அவரது கையால் வாங்கிய விருதும், பாராட்டும் மறக்க முடியாதவை! நடிகை தேவயானி பெருமைப்படும் அவர் யார்?

தென்னக மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்தவர்
அவரது கையால் வாங்கிய விருதும், பாராட்டும் மறக்க முடியாதவை! நடிகை தேவயானி பெருமைப்படும் அவர் யார்?

தென்னக மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்தவர். தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதும், கலைமாமணி பட்டமும் பெற்றவர். சின்னதிரையில் பல்வேறு மெகா சீரியல்களில் நடித்து பெயர் வாங்கியவர். தனக்குப் "பிடித்த பத்து' பற்றி கூறுகிறார் நடிகை தேவயானி.

தேவயானி தோட்டம்: இது எங்கு உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம். அந்தியூர் தாலுக்காவில் உள்ள சின்ன மங்களம் கிராமத்தில் உள்ள எங்கள் வீடும் தோட்டமும் தான் எனக்கு இன்று எல்லாமே. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் அங்குதான் இருப்பேன். இயற்கை அன்னையின் தாலாட்டில், சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க, இதமான காலநிலை, பசுமையான காற்று, மாசுபடாத சுற்றுசூழல், அன்பான மனிதர்கள், இங்கு என் குழந்தைகளுடன் சென்று விட்டால் எனக்கு சென்னைக்கு வரவே தோன்றாது. அமைதியான இந்த இடத்தில் இருந்தால் நம் மனம் நிம்மதியாக இருக்கும். நான் இந்த இடத்தை வாங்கியவுடன் இன்று "தேவயானி தோட்டம்' என்று பெயர் பெற்று விட்டது. 

உணவு: என் அம்மா கையால் சாப்பிடும் எந்த உணவும் எனக்கு விருப்பம்தான். குறிப்பாக ரசம் சாதம் அவர் சிறப்பாக செய்வார். பகலோ, இரவோ எந்த உணவாக இருந்தாலும் எனக்கு தயிர் சாதத்துடன் முடிக்க வேண்டும். அசைவ உணவு என்றால் பிரியாணியும், மீன் குழம்பும் இருந்தால் உணவு சீக்கிரமாக உள்ளே இறங்கும். 

கலைஞர் கருணாநிதி: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கையால் பல்வேறு விருதுகளும், பாராட்டும் பெற்று மகிழ்ந்துள்ளேன். என்னை பொருத்தவரை அவரது கையால் வாங்கிய விருதும், பாராட்டும் மறக்க முடியாதவை. எனக்கு அவை பொக்கிஷங்கள். கலைஞர் தொலைக்காட்சிக்கு முதல் மெகா சீரியல் "மஞ்சள் மகிமை', நான் நடித்து வெளியானதுதான் என்பதில் எனக்குப் பெருமை.

இடம்: "சுவிட்சர்லாந்து' (Switzerland) நான் விரும்பும் வெளிநாடுகளில் மிக முக்கியமானது. இருமுறை நான் அந்த நாட்டிற்குச் சென்று வந்திருக்கிறேன். ஒரு முறை தெலுங்குப் படத்திற்காகவும் மற்றொருமுறை தமிழ் படத்திற்காகவும் இந்த அழகான நாட்டை நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அந்த நாட்டின் இயற்கை எழிலும், சீதோஷன நிலையும், மக்களின் பழகும் தன்மையும், என் மனதில் ஒரு ஆழமான இன்ப அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நாடே படப்பிடிபிற்கான சிறந்த "லொகேஷன்' தான் என்று நான் அடித்துக் கூறுவேன். 

பாட்டி: நான் பாட்டி செல்லம் . என் அப்பாவோட அம்மா லலிதா பெட்டார் பெட் சிறப்பாக பாடுவார். அதே போன்று வாய்க்கு ருசியாக சமைக்கவும் தெரியும். என் சின்ன வயதில், எனக்கு ஒரு ரோல் மாடலாக இருந்தவர் இவர்தான். அது மட்டும் அல்லாமல் என் வாழ்க்கை சிறப்பாக அமைய இவரது பங்கு ஒரு முக்கியமானதாக அமைந்தது. 

குடும்பம்: கணவர் ராஜகுமாரன் நல்ல நண்பர், சிறந்த கணவர், திறமையான திரைப்பட இயக்குநர். இவர் இயக்கிய 'நீ வருவாய் என', மக்கள் விரும்பிய படங்களில் ஒன்று. அவர் நடித்த 'கடுகு', அவர் ஒரு சிறந்த நடிகர் என்று பறை சாற்றியது. சரியான வாய்ப்பு மட்டும் கிடைத்திருந்தால் நடிப்பிலும் இவர் தன் திறமையை காட்டியிருப்பார். எங்கள் இரு குழந்தைகள் இனியா, பிரியங்கா என் உயிர். அளவான, மகிழ்ச்சியான குடும்பம் எங்களது. 

காதல் கோட்டை: நான் இன்று வாழும் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டப் படம். அஜீத் குமார்தான் கதாநாயகனாக நடித்தார். அகத்தியன் இயக்கிய இந்த படம் வெற்றிகரமான படமாக மாறியது. இசையமைப்பாளர் தேவா இசையில் எல்லா பாடல்களுமே இனிமையாக இருந்தது. பார்க்காமல் காதல் கொள்வது என்பது புதுமையாக இருந்தது. அப்போது நல்ல படம் மட்டும் அல்ல பலரும் பல தடவை பார்த்த படமும் கூட. 

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா: அழகான நடிகை. திரைப்பட உலகத்தில் இருந்து அரசியலுக்கு சென்ற அவரது பயணம் மறக்க முடியாது. பல்வேறு இன்னல்கள், தடைகள், பெண் என்பதால் ஏற்படும் பிரச்னைகள் என எல்லாவற்றையும் பார்த்த தைரிய லட்சுமி. அவர் நடந்து வரும்போது நாம் பார்த்தால் ஒரு கம்பீரமான தோற்றத்தை கொடுக்கும். மஹாகவி பாரதி சொன்ன 'புதுமை பெண்' இவர் தானோ என்று நான் நினைப்பேன். எங்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக இருப்பவர். 

பாமி: யார் இவர் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. எங்கள் வீட்டில் இருந்த முக்கியமான உறுப்பினர் இவர்தான். நான் படப்பிடிப்பிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தால் என் காலை சுற்றியே வளைய வளைய வரும். பாமி என்று தான் நாங்கள் அழைப்போம். போமரேனியன் வகையை சேர்ந்த நாய். சுமார் 17 வருஷம் எங்களுடனேயே வாழ்ந்து, சுமார் 18 வருடங்களுக்கு முன் ஒரு நாள் இறந்த போது நான் மிகவும் உடைந்து போனேன். இன்று கூட பாமி நான் போகும் போதும், வரும் போதும் என்னுடனேயே இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது. 

கோலங்கள்: சின்னத்திரை என்னை பொருத்தவரை மிகப் பெரிய திரை என்றுதான் சொல்வேன். நாம் ஒவ்வொரு நாளும் அவரவர் வீட்டின் உள்ளேயே வந்து விடுகிறோம். தினமும் நம்மை பார்ப்பதால் அவர்கள் குடும்பத்தில் நாமும் ஒருவராகி விடுகிறோம். அன்று நான் நடித்த 'கோலங்கள்' எனக்கு இந்த நிலைமையை ஏற்படுத்தியது. நல்ல கதை, அதற்கேற்ற சரியான காட்சிகள், கோலங்கள் என் சின்னத்திரை பிரவேசத்தில் மிகவும் முக்கியமான ஒரு தொலைக்காட்சி தொடர். என் கதாபாத்திரமும் என்னால் என்றுமே மறக்க முடியாத கதாபாத்திரம். 1553 நாட்கள் நாங்கள் மக்களின் வீடுகளில் குடியிருந்தோம். இன்றும் அவர்களின் மனங்களில் வாழ்கிறோம். 
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com