நடிகை சித்ரா தற்கொலை: காவல்துறையில் தந்தை புகார்

சித்ராவின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவருடைய தந்தை காமராஜ், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 
படம் - instagram.com/chithuvj/
படம் - instagram.com/chithuvj/

நடிகை சித்ராவின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவருடைய தந்தை காமராஜ், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

சின்னத்திரையின் பிரபல நடிகையும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சித்ரா, சென்னையில் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

2003-ல் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகக் கவனம் பெற்ற சித்ரா, ஜெயா, ஜீ தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார். சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். 2018 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேமந்த் என்பவருடன் சித்ராவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் ஜனவரி மாதம் திருமணம் செய்ய இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சித்ராவில் உடல் காலை 7 மணிக்குக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்குப் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. பிறகு அவருடைய உடல் குடும்பத்தினரிடம் வழங்கப்படும். சித்ராவின் தந்தை காமராஜ், காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஹேமந்த் மற்றும் சித்ராவின் குடும்பத்தினரிடம் நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். அதில், சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் இரு மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அக்டோபர் 19 அன்று இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதால் தற்போது சித்ராவின் மரணம் குறித்து முகப்பேர் மேற்கு கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார். சித்ராவின் குடும்பத்தினரிடம் தற்கொலை குறித்து விரிவாக விசாரணை நடத்தி அவர் அறிக்கை தாக்கல் செய்வார்.

இந்நிலையில் நடிகை சித்ராவின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவருடைய தந்தை காமராஜ், நசரத்பேட்டை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சித்ராவும் ஹேமந்தும் தங்கிய விடுதி ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ய காவலர்கள் முடிவெடுத்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com