தமிழ் சினிமாவே மாமியாரை சீண்டாதீங்க! - மாமியார் தின சிறப்புப் பதிவு

தமிழ் சினிமாவில் மாமியார் கதாப்பாத்திரம் கையாளப்பட்டிருக்கும் விதம் குறித்து சிறப்புப் பதிவு
தமிழ் சினிமாவே மாமியாரை சீண்டாதீங்க! - மாமியார் தின சிறப்புப் பதிவு
Published on
Updated on
3 min read

தமிழ் சினிமாவில் உறவுகளின் மேன்மையை பறைசாற்றும் படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், அவற்றை உளவியல் ரீதியாக அனுகிய படங்கள் என்றால் வெகு சொற்பமே. 

உதாரணமாக அப்பா - மகள் , அம்மா - மகன், அண்ணன் - தங்கை, அண்ணன் - தம்பிகள் ஆகிய உறவுகளின் மேன்மையை பேசும் படங்கள் தொடர்ந்து தமிழில் வெற்றிபெற்று அது வெற்றிக்கான ஃபார்முலாவாகி விட்டன. உறவுகளுக்குடையே நிலவும் பிரச்னைகளை சோகம் பிழிய பிழிய சொன்னால் வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கை உருவாகி இருக்கிறது. உதாரணமாக சமீபத்தில் வெளியான உடன் பிறப்பே. ஆனால் அதனை ஓரளவுக்காவது சுவாரசியமாக சொன்னால் வெற்றிபெறலாம் என்பதுதான் உண்மை. 

1960களில் பாசமலர்  என்ற படத்துக்காக கண்ணீர் விட்டது ஒரு தலைமுறை. 30 வருடங்களுக்கு பிறகு வெளியான கிழக்குச் சீமையிலே படத்திலும் அதே அண்ணன் - தங்கை கதை தான். கூட்டம் கூட்டமாக திரையரங்குகள் சென்று கண்ணீருடன் திரும்பியது ஒரு தலைமுறை. கிட்டத்தட்ட  அடுத்த 30 வருடங்களுக்குப் பிறகு வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்துக்கும் ஒரு தலைமுறை கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறது. இது அண்ணன் - தங்கை உறவுகளுக்கு மட்டுமல்ல, மற்ற உறவுகளுக்கும் பொருந்தும். 

நம் தமிழ் சமூகத்தில் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் உறவுகளுக்கு இருக்கும் வலிமை குறையவே குறையாது என்பதற்கான சான்றுதான் இது. திரைப்படங்களில் அதிகம் பேசாத, விவாதிக்கப்படாத உறவுகளில் ஒன்று மாமியார் உறவு. அப்படியே திரைப்படங்களில் மாமியார் உறவை மையப்படுத்தி திரைப்படங்கள் வந்திருந்தாலும், அந்த உறவை எதிர்மறை கதாப்பாத்திரமாகவே சித்திரித்திருப்பார்கள். உளவியல் ரீதியாக அனுகிய படங்கள் குறைவே. 

அந்த வகையில் இயக்குநர் வி.சேகரின் படங்கள் முக்கியமானவை. அவரின் 'பொறந்த வீடா புகுந்த வீடா', 'நான் பெத்த மகனே' உள்ளிட்ட படங்கள் முக்கியமானவ. இதில் நான் பெத்த மகனே படத்தில் மனோராமா தனது மகன் 'நிழல்கள்' ரவிக்கு ஊர்வசியை மணமுடிப்பார். ஒரு கட்டத்தில் தன் மகன் மனைவியின் மீது அதிகம் நாட்டம் கொண்டராக மாறிவிட்டதாக மனோராமாவுக்கு தோன்றும். உடனடியாக தன் மகனை  மீட்பதாக நினைத்துக்கொண்டு மருமகளை கொடுமைப்படுத்த துவங்குவார். மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் ஊர்வசி தற்கொலை செய்துகொள்வார். 

மாமியார் கொடுமையின் காரணமாகவே ஊர்வசி இறந்தவிட்டதாக ஊரே மனோராமாவை திட்டும். அவரது மகன் நிழல்கள் ரவி கூட மனோராமாவை தான் குற்றம் சொல்லுவார். ஆனால் வழக்கறிஞரான ராதிகா அதன் பின் இருக்கும் உளவியல் சிக்கலை புரியவைப்பார். இந்தப் படத்தில் மாமியாராக நடித்திருக்கும் மனோராமாவின் நடிப்பு மிக முக்கியமானது. அவரது நடிப்பு, நேர்மறையாகவும் இல்லாமல் எதிர்மறையாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் இருக்க வேண்டும். அதாவது தன் மகன் மீது இருக்கும் பாசத்தால் தான் அவர் அப்படி நடந்து கொண்டிருக்கிறார் என நமக்கு அந்த வேடத்தின் மீது சிறிது கருணை ஏற்பட வேண்டும். இல்லையென்றால் அந்த வேடம் வில்லி வேடமாகிவிடும். 

இதேப் போல ரஜினிகாந்த் நடித்துள்ள மாப்பிள்ளை திரைப்படம், திமிர் பிடித்த மாமியார் வேடத்தை ஒரு மருமகன் எப்படி அடக்குகிறார் என்பதே படத்தின் கதை. ரஜினிகாந்த் படங்களில் பெண் பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதற்கு மாப்பிள்ளை, மன்னன், படையப்பா, சந்திரமுகி இப்படி சில உதாரணங்களை சொல்லலாம். வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்களின் பாத்திரங்கள் மிக சிறியதாகவே எழுதப்பட்டிருக்கும். அதனை நடிகர்கள் அனுமதிப்பதில்லை. நடிகர் ரஜினிகாந்த் அதற்கு விதி விலக்கு. 

ஆனால் அப்படி பெண் நடிகர்களுக்கு அவரது படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பிருந்தாலும் அந்த வேடங்கள் மிகவும் பிற்போக்குத்தனமாகவே எழுதப்பட்டிருக்கும். ஒரு பெண் தன் விருப்பம்போல் இருந்தால், பிடித்ததையெல்லாம் செய்தால் அவள் திமிர் பிடித்தவள். அந்தத் திமிரை கதாநாயகனான ரஜினிகாந்த் அடக்குவார். அதுதான் மாப்பிள்ளை படத்திலும் நடந்தது. இந்த சமூகத்தில் ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என எழுதப்படாத விதி இருக்கிறதோ, அந்த விதிப்படி தான் அந்த வேடம் எழுதப்பட்டிருக்கும். 

ஆனால் அந்தப் படத்தை இன்றளவும் ரசிக்கவைப்பது ரஜினிகாந்த், மற்றும் ஸ்ரீவித்யாவின் நடிப்பு தான். குறிப்பாக ஸ்ரீவித்யா எந்தவிதமான பாத்திரங்களையும் மிக சரியாகக் கையாளக் கூடியவர். கொஞ்சம் கூடவோ, குறையவோ தெரியாது. உதாரணமாக அபூர்வ ராகங்களில் ரஜினிகாந்த்தின் முன்னாள் மனைவியாக ஸ்ரீவித்யா நடித்திருப்பார். பின்னர் உழைப்பாளி படத்தில் ரஜினிக்கு அக்காவாக, தளபதி படத்தில் ரஜினிக்கு அம்மாவாக, மாப்பிள்ளை படத்தில் அவருக்கு மாமியாராக நடித்திரிப்பார். ஆனால் ஒரு படத்தில் கூட இருவரது நடிப்பும் வித்தியாசமாகவோ, உறுத்தலாகவோ தெரியாது. பெரும்பாலும் கண்களிலேயே உணர்வுகளைக் கடத்திவிடுவார். 

அதே மாப்பிள்ளை படம் மீண்டும் தனுஷ் நடிப்பில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. தனுஷுக்கு மாமியாராக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீவித்யா அளவுக்கு தனுஷ் மற்றும் மனிஷ் கொய்ராலாவின் நடிப்பு ரசிகர்களைக் கவராதது கூட அந்தப் படம் தோல்வியடைந்ததற்கு ஒரு காரணம். 

இதே போல பாலச்சந்தரின் பூவா தலையா, அந்தப் படத்தின் தழுவலாக சொல்லப்படும், கந்தா கடம்பா கதிர் வேலா உள்ளிட்ட படங்கள் மாமியார் வேடத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளன. ஆனால் அந்தப் படங்கள் மேலோட்டமாக மாமியார் வேடம் என்றாலே திமிர் பிடித்தவர் என்றே அனுகியிருக்கின்றன.  ராம்கி - குஷ்பு இணைந்து நடித்த எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்றொரு படம். 

அந்தப் படத்தில் குஷ்புவின் மாமியாராக வடிவுக்கரசி நடித்திருப்பார். அவருக்கு தன் குடும்பத்து வாரிசாக ஆண் குழந்தை வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பார். அதன் காரணமாக தன் மருமகள் குஷ்புவை கொடுமைப்படுத்துவார். இறுதியில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அவருக்கு உணர்த்த உடனே திருந்திவிடுவார். பெரிய பாராட்டத்தக்க வேடம் எல்லாம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் அந்த வேடத்துக்கு ஒரு கொள்கை என்ற ஒன்றாவது இருக்கும். ஆனால் தமிழ் சினிமாவில் வரும் மேலோட்டமாகவே எழுதப்பட்டிருக்கும். 

விசில் படத்தில் நடிகர் விவேக்கிற்கு யார் மனதில் என்ன நினைத்தாலும் கேட்டுவிடும். ஒரு பேருந்து நிறுத்தத்தில் விவேக் நின்று கொண்டிருப்பார். அப்போது அங்கு வரும் மாமியார் மருமகள்கள் ஒருவரையொருவர் பழி தீர்க்க மனதிற்குள் திட்டம் தீட்டிக்கொண்டிருப்பர். ஆனால் வெளியில் சிரித்து பேசுவர். அதனை கேட்கும் விவேக் அதிர்ச்சியாகி அவர்களிடமே கேள்வி கேட்க, அங்கே குடுமி பிடி சண்டை நடக்கும். இது ஒரு நகைச்சுவைக் காட்சி தான். ஆனால் மாமியார் மருமகள்கள் என்றாலே ஒருவருக்கொருவர் பிடிக்காமல் சண்டையிட்டுக்கொள்வர் என்று மக்கள் புரிந்து வைத்துக்கொள்வதற்கு இது ஒரு உதாரணம்.

சமீபகாலமாக ஒரு விடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், நடிகர் கார்த்திக் தனது மாமியார் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அவருடன் அமந்து சாப்பிடும் அனைவரும் தங்கள் கண்களை துணியால் கட்டிக்கொள்வர். பரிமாறும் மாமியாரும் துணியால் கண்களைக் கட்டியிருப்பார். காரணம் கேட்கும் கார்த்திக்கிடம், அவரது மாமியார், நீங்கள் நன்றாக சாப்பிடுவீர்கள். நீங்கள் சாப்பிடும்போது அதனை நாங்கள் பார்த்தால், எங்கள் கண்பட்டு அதனால் உங்கள் உடலுக்கு தீங்கு நேரலாம் இல்லையா அதனால் தான் என்கிறார். ஒன்று காரணமேயின்றி மாமியாரை மிக மோசமாக காட்டுவார்கள். இல்லை அதீத நல்லவர்களாக காட்டி கடுப்பேத்துவார்கள். இவ்வளவு ஏன் மாமியார் வீடு என்று கூட ஒரு படம் இருக்கிறது. ஆனால் தலைப்பில் மாமியாருக்கு கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட படத்தில் கொடுக்கவில்லை என்பது தான் வேதனை. 

அந்த வகையில் நான் பெத்த மகனே திரைப்படம் தவிர, மாமியார் வேடத்தை உளவியல் ரீதியாக அனுகிய படங்கள் என்பது தமிழில் ஒன்று கூட இல்லை என்பது தான் கசக்கும் உண்மை. எல்லா உறவுகளையும் போல மாமியார் என்ற உறவும் உன்னதமானது தான். மாமியாரைக் கொண்டாடி படமாக்க சொல்லவில்லை. அவர்களை உள்ளது உள்ளபடி இயல்பாக படங்களில் காட்டுங்கள், அவர்களுக்கு இருக்கும் உளவியல் சிக்கல்களை புரந்துகொள்ளுங்கள் என்பதே இந்த மாமியார் தினத்தில் நாம் வைக்கும் கோரிக்கை. இன்னொரு அம்மாவாக திகழும் அனைத்து மாமியார்களுக்கும் மாமியார் தின வாழ்த்துகள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com