நான் ஆஸ்திகனும் இல்லை, நாஸ்திகனும் இல்லை! ஆனால் 'ஹாஸ்’திகன்! கமல் குறித்து மோகன் க்ரேஸி பேட்டி!

நான் ஆஸ்திகனும் இல்லை, நாஸ்திகனும் இல்லை! ஆனால் 'ஹாஸ்’திகன்! கமல் குறித்து மோகன் க்ரேஸி பேட்டி!
நான் ஆஸ்திகனும் இல்லை, நாஸ்திகனும் இல்லை! ஆனால் 'ஹாஸ்’திகன்! கமல் குறித்து மோகன் க்ரேஸி பேட்டி!

உலக சிரிப்பு தினம் இன்று (மே 6) கொண்டாடப்படுகிறது, கிரேஸி மோகன் தனது காமெடி அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறார், க்ரேஸி மோகன் நகைச்சுவை துறையில் தொடர்ந்து பல காலகமாக தமிழ் மக்களை சிரிக்க வைக்கும் வேலையை சிரமமின்றிச் செய்து வருகிறார். அவர் ஒரு திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் நடிகர். அவரது நீண்ட மற்றும் வெற்றிகரமான பயணத்துக்குக் காரணம் கவலையை தூக்கி எறிந்துவிட்டு எப்போதும் சிரித்துக் கொண்டும் மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டும் இருப்பதனால் எனலாம்.

‘எல்லாரையும் சிரிக்க வைக்கணும், அதான் என் நோக்கம். அதுவும் சந்தோஷமா பேசி சிரிக்கறவங்ளைப் பார்த்தா நானும் ஜாலியாகிடுவேன். ஜோக் சொன்னா ஆராய்ச்சி செய்யக் கூடாது, புரிஞ்சு அனுபவிக்கணும்’ என்று கூறுகிறார், நீண்ட காலம் ரசிகர்களை தன்னுடைய மந்திரப் பிடியில் சிக்கி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் க்ரேஸி மோகன். 

அவர் தனது ஆரம்ப காலங்களை நினைவு கூருகையில், தனது அனைத்து வெற்றிகளும் மிகவும் தற்செயலானவை என்கிறார். 'அப்போ நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சிட்டிருந்தேன், நாடகத்தை ஒரு பொழுதுபோக்காத்தான் பண்ணிட்டு இருந்தேன். என் முதல் நாடகமான 'கிரேட் பேங்க் ராபரி' ஒரு வெற்றிகரமாக அமையவே, சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர் என்ற விருதை நடிகர் கமல் ஹாசன் கைகளால் வாங்கினேன். அப்போது அவர் அனைவரின் கனவு நாயகன் ((இப்போது உலக நாயகன்) . பிரபல நடிகர் ஆனால் நானோ சாதாரணமானவன். பிற்காலத்தில் அவருடன் இணைந்து வேலை செய்வேன்னு அன்னிக்கு நினைச்சுக் கூடப் பார்க்கலை’ என்றார் கிரேஸி மோகன். கமல்ஹாசனுடன் இணைந்தது, என்றுமே மறக்க முடியாத காமெடி காவியங்களான மைக்கேல் மதன காம ராஜன், சதி லீலாவதி, அவ்வை ஷண்முகி, பஞ்சதந்திரம், மற்றும் பம்மல் கே. சம்மந்தம் ஆகிய படங்களில் பணிபுரிந்தது எல்லாமே தனக்கு கிடைத்த பேறு என்று நினைக்கிறார் க்ரேஸி மோகன்.

அவரது துவக்கம்தான் தற்செயலானதே தவிர, நகைச்சுவைத் துறையில் அவரது பங்களிப்பு மகத்தானது. நாடகம் அவருக்கு எப்போதும் விருப்பமான ஒன்று. 'ரசிகர்களின் பாராட்டுக்களும் ஆரவாரமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். மேடை நாடகத்துல ரசிகர்களின் சந்தோஷத்தை நேரடியா பார்க்கறது அலாதி திருப்தி’ என்கிறார். அவருடைய மிகப் பிரபலமான நாடகங்களில் ஒன்றான சாக்லேட் கிருஷ்ணா, இதுவரையில் 1,000 மேடைகளில் அரங்கேறியுள்ளது. அவ்வகையில் அந்த நாடகம் எனக்கு மிகவும் முக்கியமானது’ என்று அவர் கூறுகிறார் மோகன்.

மேலும் அவர் கூறுகையில், 'நாடகங்கள் குழந்தைகளைப் போலானவை, நீங்கள் அவற்றை கருப்பா சிவப்பா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக் கூடாது. சும்மா பார்த்து மகிழ வேண்டும்’ என்றார் பம்மல் கே சமந்தம் பழமொழி வசனத்தை எழுதிய இந்த கர்த்தா. 30 வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவைக எழுத்தில் கொடி கட்டிப் பறக்கும் க்ரேஸி மோகன் இத்துறையில் தான் ஜெயித்த விதத்தைப் பற்றி கூறுகையில், ‘காமெடியில் கலக்க வேண்டும் என்றால் நீங்கள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருபோதும் பின் தங்கிவிடக் கூடாது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் விஷயத்தை நேரடியாக சொல்லாமல் ஜாலியாக, பொழுதுபோக்கும் அம்சங்களுடன் கோர்த்து, சேர்த்து காமெடியாகச் சொல்வதுதான் சவால். ஒரே ரீதியில் அலுப்பூட்டும்விதமாக செய்யாமல் பரீட்சார்த்த முயற்சிகளை செய்து வருகிறேன்’ என்கிறார் கிரேஸி.

ஆனால் தமிழ் நாடகங்கள் முன்பு போல பார்வையாளர்களை ஈர்க்கவில்லை, மோகன் அதை உணர்ந்தே இருக்கிறார். 'இது ஒரு சுழற்சிதான். தற்போதைய தேக்க நிலை நிச்சயம் மாறும். மீண்டும் நாடகங்கள் கவனம் பெறும். கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசிக்கும் போது அர்ஜுனன் மட்டும் தான் அவருக்கான ஒரே பார்வையாளன். ஆனால் இன்றைய தேதியில் கிருஷ்ணருக்கு எத்தனை ரசிகர்கள் உள்ளார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

ஒரு நகைச்சுவை நடிகருக்கு ரசிகர்கள் விலா எலும்பு நோக, விழுந்து விழுந்து சிரிப்பதைப் பார்ப்பதில் தான் அதிக சந்தோஷம் கிடைக்கும். ஆனை குட்டிக்கும் அடி சறுக்கும் என்பதைப் போல தானும் சில தவறுகள் செய்திருக்கிறேன். அபூர்வ சகோதரர்கள் போன்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தில் என்னுடைய ஒரு காமெடி சீன் கவனம் பெறாமல் போய்விட்டது. அது என் தவறுதான். அப்பு (கமல் ஹாசன்) ஒரு ஆட்டோவிலிருந்து கீழே இறங்குகிறார், அப்போது அந்த ஆட்டோ ட்ரைவர், மீட்டருக்கு மேல போட்டுக் குடுங்க சார் என்று சொல்ல, அதற்கு அப்பு, 'நானே மீட்டருக்கு கீழே தானேயா' என்பார். இந்தக் காட்சியை ஷூட் செய்த போது, படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவராலும் மிகவும் ரசிகப்பட்டு சிரிப்பால் அந்த இடமே அதிர்ந்தது. ஆனால் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்களிடம் அந்தக் காட்சி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பிறகு எடிட்டர் பி. லெனின் அந்த சீன் பற்றிக் பேசுகையில், அந்த டயலாக்கை பேசும் போது அப்பு கமல் ஆட்டோவுக்கு நெருக்கமாக நின்றிருக்க வேண்டும் , சீன் கிளியராக இருந்திருக்கும் என்று கூறினார், அதன் பிறகு ரீ ஷூட் பண்ணினோம்’ என்று பழைய விஷயங்களை ஆசையுடன் அசை போட்டார் கிரேஸி மோகன்.

கமல் ஹாசனுடனான அவரது நட்பு கோலிவுட்டில் கிரேஸியின் தடம் பதிக்கக் காரணமானது என்றால் மிகையில்லை. 'சினிமா என் முழுநேர தொழிலானது அபூர்வ சகோதரர்கள் படத்துக்கு பிறகுதான். உன் எதிர்கால வளர்ச்சிக்கு நான் பொறுப்பு என கமல் அன்று என்னிடம் கூறினார்.

தற்போது தமிழ் சினிமாவில் மோகன் முன்பு போல் ஆக்டிவ்வாக செயல்படவில்லை. 'என்னுடைய காமெடி இனிமேலும் தமிழ் சினிமாவுக்கு ஏற்றதாக இருக்குமான்னு எனக்கு தெரியாது. சினிமா ரொம்ப மாறிடுச்சு.’

சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகமான சார்லி சாப்ளின் 2-வில் பணியாற்ற க்ரேஸி மோகனை படக்குழுவினர் அழைத்திருந்தனர். ஆனால் அவர் அதிலிருந்து விலகிவிட்டார். அதற்குக் காரணமாக அவர் சொல்வது, 'அந்தக் கதையை நான் எழுதியிருந்தா தான் டயலாக்குகளை சரியாக எழுத முடியும். எனக்கு அதற்கான நேரமில்லை. இயக்குனர் சக்தி சிதம்பரம் சூப்பரா பண்ணுவார்னு என்று நான் உறுதியாக நம்புகிறேன்.' என்றார்.

கமல் ஹாசன் என்றாலே நெழிந்துவிடுகிறார் க்ரேஸி. அந்தளவுக்கு தன் ஆதர்ச நாயகனிடம் மன நெருக்கம் கொண்டிருக்கிறார் அவர். ‘இன்று நான் வெற்றிகரமா செயல்படக் காரணம் கமல் தன் படங்களில் எனக்களித்த சுதந்திரம் தான். நான் ஒரு நாஸ்திகன் இல்லை, அதே சமயம் தீவிர ஆஸ்திகனும் இல்லை. நான் 'ஹாஸ்’திகன்’ என்கிறே தன் ட்ரேட் மார்க் நகைச்சுவையுடன்.

சொற்களை அடுக்கி வைத்து, லிரிக்கலாக க்ரேஸிமோகன் பேசும் காமெடிப் பேச்சு தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும் கவனத்தையும் பாராட்டுதல்களையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. அதற்குக் காரணமாக கமலையே அவர் கூறுகிறார். 'கமல் என்னை மனம் திறந்து பாராட்டுவார். நானும் அப்படித்தான் அவரை மனதார பாராட்டுவேன். இப்படி ஒருவரை ஒருவர் மதித்து வியந்தோகுவோம். மைக்கேல் மதன காம ராஜன் படத்தின் பிரபலமான காமெடி காட்சிக்காக, கமல் சாம்பாரில் ஒரு பல்லி விழ வேண்டும் என்று ஐடியா கொடுத்தார். நான் அதை கொஞ்சம் டெவலப் செய்து அந்த ‘மீன்’ வார்த்தையைப் பரிந்துரைத்தேன், அந்த வார்த்தையை அடிப்படையாகக் கொண்டே, ஒரு தொடர்ச்சியான காமெடி வார்த்தை சித்தரிப்புகளை செய்ய முடிந்தது’ என்றார் க்ரேஸி. பாதி சிவாஜி மற்றும் பாதி நாகேஷை சேர்த்தால் கமல். கமல் நடிப்பில் முழு நீள காமெடி படம் ஒன்றை பார்க்க ஆசைப்படுகிறேன்.

லாரல் - ஹார்டி மற்றும் கவுண்டமணி - செந்தில் ஆகியோரின் பெரிய ரசிகர் மோகன். 'பி.ஜி வுட்ஹவுஸ், ஓ.ஹென்றி, சோ, கி.வா. ஜகநாதன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் தேவன் ஆகிய எழுத்தாளர்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். மக்களை மகிழ்வித்த நாகேஷ் மற்றும் வாலி போன்ற கலைஞர்களை இழப்பை உணர்கிறேன். இன்று சினிமாவில் கலக்கும் சதிஷ் மற்றும் சாம்ஸ் எனக்குப் பிடித்தவர்கள். என் நாடகக் குழுவில் முன்பு இருந்தவர்கள் என்பதற்காக அவர்களை சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். உண்மையிலேயே திறமையானவர்கள் என்று குறும்பாகக் கூறினார் க்ரேஸி.

நகைச்சுவைக்கு அவருடைய பங்களிப்பு அனைவரும் அறிந்த ஒன்றுதான். பல காமெடி நடிகர்களைப் போல அவருக்கும் இன்னொரு சீரியஸ் முகம் உண்டு. அது க்ரேஸி மோகன் ஒரு ஓவியர் மற்றும் எழுத்தாளர். 'ஓவியம் வரைவதிலும் சிறுகதை எழுதுவதில் எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். இதுவரையில் நான் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளேன், தொலைக்காட்சிக்காக பல நாடகங்களை எழுதியிருக்கிறேன். திரைப்படங்களைப் பொறுத்தவரை, அருணாசலம் படத்துக்கு நான்தான் கதை வசனம் எழுதினேன் என்று பலருக்குத் தெரியாது (நிச்சயமாக, கமலிடம் உத்தரவு வாங்கிட்டுத்தான்) என்றார் சிரிப்புடன்.

க்ரேஸியிடம் சில எக்ஸ்ப்ரஸ் கேள்விகள்:

உங்கள் நாடகங்களில் முன்னணி பெண் கதாபாத்திரத்திற்கு ஏன் ஜானகி என்ற பெயர்?

அது நிச்சயமாக முன்னாள் காதலி அல்லது மனைவியின் பெயர் இல்லை. என் ஆசிரியையின் பெயர்.

மற்ற நகைச்சுவை நடிகர்கள் எப்போதாவது பொறாமைப்பட்டுள்ளீர்களா?

ஆம், பல, பல முறை.

திரைப்படங்களுக்கு எழுதும் திட்டம் உள்ளதா?

மகளிர் மட்டும் இயக்குநர் பிரம்மா மற்றும் புஷ்பா கந்தசாமி (இயக்குநர் பாலசந்திரனின் மகள்) ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

நகைச்சுவையாளராக இருப்பதில் மிகவும் எரிச்சல் தரும் விஷயம் என்ன?

ஒரு காமெடி காட்சிக்குப் பிறகு பார்வையாளர்களின் மெளனம் மற்றும் அவர்கள் சிரிக்கிறார்களா என்று தெரியாத போது ஏற்படும் உணர்வு

இன்றைய ரசிகர்களைப் பற்றிய கருத்து?

இன்றைய ரசிகர்களுக்கு சகிப்புத்தன்மை சுத்தமாக இல்லை. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் தங்களுடைய உணர்ச்சிகளை விரைவில் கொட்டிவிடுகிறார்கள்.

ஆங்கிலத்தில் - எஸ்.சுபகீர்த்தனா, மொழியாக்கம் - உமா பார்வதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com