நந்தா, பிதாமகன் என இரு படங்களில் இணைந்த சூர்யா - பாலா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.
சுதா கொங்குரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. மேலும், விஸ்வாசம் பட இயக்குநர் சிவாவின் அடுத்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது.
இந்நிலையில் பாலாவின் படத்தில் சூர்யா மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாச்சியார் படத்துக்கு அடுத்ததாக அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கை பாலா இயக்கினார். ஆனால், வர்மா என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தைக் கைவிடுவதாகத் தயாரிப்பாளர்கள் அறிவித்தார்கள். இதன்பிறகு வேறொரு இயக்குநரைக் கொண்டு அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூர்யா நடிக்கும் படத்தை பாலா இயக்கத் தயாராகிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் இணையும் படம் ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.