிள்?! அன்புமணிக்கு அழைப்பு விடுக்கும் சிம்பு!
Published on
Updated on
2 min read

வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் மாநாடு திரைப்பட அறிவிப்புக்குப் பின் சிம்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அரசியல் மற்றும் சினிமா ரீதியாக மீண்டுமொரு சர்ச்சைக்கு திரி கொளுத்தியுள்ளது. 

பாமகவின் அன்புமணி ராமதாஸ்... சமீபத்தில் வெளியான விஜயின் ‘சர்கார்’ திரைப்பட போஸ்டர்களில் விஜய் புகை பிடிப்பதைப் போன்றதொரு படம் இடம்பெற்றுள்ளது.  அதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறது பாமக. எனவே அக்கட்சியின் சார்பாக அன்புமணி ராமதாஸ், ‘புகைப்பதை இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் விதமான இத்தகைய புகைப்படங்களை வெளியிடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நடிகர்களுக்கும் சமூகப் பொறுப்புணர்வு அவசியமே! இயக்குனர்கள் சொல்வதை எல்லாம் நடிகர்கள் செய்ய வேண்டுமென்பதில்லை. புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் இப்படியொரு போஸ்டருக்கு போஸ் கொடுத்த விவகாரத்தின் பின்னணியில் நடிகர் விஜய்க்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும்’ என்றெல்லாம் கொந்தளித்திருந்தார்.

தனது ‘மாநாடு’ திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு நடிகர் சிம்பு, விஜயின் ‘சர்கார்’ படத்துக்கு ஆதரவாகத் தனது கருத்தையும் பதிவு செய்தார். 

முன்னதாக ‘மாநாடு’ திரைப்படம் குறித்துப் பேசுகையில் சிம்பு சொன்னது. படத்துக்கு  ‘மாநாடு’ என்று பெயர் வைத்திருப்பதால் அடுத்ததாக நான் அரசியலுக்கு வரப்போகிறேன், அதற்கு ஒரு முன்னோட்டமாக இருக்கட்டுமே! என்று தான் இப்படி ஒரு பெயரை என் படத்திற்கு சூட்டியிருப்பதாக தயவு செய்து யாரும் தவறாக நினைத்து விடாதீர்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பம். தற்போது அது நிறைவேறி இருக்கிறது. அத்திரைப்படத்தில் அரசியல் இருக்குமே தவிர என் சொந்த வாழ்க்கையில் நிச்சயம் அரசியலுக்கு இடமில்லை.

அது மட்டுமல்ல, சமீபத்தில் வெளியிடப்பட்ட  ‘சர்கார்’ திரைப்பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பதைப் போன்ற புகைப்படம் இடம்பெற்றதால் பாமகவின் அன்புமணி ராமதாஸ் அங்கிள், திரைப்படங்கள் இளைஞர்களிடையே மோசமான பழக்க வழக்கங்களைத் திணிக்கின்றன என்றும்...அப்படியான திரைப்படம் எடுப்பவர்கள் மற்றும் அதில் நடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவரிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால்... தயவு செய்து நாட்டில் நடக்கக்கூடிய அத்தனை விஷயங்களுக்கும் திரைப்படங்களைக் காரணமாக்கி விடாதீர்கள். திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்த்து ரசியுங்கள். என்னால் இதுகுறித்து நேரடியாகத் தங்களுடன் விவாதிக்க முடியும். உங்களது அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும் முடியும். எனவே பொதுமக்கள் மத்தியில் இது குறித்து நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொள்ள நான் ரெடி ஆங்கிள். நீங்களும் ரெடியா?’ என்று எதிர்கேள்வி தொடுத்திருக்கிறார் சிம்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com