ரஜினி ரசிகர்களுக்கு  அறுசுவை விருந்தளித்த அருணாச்சலம்!

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்த அருணாச்சலம் படம் குறித்து ஒரு சிறப்புப் பார்வை
ரஜினி ரசிகர்களுக்கு  அறுசுவை விருந்தளித்த அருணாச்சலம்!

தமிழ்த் திரையுலக உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்துக்கு, வயது வித்தியாசமின்றி, உலகம் முழுவதும் 6 முதல் 60 வரை ஏராளமான  தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இதில், பிரபல திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் அடங்குவர். பல திரைப்படங்களில் ரஜினியை முன்னிலைப்படுத்தி இடம்பெற்றுள்ள வசனங்களும், பாடல்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. 

ரஜினி ரசிகர்கள் பலருக்கு, இவரது திரைப்படத்தின் முதல் கட்சியை  திரையரங்கிற்கு சென்று பார்த்தால் தான் பூரண திருப்தி கிடைப்பதாக கூறுகின்றனர். தமிழ் திரையுலகில், 45 ஆண்டுகளாக தனக்கென தனி பாணியை கையாண்டு வரும் ரஜினிகாந்த், கதாநாயகனாக மட்டுமின்றி, வில்லனாக, குணசித்திர நடிகராக, தரமான நகைச்சுவை தரும் ஜனரஞ்சக நாயகனாக நடித்து,  தமிழ் திரைப்பட ரசிகர்களின்  மனதில் உயர்வான இடம் பிடித்துள்ளார்.

1997 ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அருணாச்சலம். ஒரு ஆங்கில நாவல் ஏற்படுத்திய தாக்கத்தில், அந்த காலகட்டத்தில் நல்ல படங்களை இயக்கிய சுந்தர்.சியை இயக்க வைத்து, அருணாச்சலம் படத்தை உருவாக்கிய ரஜினி, திரைப்படத்துறையில் நலிவடைந்த சிலருக்கு உதவுவதற்காக இந்த படத்தை தானே தயாரித்ததாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.  

இந்த படத்தில், ரஜியுடன் செளந்தர்யா, ரம்பா, அம்பிகா , மனோரமா, ரகுவரன், விணுசக்கரவர்த்தி, பொன்னம்பலம், விசு, செந்தில், ஜெய்சங்கர் என, ஒரு நட்சத்திர பட்டாளமே  ரசிகர்களை அமர்க்களப்படுத்தியது. 
எஸ்.பி பாலசுப்பிரமணியம் குரலில், தேவாவின் இசையில் உருவான வைரமுத்து எழுதிய ‘அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா’  பாடல் வரிகள், ரஜினி ரசிகர்களை இன்றளவும் முனுமுனுக்க வைக்கிறது.   பழனி பாரதியின் மாத்தாடு மாத்தாடு மற்றும் அல்லி அல்லி அனார்கலி பாடல் வரிகள்  பெண்களின் மனம் கவர்ந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற  வைரமுத்துவின் பாடல் வரிகள், அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு இருந்த அரசியல் செல்வாக்கை மட்டுமின்றி, இவர் அரசியலுக்கு வரப்போவதாகவும் சித்தரித்தது. எனவே, இந்த திரைப்படம், ரஜினியை நடிகராக மட்டுமின்றி, ஒரு தலைவனாகவும் உயர்த்தி, இவரது ரசிகர்கள் உருவகப்படுத்தி பார்க்கும் அளவிற்கு அமைந்தது.

பாடல் காட்சிகள்,  உட்புற  வடிவமைப்பு மற்றும் வெளிப்புற படப்பிடிப்பு காட்சிகளும் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இந்த திரைப்படத்தின் பெயர், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை  நினைவுபடுத்துவதோடு, ரஜினியின் பக்தியையும் ஆன்மிகத்தையும் உலகிற்கு பறைச்சாற்றியது. ருத்திராட்சம் உருண்டு வரும் காட்சிகள் ஆன்மிக அன்பர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. 

அனாதை என்ற முத்திரையோடு பட்டணத்திற்கு சென்ற அருணாச்சலம் , காதலி வேதவல்லியின் தந்தையால் அவமானப்படுத்தப்பட்டு, வேலை தேடிச் சென்ற இடத்தில், நந்தினியின் தந்தையான வழக்கறிஞர் ரங்காச்சாரியின் வாயிலாக தான் யார் என்பதை தெரிந்து கொள்வதாக அமைக்கப்பட்டிருந்த காட்சிகள் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருந்தன.மிகப்பெரிய பணக்காரரான வேதாச்சலம், தனது மகன் அருணாச்சலத்திற்கு பணத்தின் மீது ஆசை ஏற்படக்கூடாது என்பதற்காக, 30 நாட்களில், ரூ. 30 கோடி செலவழிக்க வேண்டுமென விசித்திரமான  கட்டளையை விதித்திருப்பார். தாறுமாறாக செலவு செய்தாலும், அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போல, வில்லன்களால் கூடுதலாகும் பணத்தை, அருணாச்சலம் ரஜினி லாவகமாக செலவு செய்வதும், பணத்தை செலவழிப்பதற்காக செந்திலை வைத்து எடுத்த படம் சக்கைப்போடு போடுவதும், வேதவல்லியான செளந்தர்யா, அறிவழகன் என்ற கதாபாத்திரமான நகைச்சுவை நடிகர் செந்திலை, அருணாச்சலம் ரஜினி எனக்கருதி மிரண்டு போகும் காட்சிகளும் அரங்கத்தை அதிர வைக்கும் நகைச்சுவை காட்சிகளாக அமைந்தது. 

‘ஆண்டவன் செல்றான் அருணாச்சலம் செய்றான்!’ என்ற வசனம் ரஜினி ரசிகர்களை மட்டுமல்ல பல்வேறு தரப்பினர் கவனத்தையும் ஈர்த்தது.  
‘தான் சம்பாதிச்சதை சேர்த்து வைச்சுட்டு போறான் பாரு அவன் முட்டாள், தான் சம்பாதிக்கும் காசை, தானே செலவழிக்கிறான் பாரு அவன் தான் புத்திசாலி’. ‘மீசை வச்சவன் எல்லாம் ஆம்பளை இல்லை. அப்பன் காசில் சாப்பிடாமல், தான் சம்பாதிச்சு அப்பா அம்மாவை உக்கார வெச்சு சோறு போடுறானோ அவன் தான் ஆம்பளை. ‘ஆண்டவன் எல்லாருக்கும் எல்லாத்தையும் கொடுத்துற மாட்டான், ஏதாவது ஒரு குறை வைக்கிறான், அப்படிக் குறையே வைக்கலன்னா  நாம் ஆண்டவனையே மறந்துடுவோம்‘
இப்படி ஏராளமான வாழ்க்கை தத்துவங்களையும் ரஜனிக்காக, கிரேஸிமோகன்  ‘பஞ்ச் டயலாக்’ வசனங்கள் இடம்பெற்றது. இந்த படம், கிரேஸி மோகனுக்கு திரைத்துறையில் மதிப்பை கூட்டியது. இவரது நகைச்சுவை வசனங்கள் ரஜினிரசிகர்களை சிரிக்க வைத்தது.

அருணாச்சலம் படத்தில் ரஜினியின் அறிமுக காட்சியில் தொடங்கி, ஒளிப்பதிவு, ஆடை அலங்காரம், ஒப்பனை, பாடல்கள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை, உள்பட ஒட்டு மொத்த  காட்சிகளும், ரஜினி ரசிகர்களிடையே இன்றளவும் நீங்காத நினைவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம், 1990–2020 ரஜினி ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தளித்தது என்றால் இது மிகையல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com