
நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்துக்கு ஆமிர் கான் காரணம் என நடிகை கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார்.
நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த சனிக்கிழமை விவாகரத்து செய்யவிருப்பதாகவும், விவாகரத்துக்குப் பிறகு நண்பர்களாக தொடருவோம் என்றும் அறிவித்தனர். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தென்னிந்திய நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அவருக்கு சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் விவாகரத்து வல்லுனர். அவர் பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எப்பொழுது விவாகரத்து நடைபெற்றாலும் தவறு ஆண்கள் மேல் தான் உள்ளது. நான் சொல்வது பழமைவாதமாக தெரியலாம். ஆனால் கடவுள் இப்படித்தான் ஆணையும், பெண்ணையும் அவர்களின் இயல்புடன் படைத்துள்ளார். இயற்கையிலேயே ஆண் வேட்டையாடுபவராகவும், பெண் வளர்ப்பவராகவும் இருக்கிறார்.
பெண்களை ஆடைபோல் எளிதில் மாற்றி பின் அவர்களை உற்ற நண்பர்களாக இருக்கிறோம் என்று பேசும் ஆண்களிடம் கனிவு காட்டுவதை நிறுத்துங்கள். 100 பெண்களில் ஒருவர் தவறாக இருக்கலாம். ஊடகம் மற்றும் ரசிகர்களிடம் இருந்து ஊக்கம் பெறும் இவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். அவர்களைப் புகழ்ந்து பெண்களைப் பற்றி தீர்மானிக்கிறார்கள். விவாகரத்து கலாச்சாரம் முன் எப்பொழுதைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஆமிர் கானுடன் இணைந்து நாக சைதன்யா தற்போது லால் சிங் சதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நாக சைதன்யா மற்றும் சமந்தா பிரிவுக்கு நடிகை கங்கனா, ஆமிர் கானை குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் ஹிந்திப் பட உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.