யதார்த்தம் கலந்த ஸ்டைல்! - ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்

ரஜினிகாந்த்தின் தனித்துவமான ஸ்டைல் பாணி நடிப்பு குறித்து ஒரு பார்வை 
யதார்த்தம் கலந்த ஸ்டைல்! - ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்

ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பாணி இருக்கும். ஆனால், ஸ்டைலான நடிப்பு மூலம் மக்களைக் கவர்ந்திழுத்த நடிகர்கள் சிலரே. அவர்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் வரிசையில் ரஜினிகாந்தும் ஒருவர்.

ஆனால், ரஜினிகாந்தின் ஸ்டைல் வித்தியாசமானது. இந்த மாறுபட்ட ஸ்டைல்தான் இயக்குநர் கே.பாலசந்தரை வசீகரித்தது. இதுவே, பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு ரஜினிகாந்துக்கு கிடைத்தது. முதல் படத்தில் ரஜினிகாந்துக்கு வசனம் குறைவு என்றாலும், தனது ஸ்டைல் மூலம் அக்கதாபாத்திரத்தையும் பேச வைத்தார்.

அதன் பின்னர், அவருக்குத் தொடர்ச்சியாக வில்லன் வேடங்களே கிடைத்தாலும் கூட, அதிலும் தனது ஸ்டைல் மூலம் முத்திரைப் பதித்தார். குறிப்பாக, பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவிக்கு இணையாக ரஜினிகாந்தின் பரட்டை கதாபாத்திரமும் பிரபலமாகப் பேசப்பட்டது. கிராமத்து வில்லனாக வரும் பரட்டை தனது முக பாவனை மூலம் மிரள வைத்தார்.

மாயாஜாலங்கள் கலந்த அவரது ஸ்டைல் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது மட்டுமல்ல; அவர்களையும் அதுபோல செய்யத் தூண்டியது. சிகரெட் பிடிப்பது, தீக்குச்சியைப் பற்ற வைப்பது, கண்ணாடியை ஸ்டைலாக கழற்றி, ஒரு சுற்று சுற்றி மீண்டும் மாட்டுவது, துப்பாக்கியை வேகமாகச் சுழற்றி பிடிப்பது என அக்காலத்தில் அவர் செய்த ஸ்டைல்கள், பெரும்பாலான இடங்களில் இளைஞர்கள் மத்தியில் பேசுப் பொருளாகவே இருந்தது. அவர்கள், தர்மயுத்தம் உள்ளிட்ட படங்களில் மூக்குக் கண்ணாடியை ஸ்டைலாக கழற்றி மாட்டும் வித்தையை செய்து பார்த்து தோல்வியுற்றவர்கள் ஏராளம்.

திரையுலகில் நுழைய வேண்டுமானால், சிவப்பு நிறம், சுருட்டை முடி, நல்ல உடல் கட்டு போன்றவை முக்கியமான அம்சங்களாகப் பார்க்கப்பட்ட காலம் அது. அந்தச் சூழ்நிலையில், அவை எதுவுமே இல்லாமல் திரையுலகில் நுழைந்து உச்சத்தைத் தொட்டார். இதற்கு காரணம் யதார்த்தம் கலந்த அவரது ஸ்டைலான நடிப்புதான்.

இந்த ஸ்டைலிலும் ரஜினி ஸ்டைல் என்ற பாணியையும் அவர் உருவாக்கிக் கொண்டார். ஆடு புலி ஆட்டம் படத்தில் இது ரஜினி ஸ்டைல் என அவரே அடிக்கடி பேசுகிற வசனம் இடம்பெற்றிருக்கும். அவர் கூறியதுபோல ஸ்டைலில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு முத்திரையும் பதித்தார்.

அவருக்குக் கண்கள் சிறியதாகவே இருப்பதால், அது வெளியில் தெரியக் கூடாது என்பதற்காகத் தலையைக் கீழே குனிந்து நடக்கத் தொடங்கினார். ஆனால், அதுவே ரஜினி ஸ்டைலாக மாறி, பிரபலமாகிவிட்டது. அவர் எது செய்தாலும் அது ஸ்டைலாகவே அமைந்தது.

ஆனால், அவர் எந்த ஸ்டைல் செய்தாலும், அக்கதாபாத்திரத்தை ஒட்டியே இருக்கும். மிகைப்படுத்தப்படாத அந்த ஸ்டைலும் இயல்பாக அமைந்ததால் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இதுவே, அவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாக்கக் காரணமாக அமைந்தது.  

அவர் ஸ்டைலில் மட்டுமல்ல, நடிப்பிலும் மிளிர்ந்தார். முள்ளும் மலரும் படத்தில் அவர் செய்த காளி கதாபாத்திரத்தை எக்காலத்திலும் யாராலும் செய்ய முடியாது. கெட்டப் பய சார் இந்த காளி என்ற வசனத்தை ரொம்பவே ஸ்டாலாக பேசியிருப்பார். இன்று வரையிலும் இந்த வசனம் பிரபலமாகப் பேசப்படுகிறது. இதனால் பின்னாளில் அவர் நடித்த சில படங்களிலும் ரஜினி நடித்த கதாபாத்திரத்துக்கு காளி என்ற பெயர் சூட்டப்பட்டது.

இதேபோல, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வறுமையான குடும்பத்தைச் சுமக்கும் அண்ணனாகவே வாழ்ந்து காட்டினார். அந்த வறுமையான கதாபாத்திரத்திலும் கூட, இயல்பான ஸ்டைலுடன் தனது நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்தக் கதாபாத்திரத்தை ரஜினிகாந்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்ற புகழ் இப்போதும் நிலைத்திருக்கிறது.

பில்லா படத்தில் அவரது ஸ்டைலான நடிப்பு மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. பில்லாவாக நடித்த ரஜினி அக்கதாபாத்திரமாகத் தத்ரூபமாக நடித்ததால், அப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு வந்த தீ, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களும் அவரது ஸ்டைலுக்காகவே நீண்ட நாள்கள் ஓடின.

கதாநாயகனாக மாறிய பிறகு சீரியஸான கேரக்டர்களை மட்டும் செய்து வந்த ரஜினி நகைச்சுவைகள் நிறைந்த தில்லுமுல்லு படத்திலும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். நகைச்சுவையிலும் தன்னால் ஸ்டைலாக மிளிர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

இந்த ஸ்டைல்கள்தான் அவருக்குத் தொடக்கக் காலத்தில் ஸ்டைல் மன்னன் என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. என்றாலும், ரஜினிகாந்த் ஸ்டைலை மட்டுமே நம்பி இல்லாமல், நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி, வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தந்ததால், அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

என்றாலும், ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான உத்திகளைப் புகுத்தி, ஸ்டைலில் புதிய போக்குகளை உருவாக்கினார். எஜமான் படத்தில் துண்டை சுழற்றி தோளில் போடுவது, படையப்பாவில் சல்யூட் செலுத்துவது, சிவாஜி படத்தில் சுவிங்கத்தை தூக்கிப் போட்டு சாப்பிடுவது என ஒவ்வொரு படத்திலும் புதிய ஸ்டைல்களை அறிமுகப்படுத்தினார். இதேபோல, ஒவ்வொரு படத்திலும் மனதில் நிற்கும் விதமாக ஸ்டைலான பஞ்ச் டயலாக்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

ரோபோ தொழில்நுட்பத்தைக் கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட எந்திரன் படம் ஹாலிவுட் படத்துக்கு இணையாகப் பேசப்பட்டது. அதில் ரோபோ இயந்திரமான சிட்டிபாபு கதாபாத்திரம் இளம் நடிகரால் மட்டுமே சாத்தியமானது எனக் கருதப்பட்ட நிலையில், அதை 60 வயதை நெருங்கும் நிலையிலும் நடித்துக் காட்டி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். முழுவதும் ரோபோ, கணினி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அக்கதாபாத்திரத்தையும், அதற்கேற்ற ஸ்டைலுடன் நடித்து, யாராலும் சாதிக்க முடியாத உயர்ந்த இடத்தைப் பிடித்தார்.

ஒவ்வொரு படத்திலும் அவர் காட்டும் வித்தியாசமான, ஸ்டைலான நடிப்புதான் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். எழுபது வயதைக் கடந்தும் அவர் கதாநாயகனாக  வலம் வருவதற்கும் அதுவே காரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com