
பொது இடங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. இதில் திரையரங்குகளும் அடங்கும். இந்த நிலையில், மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அனுமதி என்பதால் திரையரங்குக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் மாநாடு படம் பாதிக்கப்படக் கூடும் என்று மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''மாண்புமிகு தமிழக முதல்வருக்கு, வணக்கம். திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்குகள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன.
இதையும் படிக்க | ஹிந்தியில் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் பிக்பாஸ் மஹத்
அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. 'அண்ணாத்த' மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. ஐம்பது விழுக்காடு இருக்கை ஆக்கிரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்கிரமப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம். நன்றியோடு.
ஆனால் இப்போது தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உங்கள் ஆட்சியில் தடுப்பூசி சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. முகக் கவசம், கிருமி நாசினி போன்றவற்றால் மக்கள் தங்களை பாதுகாத்தே வருகின்றனர். தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாகப் பாதிக்கும். ஆண்டிராய்டு கைப்பேசி இல்லாதவர்கள் கூட திரையரங்கிற்கு வருவார்கள். அவர்களை சான்றிதழ் எடுத்து வரச் சொன்னால் திரையரங்கம் வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள் .
அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்களின் பக்கமே வரமாட்டார்கள். தயைகூர்ந்து 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்டுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம். விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும் திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.