உண்மையாகவே பாரதி கண்ணம்மா விலகப் போகிறாரா?

பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷிணி ஹரிப்ரியன் விலகப் போவதாகப் பரபரப்பாகச் செய்திகள் வலம் வருகின்றன.
உண்மையாகவே பாரதி கண்ணம்மா விலகப் போகிறாரா?
Published on
Updated on
2 min read

விஜய் டி.வி.யில் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷிணி ஹரிப்ரியன் விலகப் போவதாகப் பரபரப்பாகச் செய்திகள் வலம் வருகின்றன.

குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பார்க்கும்படியான தரத்திலுள்ள பாரதி கண்ணம்மா தொடர் எக்கச்சக்கமாக பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பெற்றிருந்த இடத்தையும் ரசிகர்களையும் பெற்றிருக்கிறது.

தனக்கு இன்னொரு மகள் இருப்பதாக உள்ளுணர்வு கூறியதை வைத்தே விசாரித்து, விசாரித்து, கணவன் பாரதியின் குடும்பத்துடன் வளரும் ஹேமாதான் அந்த மகள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார் கண்ணம்மா.

கடந்த சில வாரங்களாகவே சின்னச் சின்ன சுவாரசியங்களைத் தவிர்த்துப் பெரிதாகப் பார்வையாளர்களை ஈர்க்கும்படியாகக் கதை நகரவில்லை. இடையிடையே சில ஜிம்மிக்ஸ் எல்லாம் செய்துபார்த்தனர். பெரிய பயனில்லை.

இப்போது ஓரளவு கதை செட்டிலாவது போலிருந்தாலும் அடுத்துக் கதையை  எப்படி நகர்த்துவது என்பதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதோ குழப்பம் போல. தொடரில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் குழம்பிப் போயிருப்பதுடன் பார்வையாளர்களும் ஏகமாகக் குழப்பத்தில் ஆழ்த்தப்படுகிறார்கள்.

கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷ்ணி ஹரிப்ரியனின் நடிப்பை  இயன்றளவு சிறப்பாக வெளிப்படுத்துவதற்காக,  வெண்பாவிடம் அவர் மாற்றி மாற்றிப் பேசுவதாக நிறைய காட்சிகள் வைக்கப்படுகின்றன.

இடையிடையே நேரத்தைக் கடத்துவதற்காக சௌந்தர்யாவும் அவருடைய கணவரும்கூட பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். கண்ணம்மா அவருடைய மகள்களுக்குக் கதை சொல்கிறார். ஹேமாவைப் பற்றி பாரதி நினைத்துப் பார்ப்பதைப் பார்த்தால் நமக்கே அழுகை வந்துவிடும் போல. துளசியை வேறு காணவில்லை.

இந்த நிலையில் பிரதான கதையின் போக்கில் ஒருவித தொய்வு தென்படுவதைப் போல இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் உயர் வரிசையில் தனக்குள்ள இடத்தைப் பாரதி கண்ணம்மா இழக்க நேரிட்டாலும் வியப்பதற்கில்லை. 

பாரதி கண்ணம்மா தொடரின் முக்கியமான, மைய அச்சாகத் திகழ்வதே கண்ணம்மாவாக நடிக்கும்  ரோஷ்ணிதான். அவரைச் சுற்றிதான் கதை முழுவதுமாகப் பின்னப்பட்டிருக்கிறது.

பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி பாரதி வீட்டிலிருந்து கண்ணம்மா துரத்தப்பட்டபோது, வேறு இடம் தேடி அவர் கர்ப்பிணிப் பெண்ணாக ஒரு பையுடன் நடந்துகொண்டே இருப்பார். இந்தக் காட்சியைப் பற்றி, எந்தவொரு சின்னத் திரைத் தொடருக்கும் கிடைக்காத அளவுக்கு மீம்கள் உருவாகி சமூக ஊடகங்களைக் கலக்கின, ஒரு வகையில் கண்ணம்மா கேரக்டரைப் பரப்பின. 

ரோஷ்ணியை இழப்பதைக் குழுவினர் விரும்ப மாட்டார்கள். இவருக்குப் பதில் அவர் என்று எவரையாவது அறிமுகப்படுத்தினால், இதற்குப் பதில் அது என்று பார்வையாளர்களும் வேறு தொடர்களுக்கு மாறிவிடும் ஆபத்திருக்கிறது. ரோஷ்ணிக்கும்கூட இப்படிப்பட்ட பவர்ஃபுல் கதாபாத்திரம் அமைவதெல்லாம் நினைத்தும் பார்க்க முடியாது. இவற்றையெல்லாம் தொடர் சம்பந்தப்பட்டவர்கள் நன்றாகவே அறிந்திருப்பார்கள் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உண்மையிலேயே இந்தத் தொடரிலிருந்து ரோஷ்ணி ஹரிப்ரியன் விலகத்தான் போகிறாரா? - இதுபற்றி யாருக்கும் தெரியவில்லை. யாரும் உறுதிப்படுத்தவுமில்லை.

பின்னர் எவ்வாறு பரபரப்பாக இந்தச் செய்தி வலம் வருகிறது? சம்பந்தப்பட்டவர்களேதான் இந்தச் செய்தியைப் பரப்புகிறார்கள் என்றும் தொடரைத் தூக்கிப் பிடிக்கவும், எல்லாரும் பேச வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் சில தரப்பினர் கூறுகின்றனர்.

கதையிலுள்ள தொய்வை இத்தகைய செய்திகளை வைத்து ஈடுகட்டுகிறார்கள் என்று சொல்பவர்களும் இருக்கின்றனர்.

ம். கண்ணம்மா விலகத்தான் போகிறாரா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com