இயக்குநர் மகேந்திரனின் 'ஜானி'  தமிழில் ஒரு மாற்று சினிமா - ஏன்?

ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு மகேந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த ஜானி படம் குறித்து சிறப்பு பார்வை 
இயக்குநர் மகேந்திரனின் 'ஜானி'  தமிழில் ஒரு மாற்று சினிமா - ஏன்?


ஜானி திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிறது. ஜானி படத்தின் கதையை மட்டும் கேட்டால், ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் நிறைந்த கதை. அதன் திரைக்கதையை கையாண்ட விதத்தில் தான் தனித்து தெரிகிறார் இயக்குநர் மகேந்திரன். படமும் தமிழின் கிளாசிக்கல் படங்களின் வரிசையில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.      

‘ஜானி’ படத்தின் அடிப்படைக் கதையை மட்டும் யோசித்து பார்த்தால் அப்படியே பில்லா படத்தின் கதை தான். ஒரே உருவ ஒற்றுமை உடைய இரட்டையர்கள். ஒருவன் திருடன். மற்றொருவன் சவரத் தொழிலாளி. திருடன் மற்றொருவனுக்கும் தனக்கும் உள்ள உருவ ஒற்றுமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். பில்லா மட்டுமல்ல, இரட்டை வேடங்கள் என்றாலே இதே கதை தான்.

ஆனால் திரைக்கதையில் மகேந்திரன் செய்த மேஜிக் மற்ற படங்களில் இருந்து ஜானியை வித்தியாசப்படுத்துகிறது. மிகப் பெரிய சண்டைகளுக்கு வாய்ப்பிருக்கும் கதையில் அதனை தவிர்த்து விட்டு இரண்டு விதமான காதலை பேசியிருப்பார். 

ரஜினிக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையிலான காதல் அத்தியாயங்கள் அழகியல் என்றால், இன்னொரு ரஜினிக்கும், தீபாவிற்கும் இடையில் இடம் பெரும் காதல் உளவியல் ரீதியானவை. 

ஸ்ரீதேவி ஒரு பாடகி. அவரது பெயர் அர்ச்சனா. ஜானி (ரஜினி) அவரது தீவிர ரசிகர். இருவருக்கும் பழகு வாய்ப்பு நேர்கிறது. இருவருக்கும் உறவென்று யாரும் இல்லை. இருவரும் அன்புக்கு ஏங்குபவர்கள். இதுவே இருவரையும் இணைக்கிறது. ஜானி தன் அம்மா மீது மிகுந்த பிரியம் கொண்டவர். ஒரு காட்சியில் ஜானி அர்ச்சனாவிடம் இன்று எனது பிறந்த நாள். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நான் என் அம்மாவிடம், அவர் கையால் பணம் வாங்குவேன். இன்று அவர் என்னுடன் இல்லை. அதனால் உங்களிடம் கேட்கிறேன் என்பார். 

அதுவரை தனக்கென யாரும் இல்லையென ஏங்கிக் கொண்டிருந்த அர்ச்சனாவிற்கு, ஜானி தனது அம்மா இடத்தில் அவரை வைத்திருப்பதை பார்க்கும்போது ஜானி மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அது காதலாக மாறுகிறது.. அர்ச்சனா ஜானியிடம் காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால் ஜானியோ தான் அர்ச்சனாவின் ரசிகர் என்றளவில் மட்டுமே பழகுவருவதால் அவரின் காதலை மறுக்கிறார். 

ஆனால் அர்ச்சனாவின் அன்பு அவரை இழகச் செய்கிறது. அர்ச்சனாவின் காதலை ஏற்கும் ஜானி தன் திருடுவதை விடுத்து திருந்தி வாழ முடிவெடுக்கிறார்.

ஆண்கள் முதல் ஈர்ப்பிலேயே காதல் கொள்வார்கள். அவர்கள் பெண்களை பார்க்கும் ஒரு பார்வையே காதல் செய்ய போதுமானது. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. பெண்களுக்கு முதல் பார்வையிலே ஆண்கள் மீது ஈர்ப்பு இருந்தாலும், அதை உடனடியாக வெளிகாட்டாமல், அந்த ஆண் தனக்கானவனா? என நீண்ட யோசனைக்கு பிறகே முடிவெடுப்பார்கள். இதை அப்படியே தீபாவின் கதாபாத்திரம் மூலமாக காட்சிபடுத்தியிருப்பார்.

வித்யாசாகர் (ரஜினி), தன் வீட்டில் வேலை பார்க்கும் பாமா(தீபா) மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. பாமா அழகான பெண். அவரை வித்யாசாகர் நேசிக்கத் துவங்குகிறார். அவரது உடை கந்தலாக இருப்பதைப் பார்த்து துணிக்கடைக்கு அழைத்து செல்கிறார். அங்கே பாமாவிற்கு தான் எடுக்கும் ஒவ்வொரு உடையை விட, அங்கிருக்கும் மற்ற உடைகள் சிறப்பானதாக தோன்றுகிறது. அந்தக் காட்சியிலேயே பாமா யார் என்பது நமக்கு தெரிந்துவிடுகிறது. வித்யாசாகர் அவர் மீது காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் வித்யாசாகரை விட தகுதியில் உயர்ந்தவர் கிடைத்ததும் அவருடன் செல்கிறார். 

இது வித்யாசாகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. பாமாவையும் அவரது புதிய காதலரையும் கொலை செய்து தலைமறைவாகிறார். இந்தக் கொலை வழக்கு ஜானியின் மேல் விழுகிறது. ஒரு காதல் திருடனை திருந்தச் செய்கிறது. அதே காதல் ஒருவனை கொலைகாரனாக்குகிறது.  

மிகப் பெரிய சண்டைகளுக்கு வாய்ப்புள்ள கதை.ஆனால் படத்தில் ஒரு சண்டை காட்சி கூட இருக்காது. ஆக்ரோஷமான பஞ்ச் வசனங்கள் இருக்காது.  படத்தை உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் இசையின் மூலமாகவே நகர்த்தியிருப்பார் இயக்குநர் மகேந்திரன். பெரும்பாலும் வசனங்களுக்கு வேலையே இருக்காது.

அறிமுக காட்சியில் ஜானி ஒரு காருக்கு வண்ணம் பூசிக்கொண்டிருப்பார். பின்னணியில் வானொலியில் ஒரு அறிவிப்பு வரும். குறிப்பிட்ட எண் மற்றும் வண்ணம் கொண்ட காரை காணவில்லை என்று அந்த அறிவிப்பு சொல்லும். அந்த அறிவிப்பு வந்து கொண்டிருக்கும்போதே கார் முழுமையாக நமக்கு காட்டப்படும். வானொலி அறிவிப்பில் சொல்லப்பட்ட அதே வண்ணம், எண் கொண்ட கார். வசனமே இல்லாமல் ஜானி ஒரு திருடன் என்பது நமக்கு சொல்லப்பட்டுவிடும். 

கடற்கரையில் ஒரு லாங் ஷாட்டில் ஜானியும், அர்ச்சனாவும் பேசிக்கொண்டு வருவார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் பேசியதை பின்னணியில் ஒலிக்கும் இளையராஜாவின் இசை நமக்கு சொல்லிவிடும். பெரும்பாலான இடங்களில் வசனம் செய்ய வேண்டிய வேலையை இளையராஜா செய்வார். குறிப்பாக இந்தப் படத்தின் பின்னணி இசையை யுவன் 7ஜி ரெயின்போ காலனியிலும் பயன்படுத்தியிருப்பார். 

ஆரம்பத்தில் சொன்னது போல கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படத்தில் அனைத்து பாடல்களும் மெலொடி ரகம். படத்தில் கதாநாயகி ஸ்ரீதேவி மேடை பாடகி . அந்த வகையில் இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம். காற்றில் எந்தன் கீதம், என் வானிலே, ஒரு இனிய மனது உள்ளிட்ட பாடல்கள் இன்றளவிளும் பெரும்பாலோரின் விருப்பப் பாடல்கள், இந்த படத்தில் இடம் பெற்ற ஆசைய காத்துல தூது விட்டு பாடலில் கூட மெலோடி தான் மேலோங்கியிருக்கும்.   

படத்தின் ஒளிப்பதிவு கதப்பாதிரங்களின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கும். கேமரா படத்தில் எந்த இடத்திலும் அதிகம் நகராது.படத்தில் நிறைய காட்சிகள் புகைப்படதிற்கான அழகியலுடன் இருக்கும்.

ரஜினிகாந்த் தான் சிறந்த நடிகர் என்பதற்கு ஜானி ஒரு உதாரணம். இரண்டு விதமான கதாப்பாத்திரங்களை அவர் கையாண்டிருக்கும் விதம் ஆச்சரியப்படுத்தக் கூடியது. காரணம் அந்த நேரத்தில் ரஜினி ஒரே நேரத்தில் 4, 5 படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஜானி ரஜினிக்கு சில காட்சிகளில் மீசை அடர்த்தியாக இருக்கும். சில காட்சிகளில் நெற்றிக்கண் படத்தில் வருவது போல் மெல்லியதாக இருக்கும். அவரது தோற்றம் மாற்றமிருக்கும். ஆனால் நடிப்பில் மாற்றமிருக்காது. 
 
இந்த காரணங்கள் போதுமானது தமிழில் ஜானி ஒரு மாற்று சினிமா என்பதற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com