செம்பரம்பாக்கம் ஏரி: தமிழக முதல்வருக்கு மூத்த நடிகர் விஜயகுமார் கோரிக்கை

முன்னேற்பாடாக ஏரியில்‌ உள்ள தண்ணீரை அளவுடன்‌ திறந்துவிட உத்தரவு பிறப்பித்தால்...
செம்பரம்பாக்கம் ஏரி: தமிழக முதல்வருக்கு மூத்த நடிகர் விஜயகுமார் கோரிக்கை

செம்பரம்பாக்கம்‌ ஏரியில்‌ நீர்‌ மட்டம்‌ 21 அடியைத்‌ தாண்டி உயர்ந்து கொண்டிருப்பதால் 2015-ம்‌ ஆண்டைப்‌ போல கரையோரப் பகுதிகளில் பெரும்‌ பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மூத்த நடிகர் விஜயகுமார் கோரிக்கை வைத்துள்ளார். 

பூந்தமல்லி அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மக்களின் மொத்த குடிநீா்த் தேவையில் 20 சதவீதம் அளவுக்கு பூா்த்தி செய்கிறது. சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீா் அடையாற்றில் திறந்துவிடப்பட்டது. அதனால் சென்னையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பலா் உயிரிழந்தனா்; லட்சக்கணக்கான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு அதிக பொருள்சேதமும் ஏற்பட்டது. இந்த பெரு வெள்ளத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு தண்ணீா் திறந்து விட்டது தான் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

கடந்த சில நாள்களாக திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 21 அடி வரை தண்ணீா் நிரம்பியுள்ளது. இதன் அதிகபட்ச நீா்மட்டம் 24 அடி. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் ஏரி விரைவில் நிரம்பும் என்றும் இதனால் 2015-இல் ஏற்பட்டது போன்ற வெள்ள பாதிப்பு தற்போது ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைதங்களில் வதந்தி பரவியது.

பொதுப் பணித் துறையின் தலைமை பொறியாளர்  அசோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செம்பரம்பாக்கம் ஏரி தற்போதைக்கு திறக்கப்படாது. அதே வேளையில், ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு பிறகுதான்  செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என்றார். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மூத்த நடிகர் விஜயகுமார், தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல்‌, கலைமகள்‌ நகர்‌ பகுதியில்‌ நான்‌ பல வருடங்களாகக் குடியிருந்து வருகிறேன்‌. கடந்த 2015-ம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌, செம்பரம்பாக்கம்‌ ஏரி திறக்கப்பட்ட பொழுது, எங்களது பகுதியிலிருந்து அடையாறு வரைக்கும்‌ பல ஆயிரம்‌ வீடுகள்‌ சேதமடைந்தன. உயிர்ச்‌ சேதமும்‌ ஏற்பட்டது.

இந்த ஆண்டும்‌ செம்பரம்பாக்கம்‌ ஏரியில்‌ நீர்‌ மட்டம்‌ 21 அடியைத்‌ தாண்டி உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நீடிக்குமேயானால்‌ 2015-ம்‌ ஆண்டைப்‌ போல பெரும்‌ பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்‌.

ஆகவே, தாங்கள்‌ கவனத்தில்‌ இதைக்‌ கொண்டு, முன்னேற்பாடாக ஏரியில்‌ உள்ள தண்ணீரை அளவுடன்‌ திறந்துவிட உத்தரவு பிறப்பித்தால்‌, கரையோரம்‌ இருப்பவர்களுக்கு உயிர்‌ மற்றும்‌ பொருள்‌ சேதம்‌ ஏற்படாமல்‌ தடுக்க இயலும்‌. எனவே தயவுகூர்ந்து இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக்‌கொள்கிறேன்‌.

தங்களால்‌ இதைச் செய்ய இயலும்‌ என நான்‌ ஒருமனதாக நம்புகிறேன்‌. கரோனா என்னும் கொடுநோயிலிருந்து நம்‌ தமிழக மக்களை எவ்வண்ணம்‌ காப்பாற்றிக்‌ கொண்டிருக்கிறீர்களோ, அவ்வண்ணமே கரையோரம்‌ வசிக்கும்‌ மக்களையும்‌ காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌ என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com