ஒரே நாளில் வெளியாகும் பிகில் & கைதி: ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி!

இரு படங்களும் ஒரே நாளில் வெளியானாலும் முதல் மூன்று, நான்கு நாள்களுக்கு இரு படங்களின் வசூலும் மிக அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
ஒரே நாளில் வெளியாகும் பிகில் & கைதி: ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி!
Updated on
2 min read

பிகில் படம் எந்த நாளில் வெளியாகும் என்று ஒரே பரபரப்பாக இருந்தது. தீபாவளி அன்று அதாவது ஞாயிற்றுக்கிழமை வெளியாகுமா அல்லது இரு நாள்களுக்கு முன்பு, வெள்ளிக்கிழமை வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் நேற்று, பிகில் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 25 அன்று பிகில் படம் வெளியாகும் என தகவல் வெளியிடப்பட்டதால் ஒருவழியாக கடந்த சில நாள்களாக நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

இதேபோல கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கைதி படமும் அக்டோபர் 25 அன்று வெளியாகிறது. இரு படங்களும் ஒரே நாளில் வெளியானாலும் முதல் மூன்று, நான்கு நாள்களுக்கு இரு படங்களின் வசூலும் மிக அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

பிகில் படம் தீபாவளிக்கு முன்பு வெளியாகி, அதிக வசூலுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த முடிவைத் திரையரங்கு அதிபர்கள் பலரும் பாராட்டியுள்ளார்கள். மிகச்சரியான முடிவு, பிகில் படம் வசூலில் சாதனை படைக்கும் என்பது அவர்களுடைய கருத்தாக உள்ளது. சமூகவலைத்தளங்களில் பிகில் தயாரிப்பாளருக்குத் தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

பிகிலுடன் ஒப்பிடும்போது கைதி சிறிய படம் என்றாலும் வெள்ளியன்று வெளியாவதால் இப்படமும் முதல் மூன்று, நான்கு நாள்களுக்கு எதிர்பாராத வசூலைக் குவிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது. பிகில் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் கால அளவு 2 மணி நேரம் 58 நிமிடம் 59 நொடி என சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கைதி படத்தை இயக்கியுள்ளார். இசை - சாம் சிஎஸ். இந்தப் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com