
7 வது வருட திருமண நாளை முன்னிட்டு கணவர் ஃபகத்துடன் எடுத்துக்கொண்ட விடியோவை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மலையாள நடிகையான நஸ்ரியா தமிழில் 'நேரம்' படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து 'ராஜா ராணி', 'திருமணம் எனும் நிக்காஹ்', 'நய்யாண்டி', 'வாயை மூடி பேசவும்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
குறைவான தமிழ் படங்களிலேயே நஸ்ரியா நடித்திருந்தாலும், அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிலையில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து 'டிரான்ஸ்' படத்தில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் தன்னை உப்பு மூட்டை தூக்கி செல்லும் விடியோவை பகிர்ந்து, ''திருமண நாள் வாழத்துகள். நீ அதிர்ஷ்டசாலி. பயணங்களின் போது நான் நடக்க மறுத்தால், என்னை சுமந்து சென்றாய்.
எனது அனைத்து சாகச பயணங்களும் உன்னுடன் தான் நிகழ்ந்திருக்கிறது. அதனால் தப்பிக்க முடியாது. 7 வது வருட திருமண நாள் வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் இருவருக்கும் திருமண வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.