பாட்ஷா - அரசியல், திரையின் மூன்றெழுத்து அதிர்வு!

பாட்ஷா - அரசியல், திரையின் மூன்றெழுத்து அதிர்வு!

ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற பாட்ஷா படம் குறித்து ஒரு பார்வை 

ரஜினிகாந்தின் சுமார் ஐம்பது ஆண்டு திரை வாழ்க்கையில் முதல்  10  படங்களை வரிசைப் படுத்தினால் பாட்ஷா படத்துக்கு நிச்சயம் இடம் உண்டு. இதுபோல் தமிழில் வசூலில் சாதனை படைத்த படங்கள், தமிழில் புதிரி ஹிட் படங்கள் என எப்படி டாப் 10 பட்டியல் போட்டாலும் பாட்ஷாவை தவிர்க்க முடியாது. ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி வசனம் எல்லாம் ரஜினி ரசிகர்களின் எண்ணத்தில் இருந்து மறையாதது.

இந்த படத்தில் ரஜினிக்கென பின்னணி இசை, எஸ்பிபி குரலில் ஒலித்த பாட்ஷா பாரு பாடல் எல்லாம் வேற லெவல் மாஸ். அபூர்வ சகோதரர்கள் படத்தின் மூலம் மிகப் பெரிய ஹிட் கொடுத்த தனது போட்டியாளர் கமலுக்கு ரஜினி கொடுத்த பதில் தான் பாட்ஷா. அன்றைய நிலவரப்படி வசூலில் அந்த அளவுக்கு சாதனை படைத்திருந்தது

படத்தை அலசிப் பார்த்தால் ரஜினி பிரம்மாண்டமக இருந்தாலும் வில்லன் ரகுவரன், இசையமைப்பாளர் தேவா, கதை எழுதி இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா வசனம் எழுதிய பாலகுமாரன், பாடகர் எஸ்பிபி போன்றவர்களின் பங்கும் குறைவானது அல்ல. படத்தில் ரகுவரன், ஆனந்த் ராஜ், தேவன் என வில்லன்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் பேசப்படுபவர் ரகுவரன்தான். இத்தனைக்கும் பிளாஷ் பேக் மற்றும் கிளைமாக்ஸ் ஸீன்களில் மட்டுமே வருவார். ஆனாலும் பாட்ஷாவுக்கு அவர்தானே நேரடி வில்லன். மற்றவர்கள் எல்லாம் ஆட்டோ ஓட்டும் மாணிக்கத்துக்குத்தானே வில்லன்கள்.

ருசியான சாப்பாடு என்றால் அனைத்துமே அளவாக இருக்க வேண்டும். அதுபோல கமர்ஷியல் ஹிட் படம் என்றால் காமெடி, கதை, பாடல், வசனம், நடிப்பு எல்லாமே கச்சிதமாக அமைய வேண்டும். பாட்ஷா அப்படி அமைந்த படம்.  திருமூலரின் திருமந்திர பாடலை அடிப்படையாக கொண்டு 'எட்டு எட்டாய் மனுஷ வாழ்க்கை..' பாடல் எல்லாம் ரஜினிக்காகவே வைரமுத்து எழுதியதாகவே கருதலாம்.  அது போலவே, 'ஆட்டோக்காரன்..., பாடலும் ரஜினியை ஆட்டோக்காரர்கள் தங்களில் ஒருவராகவே பார்க்கச் செய்த பாடல். இப்போதும், ஆயுத பூஜை தினங்களில் இப்பாடல் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே இல்லை என கூறலாம். ஆட்டோ டிரைவர்களின் தேசிய கீதம் இது.

இந்த பாடல்களுக்கு உயிர் தந்தவர்கள் தேவாவும் எஸ்பி பாலசுப்பிரமணியனும் என்றால் மிகையான வார்த்தைகள் இல்லை. டைட்டில் இசை தொடங்கி ரஜினி வரும் காட்சிகளின் பின்னணி எல்லாம் இசையில் தேவா பின்னி எடுத்திருப்பார். பாட்ஷா பெரு வெற்றிக்கு அவரும் ஒரு தூண் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாட்ஷா படத்தில் ரஜினிக்கு கூடுதல் பலம் அதன் வசனங்கள். பிரபல எழுத்தாளர் பாலகுமாரனின்

பாட்ஷாவா ஆண்டனியா...,

 கொஞ்சம் அங்க பாரு கண்ணா....,

உன் வாழ்க்கை உன் கையில்...

மாதிரியான வசனங்கள் எல்லாம் எவர் கிரீன். இதில், 'உன் வாழ்க்கை உன் கையில்..., என்ற வார்த்தைகள் இன்றளவும் ஆட்டோக்களில் எழுதப்படுபவை.

கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் வில்லன் ஆனந்த்ராஜ், குள்ள நரித்தனமான வில்லன் தேவன் ஆகியோரும் பாட்ஷாவை  சுமந்தவர்கள் தான். இந்த படத்தின் காட்சிகளில் பல சறுக்கல்கள் உண்டு. ரகுவரன் மகள் நக்மா ரஜினிக்கு ஜோடி, கிளைமாக்சில் ரகுவரன் வயதாக வரும்போது ரஜினி அப்படியே இளைஞராக  இருப்பது போன்ற சில லாஜிக் இல்லா சமாச்சாரங்கள் உண்டு. ஆனாலும் பரபரப்பான காட்சிகள், தடதடக்கும் திரைக்கதை,  ரஜினி தோன்றும் ஒவ்வொரு சீனும் மாஸ் என்ட்ரி என இருப்பதால் லாஜிக் இல்லா சமாச்சாரங்கள் பெரிதாக எடுபடவில்லை.

இன்று வரை யாராவது ஒருவரை தாதா, தலைவர் ரேஞ்சுக்கு  அழைப்பதென்றால் பாட்ஷா என்ற பெயர்தான் சாதாரணமாக புழங்கும். அந்த அளவுக்கு 25 ஆண்டுகளை கடந்தும் தனது பெரு வீச்சை தொடருகிறது ரஜினியின் பாட்ஷா படம்.

திரையுலகம் மட்டுமல்ல. திரையை தாண்டியும் தமிழகத்தில் 1990 களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் பாட்ஷா. பாட்ஷா படத்தை தயாரித்தது சத்யா மூவீஸ் நிறுவனம். அப்போது அந்த நிறுவனத்தின் ஆர்எம் வீரப்பனுக்கும் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அரசியலில் உரசல் நிலவிய கால கட்டம். அந்த சமயத்தில் தான் பம்பாய் படத்தை எடுத்த மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது.

இவை எல்லாம் பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில், ரஜினி மூலம் எதிரொலித்தது. பாட்ஷா படத்தின் மும்பை தாதா பற்றி மேடையில் பேசிய ரஜினி, "தமிழ்நாட்டிலும் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து விட்டது",  "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என அதிர வைத்தார்.  பாட்ஷா வெற்றி விழா மேடையில் ரஜினி கூறிய இந்த வார்த்தைகள் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியதோடு பலரின் அரசியல் வாழ்வையே தலைகீழாக புரட்டிப் போட்டது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து புதிய கட்சி ஆரம்பித்து மறு ஆண்டு 1996ல் நடைபெறும் சட்டப் பேரவை தேர்தல் மூலம் ரஜினி முதல்வராவார் என்றே எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் நடந்தது வேறு.

அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததை எதிர்த்து மூப்பனார் வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அந்த கட்சிக்கு ஆதரவளித்து அல்லது கூட்டணி அமைத்து ரஜினி முதல்வராவார் அல்லது மூப்பனார் முதல்வராவார் என்ற எதிர் பார்ப்பும் பொய்யானது. காரணம் கருணாநிதியின் ராஜதந்திரம்.

கிட்டத்தட்ட ஒட்டு மொத்த தமிழகமும் ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்த நிலையை, தனக்கு சாதகமாக்கினார் கருணாநிதி. புதிய கட்சி ஆரம்பிக்க ரஜினிக்கு விருப்பம் இல்லை என்பதை அறிந்ததும் மூப்பனார் கட்சியை கூட்டணிக்குள் அழைத்து 1996 பேரவை தேர்தலை சந்தித்தார் கருணாநிதி. திமுக தமாகா அணிக்கு அமெரிக்காவில் இருந்தபடியே வீடியோ பேச்சு மூலம் ரஜினி ஆதரவு அளிக்க மறக்க முடியாத முடிவுகளை தந்தனர் தமிழக மக்கள்

அந்த தேர்தலில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோற்றுப்போனார். தமிழக அரசியலில் இப்போது வரை நடந்திராத அதிர்ச்சி நிகழ்வு அது. இவ்வாறாக திரையுலகை தாண்டியும் அரசியல் தேர்தல் என அதிர்வுகளை ஏற்படுத்திய படம் பாட்ஷா. ஆனால் ரஜினிக்கு தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் பலனும் இல்லை. வழக்கம்போல, அரசியல் கட்சிகளுக்கு  நடிகர்கள் செய்யும் உதவி போலவே மாறிப்போனது ரஜினியின் பாட்ஷா அரசியலும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com