'உங்களுக்கு என்ன உடை பிடிக்குமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்'

தில்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வால், தனது 15-ஆவது வயதில் ஆசிட் வீச்சுக்கு ஆளானார்.
'உங்களுக்கு என்ன உடை பிடிக்குமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்'
Updated on
3 min read

தில்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வால், தனது 15-ஆவது வயதில் ஆசிட் வீச்சுக்கு ஆளானார். அவரை ஒரு தலையாகக் காதலித்த ஒருவனின் காதலை லட்சுமி ஏற்காததால் லட்சுமி முகத்தில் அவன் ஆசிட் வீசினான். ஆனாலும் நம்பிக்கையை இழக்காத லட்சுமி, அந்த நபரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தந்தார். அமெரிக்க அதிபராக இருந்த போது ஓபாமா அவரை அழைத்துப் பாராட்டினார். 

சில ஆண்டுகளுக்குப் பிறகு அசோக் தீட்சித் என்பவர் லட்சுமியைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை உள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார் லட்சுமி. இவரது வாழ்க்கையை இயக்குநரும் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார் படமாக எடுக்கிறார். இதில் லட்சுமி வேடத்தில் நடிக்க தீபிகா படுகோனே ஒப்பந்தமாகியுள்ளார். ஆசிட் வீச்சுக்கு ஆளான லெட்சுமியின் முகத் தோற்றத்தை தீபிகாவுக்கு கொண்டு வருவதற்கான பிரத்யேக மேக்அப் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து இதற்கான ஒப்பனை கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

----------------

உலக அழகியாக தேர்வுப் பின் தமிழில் "ரட்சகன்' படத்தில் அறிமுகமானார் சுஷ்மிதா சென். அதன் பின் பாலிவுட்டில் கவனம் செலுத்திய அவர், மீண்டும் தமிழுக்கு வந்தார்.  ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த "முதல்வன்' படத்தில், "ஷக்கலக்க பேபி... ஷக்கலக்க பேபி...' பாடலுக்காக கவர்ச்சி நடனம் ஆடினார். தற்போது 43 வயது ஆகும் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 

எனினும் ரெனீ, அலிஷா ஆகிய பெண் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சில மாதங்களாக பாலிவுட் பிரபலம் ரோஹ்மேன் ஷாவல் என்பவரை அவர் காதலித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.  இரண்டு பேரும் அவ்வப்போது பாலிவுட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வருகின்றனர்.  இதையடுத்து அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. சமீபத்தில் தனது காதலை ரோஹ்மேன் சொன்ன மறுநிமிடம் அதை சுஷ்மிதா சென்னும்  ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இந்த ஜோடி இல்லற வாழ்வில் இணைய முடிவு செய்துள்ளனர். சுஷ்மிதா சென் தத்தெடுத்த பெண் குழந்தைகளுக்கும் ரோஹ்மேனை பிடித்துவிட்ட காரணத்தால், அவர்கள் சுஷ்மிதா சென், ரோஹ்மேன் காதல் திருமணத்துக்கு முழு சம்மதம் தெரிவித்துள்ளனர். 

----------------

மர்ஷியல், கவர்ச்சி என நடித்த வந்த கதாநாயகிகள் ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கின்றனர். கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதும் இதற்கு முக்கிய காரணம். தற்போது இந்த வரிசையில் இணைந்திருப்பவர் ஹன்சிகா.  
சமீபத்தில் "மஹா' படத்துக்காக சாமியார் வேடத்தில் கஞ்சா புகைப்பது போன்று படத்தின் போஸ்டர் வெளியாகியிருந்தது.  இது சர்ச்சையானது. அவர் மீது போலீசில் புகார் அளித்திருப்பதுடன், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் யு.ஆர்.ஜமீல் கூறும்போது...""எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இந்த படம் எடுக்கப்படவில்லை'' என்றார். இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு காட்சியில் ஹன்சிகா முஸ்லிம் பெண் போன்று தொழுகை செய்வதுபோல் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதுடன் அதன் பின்னணியில் மசூதி, ஹன்சிகா தன்னை தானே கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதுவும் சர்ச்சையாகிவிடுமோ என்பதால் முன்னதாகவே இயக்குநர் ஜமீல் அளித்துள்ள விளக்கத்தில், ""இப்படத்தின் ஒரு சில காட்சிகளில் ஹன்சிகா முஸ்லிம் பெண்ணாக நடிக்கிறார். எனவே இப்படியொரு காட்சி படமாக்கப்பட்டது. மற்றபடி எந்த மத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை''  என கூறி உள்ளார்.  

----------------

விஸ்வாசம்' படத்துக்குப் பின் "சதுரங்க வேட்டை', "தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு "தல 59' என்று குறிப்பிடப்படுகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடித்து பாலிவுட்டில் வெளியான "பிங்க்' ஹிந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  யுவன் ஷங்கர்ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். அடுத்த  கட்டமாக படத்தின் கதாநாயகிகள் தேர்வு நடந்து வருகிறது. கதைப்படி இதில் மூன்று கதாநாயகிகள் என்று சொல்லப்படுகிறது. இதில் ஒருவராக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.

பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் மகள்தான் இந்தக் கல்யாணி. இன்னொரு கதாநாயகி வேடத்துக்கு ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியுள்ளார். "விக்ரம் வேதா' படத்தில் நடித்த இவர் "ரிச்சி', "இவன் தந்திரன்', "காற்று வெளியிடை' படங்களிலும் நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர், அந்த மொழி சினிமாக்களில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையில் அஜித்துக்கு ஜோடியாக இந்தப் படத்துக்கு தேர்வாகியுள்ளார். 3-ஆவது கதாநாயகியாக நஸ்ரியா தேர்வாகியுள்ளார். திருமணத்துக்குப் பின் தமிழில் அவர் நடிக்கும் முதல் படம் இது.  

----------------

சினிமா  தவிர்த்து குழந்தைகள் நலன், கிராமப்புற சுற்றுச் சூழல் தன் நேரத்தை செலவிட்டு வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் "டிசையர் சொசைட்டி' அமைப்பிற்கு  கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சமந்தா சென்றார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்துக்கு பதிலாக கிறிஸ்துமஸ் தேவதைபோன்று சென்றார். அங்குள்ள குழந்தைகளுக்கு  இனிப்பு வழங்கி, அவர்களுடன் இணைந்து நடனம் ஆடி மகிழ்ந்தார். முன்னதாக அனைவரையும் ஜவுளி கடைக்கு  அழைத்து சென்று, 'உங்களுக்கு என்ன உடை பிடிக்குமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார். சந்தோஷத்தில் குதித்த குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான உடைகளைத் தேர்வு செய்தனர். இதுகுறித்து சமந்தா கூறும்போது..."தொண்டு என்பது பரிதாபத்தால் செய்யப்படுவது அல்ல. அது அன்பால் செய்யப்படுவது. இன்றைக்குத்தான் நான் அதிகமாக அன்பை பெற்றேன், பகிர்ந்தேன். டிசையர் அமைப்பு எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கிறது. இன்றைக்கு ஒரு நாள் மட்டுமல்லாமல் இந்த ஆண்டு முழுவதும் என்னுடைய பணி இவர்களுக்காக செய்ய காத்திருக்கிறேன். கிறிஸ்துமஸ் தாத்தா வருகைக்காக காத்திருக்காமல் அவராக நாமே ஆகி பரிசுகள் வழங்கிடுவோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com