ரஜினியின் இயல்பான நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வந்த தம்பிக்கு எந்த ஊரு

நடிகர் ரஜினிகாந்த்தின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவான தம்பிக்கு எந்த ஊரு படம் குறித்து ஒரு பார்வை
ரஜினியின் இயல்பான நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வந்த தம்பிக்கு எந்த ஊரு

"என்னை நான் தேடி தேடி, உன்னிடம் கண்டுகொண்டேன் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப,  நடிகர் ரஜினிகாந்த்துக்குள் இருந்த நகைச்சுவை உணர்வவை கண்டறிந்து, அவரை ஒரு ஜனரஞ்சக நாயகனாக்கி, அனைத்து தரப்பு  ரசிகர்களிடமும் கொண்ட சேர்த்த திரைப்படம் தான் தம்பிக்கு எந்த ஊரு. குறிப்பாக இந்த திரைப்படத்தில் பாம்புடன் ரஜினிகாந்த்  நடத்தும் நகைச்சுவை களோபரம், 80-ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத நாஸ்டாலஜிக் மெமரீஸ். தில்லுமுல்லு திரைப்படத்துக்கு பின் ரஜினிகாந்த் நடித்த நகைச்சுவை திரைப்படம் இதுதான்.

1980-களின் தொடக்கத்தில், தனது வித்தியாசமான ஸ்டைல் மற்றும்  ஆக்சன் பாணி திரைப்படங்கள் மூலம்  ரசிகர்களின் கவனம் ஈர்த்து வந்த ரஜினிகாந்த் நடிப்பில் 1983-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த தங்கமகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து,  1984-ம் ஆண்டில் மகேந்திரனின் இயக்கத்தில் கை கொடுக்கும் கை, கே.நட்ராஜ் இயக்கத்தில் 6 நாளில் நடித்து கொடுத்த அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட குடும்ப பாங்கான கதைகளில் நடித்து, பேஃமிலி ஆடியன்ஸின் ஆதரவை பெற்றிருந்தார் ரஜினிகாந்த். 

இந்த இரண்டு படங்களையடுத்து, அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரீலிசானது தம்பிக்கு எந்த ஊரு திரைப்படம். நடிகர் ரஜினிகாந்தின் அதிகமான திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருந்த பஞ்சு அருணாச்சலம் தான், இந்த படத்துக்கும் கதை, வசனம் எழுதி தயாரித்திருந்தார். இயக்குநர் ராஜசேகர் படத்தை இயக்கியிருந்தார்.

கதை: பணக்கார தந்தையான சந்திரசேகரின் (வி.எஸ்.ராகவன்) ஒரே மகன் பாலு (ரஜினிகாந்த்). பணத்தின் அருமை தெரியாமல் ஊதாரித்தனமாக சுற்றித்திரிகிறார்.  தனது முன் கோபத்தால் தேவையில்லாமல் மற்றவர்கள் பிரச்னையில் பாலு தலையிடுவதை எண்ணி கவலைப்படும் அவரது தந்தை சந்திரசேகர் பாலுவுக்கு ஒரு வித்தியாசமான சவாலை முன்வைக்கிறார். அதாவது கிராமத்தில் இருக்கும் தனது நண்பன் கங்காதரனிடம் (செந்தாமரை) சென்று,  ஓராண்டு வேலை செய்ய வேண்டும், எக்காரணம் கொண்டும் தனது தந்தை தான் சந்திரசேகர் என்ற உண்மையை கங்காதரன் உள்பட யாரிடமும் பாலு சொல்லக்கூடாது. தந்தையின் சவாலை ஏற்று கிராமத்துக்கு செல்லும் பாலு, கங்காதரனின் வீட்டில் தங்கியிருந்து வேலையைக் கற்றுக் கொள்வதோடு, கிராமத்து வாழ்க்கையை வாழ பழகுகிறார். இந்த சமயத்தில் அந்த கிராமத்தின் பணக்கார பெண்ணான சுமதியுடன் (மாதவி) ஏற்படும் அடுத்தடுத்த மோதல்கள் இருவரையும் காதல் கொள்ளச் செய்கிறது.

இதனிடையே பாலுவை கங்காதரனின் மகளான சுலோக்ஷ்னாவும் காதலிக்கிறாள். ஆனால் பாலு சுமதியை காதலிப்பது தெரிந்து கொண்ட சுலோக்ஷ்னா தனது காதலை கைவிடுகிறார். இதனிடையே பாலுவின் மீதான காதலால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை சுமதி நிறுத்தி விடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த வில்லன் கோஷ்டிகளுடன் ஏற்படும் மோதலில் வென்று காதலி சுமதியின் கரம்பிடிக்கும் பாலு, பணக்காரர் சந்திரசேகரின் ஒரே மகன் என்பது இறுதியில் அனைவருக்கும் தெரிய வருகிறது.

இந்த திரைப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலில் வரும்  காதலின் தீபம் ஒன்று பாடல், ஒரு காலத்தில் காதலர்களின் தேசிய கீதமாக இருந்ததை யாரும் மறுப்பதற்கு இல்லை. அதிலும் சிறப்பு என்னவென்றால், இந்த பாடலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்த இளையராஜா, விசில் மூலம் தொலைப்பேசி வழியாக  பாடலை பாடிக் காட்ட, அதனை உட்கிரகித்து உயிரூட்டி பாடியிருப்பார் எஸ்.பி.பி. கூடுதல் சிறப்பு என்னவென்றால், அந்த பாடலின் பின்னணியில் இசைக்கப்படும் வயலின் உள்ளிட்ட ஸ்ட்ரிங் இசை குறிப்புகள் அனைத்தும் விசில் மூலமாக தான் இளையராஜா சொல்லிக் கொடுத்துள்ளார். இதே படத்தில் 1983-ம் ஆண்டு தனது இசையில் வெளிவந்த சத்மா (இந்தி) திரைப்படத்தின் "ஹே ஜிந்தாகி கலே லாகாலே" என்ற பாடலை "என் வாழ்விலே வரும் அன்பே வா" என மாற்றி பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இந்த திரைப்படத்துக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்டிருந்த 'நானே ராஜா நீயே மந்திரி' என்ற டைட்டிலை கடைசி நேரத்தில் மாற்றி, தம்பிக்கு எந்த ஊரு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரஜினிகாந்த், மாதவி, சுலோக்ஷ்னா, வி.எஸ்.ராகவன், செந்தாமரை, வினு சக்கரவர்த்தி, ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஜனகராஜ், கோவை சரளா என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பார்கள்.கிராமத்தின் வீட்டைப் பூட்டிக் கொண்டு பாப்பா போட்டா தாப்பா கதையை படிக்கும் போதும், பாம்பு வந்தவுடன் அதனுடன் நடக்கும் காட்சிகளிலும் தனது தேர்ந்த நடிப்பால் ஸ்கோர் செய்யும் ரஜினி ரசிக்க வைத்திருப்பார். அதோடு மட்டுமில்லாமல் படத்தின் தொடக்க காட்சிகளில் அசத்தலான உடைகளில் தனக்கே உரிய ஸ்டைலான காஸ்ட்யூமில் வரும் ரஜினியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

 ரஜினிகாந்துடன் முதல்முறையாக கைகோர்த்த இயக்குநர் ராஜசேகரும் ரஜினிகாந்தின் ஸ்டார் வேல்யூ குறையாத வகையில் ஏராளமான காட்சிகளை படத்தில் வைத்திருந்தார்.
ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் வசூல் மன்னனான ரஜினிகாந்த் ஏற்று நடித்த இந்த நகைச்சுவை கலந்த பாலு கதாப்பாத்திரம் அவரை பட்டித் தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com