Enable Javscript for better performance
ரசிகர்கள் அள்ளிக்கொண்ட சிறந்த காதல் படங்கள்!- Dinamani

சுடச்சுட

  
  96movie_poster33xx11

   

  காதல் இல்லாத தமிழ்ப் படங்கள் இருக்க முடியுமா? சமீபத்தில் வெளிவந்த கைதி போல அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில படங்கள் இருக்கலாம். ஆனால், தமிழ் சினிமா என்றாலே காதலை மையமாக வைத்துத்தான் கதை நகரும். அந்தக் காதல் கடைசியில் சுபமாக முடியலாம். அல்லது சோகமாக நம்மைக் கண்ணீருடன் வெளியே அனுப்பலாம். ஆனால் காதல் நிச்சயம் இருக்கும். 

  சமீபகாலமாக, 1990களுக்குப் பிறகு நம் ரசிகர்கள் கொண்டாடிய காதல் படங்கள் இவை. 

  1. அலைபாயுதே

  காதலர்கள் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்வது என்பது நம் சமூகத்தில் பல வருடங்களாக நடந்து வருவதுதான். ஆனால் அப்படி ஓடிப் போய் திருமணம் செய்தவர்கள் மீண்டும் வீட்டுக்கு வர மாட்டார்கள். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து அப்படியே இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்துவிடுவார்கள். குழந்தைகள் பிறந்த பிறகு பிரிந்த குடும்பங்கள் இணைந்துவிடும். 

  ஆனால் ரகசியமாகத் திருமணம் செய்தவர்கள், வீட்டுக்கு வந்து பழையபடி தங்கள் பெற்றோர்களுடன் வாழத் தொடங்கினால் என்னென்ன சிக்கல்கள் உருவாகும், அந்தக் காதல் ஜோடி திருமணத்துக்குப் பிறகு எப்படி நடந்துகொள்ளும்  என்பதைக் காதல் சொட்டச் சொட்டக் கூறிய படம் தான் அலைபாயுதே.

  இவர்களா இந்தக் காரியத்தைச் செய்தார்கள் என்று ஆச்சர்யப்படும் அளவுக்குப் பாவமான முகத்தோற்றங்களைக் கொண்ட மாதவன் - ஷாலினி ஆகிய இருவரும் இந்தக் கதைக்குப் பொருத்தமாக அமைந்தார்கள். ரகசியக் காதலைக் காதலர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் எதிர்கொள்ளும் விதத்தை வெளிப்படையாகச் சொல்லியிருந்தார் மணி ரத்னம். திருமணத்துக்குப் பிறகு வாழத் தொடங்கும் காதல் ஜோடிக்கு வாழ்க்கை எப்படி அமைகிறது என்கிற இன்னொரு பக்கத்தையும் மணி ரத்னம் காட்டத் தவறவில்லை. 

  கதையில் உள்ள நுரை பொங்கும் காதலே போதும், பாடல்கள் தேவையில்லை என்று முடிவெடுத்த மணி ரத்னம் பிறகு மனம் மாறி பாடல்களைக் காட்சிகளின் இடையில் சொறுகியுள்ளார். அது மேலும் நல்ல முடிவாக அமைந்து, அற்புதமான பாடல்கள் ரசிகர்களுக்குக் கிடைத்தன. சிநேகிதனே பாடல் படத்துக்கு நல்ல விளம்பரமாக அமைந்தது. காதல் சடுகுடு பாடல் படம் வெளிவந்த பிறகு ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டது. பச்சை நிறமே பாடலில் மணி ரத்னம், பிசி ஸ்ரீராம், வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான் என அனைவரும் தங்களுடைய கற்பனைத் திறனை வெளிப்படுத்தினார்கள்.

  மணி ரத்னம் இப்படியொரு படம் எடுத்து இளைஞர்களைக் கெடுக்கலாமா என்கிற விமரிசனங்களும் எழாமல் இல்லை. ஆனால், அரவிந்த் கேஜரிவாலுக்கு அமோக ஆதரவளித்த தில்லி மக்கள் போல காதல் படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இளைஞர்கள் இப்படத்தைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். 


  2. ஆட்டோகிராப்

  ஓர் ஆணுக்கு ஒவ்வொரு பருவத்திலும் வரும் காதலை உயிரோட்டமாகச் சொன்ன படம்.

  தன் திருமணத்துக்கு ஊராரை அழைக்கச் செல்லும் சேரன், தன்னுடைய பழைய காதல்களை நினைத்துப் பார்க்கிறார். அதுதொடர்பான காட்சிகள் கவித்துவமாக அமைந்தது ரசிகர்கள் செய்த பாக்கியம். காதல் மட்டுமல்லாமல் நகரத்தில் ஓர் ஆணுக்குக் கிடைக்கும் பெண் நட்பையும் அழகாகச் சொன்ன இந்தப் படம் கடைசியில் பெற்றோர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துடன் முடிவடையும். சேரன் காதலித்த பெண்கள் அவருடைய திருமண மேடைக்கு வந்து வாழ்த்து சொல்லும் காட்சி ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தை அளித்தன. 

  காதல் படங்களை மேலும் ரசிக்க வைக்கப் பாடல்கள் முக்கியக் காரணமாக அமைந்துவிடும். இந்தப் படத்தில் காதல் பாடல்களை விடவும் ஞாபகம் வருதே, ஒவ்வொரு பூக்களுமே என காதலுக்குத் தொடர்பில்லாத பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுதான் அதிசயம்.  


  3. சொல்லாமலே!

  இயக்குநர் சசியின் திறமையை வெளிப்படுத்திய படம். காதலுக்காகப் பொய் சொன்ன காதலன், காதலியை ஏமாற்றிய குற்றத்துக்காகத் தனக்குத் தானே தண்டனை அளித்துக்கொள்வது தான் படத்தின் இறுதிக்கட்டக் காட்சி.

  பேனரில் படங்கள் வரையும் லிவிங்ஸ்டன், தனக்கு மேலே பறந்த விமானத்திலிருந்து இறங்கிய பெண்ணைப் பொய் சொல்லிக் காதலிப்பதை உணர்வுபூர்வமாகவும் சுவாரசியமாகவும் இயக்கியிருந்தார் சசி. லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்தது படத்துக்குப் புதிய சுவாரசியத்தை அளித்தது.

  படம் தரமாக இருந்தால் எப்படியிருந்தாலும் வெற்றி பெறும் என்பதற்கு இந்தப் படமே உதாரணம். சோகமான கிளைமாக்ஸ் ரசிகர்களை உலுக்கியதோடு பரபரப்பாகவும் பேசப்பட்டது. 

  4. 96

  இன்னொரு முடிவுறாக் காதல்.

  பள்ளிப் பருவக் காதல் என்றாலே சிலிர்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தப் பள்ளிப் பருவக் காதலை எண்ணிக்கொண்டே ஒருவன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்துகொண்டிருந்தால்? அந்த விநோத வாழ்க்கை, திருமணமாகி குழந்தை உள்ள அவன் காதலிக்குத் தெரிய வந்தால்? இருவரும் ஓரிரவு முழுக்க ஒன்றாக அருகருகே இருந்தால்? தன் காதலன் தன்னை எப்படியெல்லாம் தவறவிட்டான் என்பதை அவள் அறிய நேர்ந்தால்? இந்த அத்தனை கேள்விகளுக்குமான விடை தான் 96 படம்.

  இந்தக் காலத்தில் இப்படியொருவன் இருக்க முடியுமா என்கிற ரசிகர்களின் கேள்வியே இப்படத்துக்கு ஒரு தனித்துவத்தை, காவிய அந்தஸ்தை அளித்துவிடுகிறது. 

  ஆட்டோகிராப் படம் போல இந்தப் படத்திலும் பள்ளிப் பருவக் காதல், ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளியது. பிறகு விஜய் சேதுபதி வாழ்நாள் முழுக்க அக்காதலையே எண்ணி வருத்திக்கொள்வதை நேரில் கண்டு ஆதங்கமும் வேதனையையும் த்ரிஷா அடைவதை நிதானமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ப்ரேம் குமார். படத்தில் உள்ள உருக்கமான காட்சிகள் இந்தக்கால சினிமாவுக்கு முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும் ரசிகர்கள் அதை முழு மனத்தோடு ஏற்றுக்கொண்டார்கள். காதலே காதலே பாடல் படத்தை அப்படியே மேலே கொண்டு நிறுத்தியது.

  இப்படியொரு படம் இனியும் வராது, வந்தாலும் 96-க்கு நிகராகாது என்பதுதான் ரசிகர்களின் தீர்ப்பாக உள்ளது.

  5. பூவே உனக்காக

  சொல்லாத காதல். அதேசமயம் தான் விரும்பிய காதலியின் நலனுக்காக, காதலியின் முகத்தில் சந்தோஷத்தைக் காண்பதற்காக, தன்னையே வருத்திக்கொள்ளும் கதாநாயகன் விஜய். பிரிந்த இரு குடும்பங்களைச் சேர்த்துவைத்துக் கடைசியில் குட் பை சொல்லி, காதலை இன்னும் தோளில் சுமந்தபடி, காதலியிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் கதாபாத்திரம். 

  சரியான திரைக்கதையுடன் விக்ரமன் இயக்கிய இந்தப் படம் விஜய்க்கு முதல் பெரிய வெற்றியை அளித்தது. கடைசிக் காட்சியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் தவித்தார்கள். நீங்க ஒருத்தியை லவ் பண்ணீங்களா... என்று அந்தக் காட்சியில் விஜய்யிடம் காதலி கேட்கும்போது ரசிகர்களின் ஆதங்கத்துக்கு அளவே இல்லை. ஆனால், கடைசிவரை காதலுக்காகத் தியாகம் செய்யும் விஜய் கதாபாத்திரத்தின் புனிதம் கெடாததுதான் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

  6. இதயம்

  இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல படங்களின் காதல் தோல்வியில் முடிவடைந்தவை தான். அந்த உணர்வு ரசிகர்களை என்னமோ செய்து படத்துக்கு வெற்றியைத் தேடித் தந்துவிடுகிறது. இதயமும் அப்படித்தான்.

  90ஸ் கிட்ஸ் முதல்முதலில் ரசித்த காதல் படம். முரளியின் சொல்லாத காதல், ஹீராவின் வசீகரமான அழகு, இளையராஜாவின் மயக்கும் பாடல்கள், மருத்துவக் கல்லூரியின் பின்னணியில் அமைந்த காட்சிகள், பிரபுதேவாவின் நடனம் என இளைஞர்கள் ரசிக்க இந்தப் படத்தில் ஏராளமான விஷயங்கள் இருந்தன. 

  காதலைச் சொல்ல முடியாமல் தொண்டைக்குள் விழுங்கும் முரளியின் கதாபாத்திரத்தில் தங்களையே கண்டார்கள் இளைஞர்கள். இதனால் கதிரின் முதல் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது. இறுதிக்காட்சியில் முரளியும் ஹீராவும் சேர்ந்துவிடமாட்டார்களா என்று தவிக்க வைத்தது படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.

  7. ஓ காதல் கண்மணி

  அலை பாயுதே மூலம் காதலர்களுக்குச் சில யோசனைகளை வழங்கிய மணி ரத்னம், இன்னொரு வாழ்க்கைமுறையை அறிமுகப்படுத்திய படம்தான் - ஓ காதல் கண்மணி என்கிற ஓகே கண்மணி.

  லிவ் இன் உறவு என்கிற தாலி கட்டாமல், மோதிரம் மாற்றாமல் எந்த விதிமுறைகளும் அடங்காமல் தங்கள் விருப்பத்துக்கு இணைந்து வாழ்கிற காதலர்களின் வாழ்க்கை தான் இந்தப் படம். அதேசமயம் இறுதிக்காட்சியில் இந்தக் காதலர்கள் முறையாகத் திருமணம் செய்வதோடு படத்தை முடித்துள்ளார் மணி ரத்னம்.

  துல்கர் சல்மானும் நித்யா மேனனும் சரியான இணையாக, இளமைத் துள்ளலை வழங்கினார்கள். ரஹ்மானின் பாடல்களும் கதைக்குரிய வேகத்தையும் நவீனத்தையும் அளித்தது. காதலர்கள் ஒரு பக்கம் லிவ் இன் உறவில் இருக்க, இன்னொரு பக்கம் வயதான தம்பதியர் மூலம் திருமண வாழ்க்கை முறையையும் காண்பித்து கலவையான உணர்வுகளைக் கதையில் இணைத்திருந்தார் மணி ரத்னம்.

  கதை மும்பையில் நடப்பது போலக் காண்பித்ததால் பெரிய விமரிசனங்களில் மணி ரத்னம் மாட்டிக்கொள்ளவில்லை. காதல் படம் என்றால் இளமைத் துள்ளலுடன் இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்தப் படம் அமைந்தது. 

  8. 7 ஜி ரெயின்போ காலனி

  காதல் கொண்டேன் வெற்றிக்குப் பிறகு புதிய கதாநாயகனை வைத்து இயக்குநர் செல்வராகவன் இயக்கிய படம்.

  திருமணத்தில் முடியாத இந்தக் காதலை முடிந்தவரை இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகப் படமாக்கியிருந்தார் செல்வராகவன். ஒரு பெண் எவ்வளவு மட்டம் தட்டினாலும் தொடர்ந்து முயன்றால் அந்தக் காதலில் ஜெயிக்க முடியும், அந்தக் காதலியே உனக்குப் பெரிய ஊக்கமாக இருக்க முடியும் என்கிற அறிவுரையை அள்ளி வழங்கினார். இப்போது இந்தப் படம் வெளியாகியிருந்தால் சோனியா அகர்வாலைத் தொடர்ந்து ஸ்டாக்கிங் செய்யும் காதலனுக்குப் பெரிய கண்டனங்கள் எழுந்திருக்கும். அன்றைக்கு அது பெரிய விஷயமாகப் பேசாதது படத்தின் அதிர்ஷ்டம்.

  தான் இறந்தபிறகும் நினைவுகளாகத் தொடர்ந்து காதலையும் காதலனையும் காதலி வாழவைத்துக்கொண்டிருப்பாள் என்கிற இறுதிக்காட்சியில் ரசிகர்கள் மிகவும் உருகிப் போனார்கள். நினைத்து நினைத்துப் பார்த்தேன் பாடல் யுவன் சங்கர் ராஜா - நா. முத்துக்குமார் கூட்டணியின் சிறந்த பாடலாக அமைந்தது மட்டுமல்லாமல் படத்துக்கும் பலம் சேர்த்தது.

  காதல் காட்சிகளைத் தவிரவும் அப்பா - மகன்  உறவில் உள்ள மோதல்களையும் அதன் பின்னே ஒளிந்திருக்கும் அழகான பாசத்தையும் வெளிப்படுத்த செல்வராகவன் தவறவில்லை. 

  ஒரு காதல் படம் பார்த்துத் திரையரங்கை விட்டு வெளியே வந்தபிறகும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவேண்டும். அதற்கு ஓர் உதாரணம் - 7 ஜி.

  9. காதலுக்கு மரியாதை

  காதலிப்பவர்கள் பெற்றோர்களுக்கு மரியாதை அளித்தால் அந்தக் காதலுக்குப் பெற்றோர்களும் பதில் மரியாதை தருவார்கள் என்பதை அழகாகச் சொன்ன படம்.

  தமிழில் முதலில் எடுக்க வேண்டிய இந்தப் படம் பிறகு விஜய் கால்ஷீட் இல்லாததால் முதலில் மலையாளத்தில் எடுக்கப்பட்டது. அங்கு வெற்றி பெற்றதால் காட்சிகளைப் பெரிதளவில் மாற்றாமல் அதேபோலத் தமிழிலும் எடுக்கப்பட்டது. 

  இளையராஜாவின் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையுடன் விஜய் - ஷாலினி காதல் ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டது. ஷாலினியின் குடும்பத்தை எதிர்த்து விஜய்யும் ஷாலினியும் காதலித்தாலும் பிறகு இரு குடும்பங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து பிரிந்தபோது அனுதாப அலை திரையரங்கில் ஏகத்துக்கும் அடித்தது. ஒரு த்ரில்லர் படத்தின் கிளைமாக்ஸ் போல கடைசிக்காட்சியில் ஷாலினியின் அம்மா என்ன சொல்வாரோ என்று ரசிகர்கள் பரிதவித்த அந்தத் தருணங்களை யாரால் மறக்க முடியும்?

  படம் பார்த்து முடித்தபிறகு ரசிகர்களுக்கு ஒரு மனநிறைவு ஏற்பட்டது இல்லையா, அதுதான் இந்தப் படத்தின் சாதனை. 

  10. காதல் கோட்டை

  இந்தப் படத்தின் முதல் காட்சியைப் பார்த்தவர்களை எண்ணிப் பாருங்கள். கதை எந்தத் திசையில் செல்லும், அஜித்தும் தேவயானியும் எப்படித்தான் சேர்வார்கள் என்பதெல்லாம் அவர்களால் துளி கூட யூகித்திருக்க முடியாது அல்லவா?

  தமிழினின் மிகச்சிறந்த காதல் படங்கள் என்று யார் எத்தனை பட்டியல் போட்டாலும் அத்தனையிலும் இடம்பிடிக்கக் கூடிய படம் இது. காதலர்கள் நேரில் பார்க்காமல் கடிதங்களில் வெளிப்பட்ட சரியான புரிதல்கள் மூலமே காதலிக்க முடியும் என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருந்தார் இயக்குநர் அகத்தியன். மேலும் முதல் பாதியில் கதையை நிதானமாகக் கொண்டு சென்று இரண்டாம் பாதியில் பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

  இந்தப் படம் வெளிவந்தபிறகு இதே பாணியில் சில படங்கள் வெளிவந்தன. எனினும் மக்கள் மனத்தில் கல்வெட்டு போல பதிந்துவிட்டது காதல் கோட்டை. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai