மகாநடிகரான மாஸ் ஹீரோ! : 'தளபதி' கொடுத்தத் தவிர்க்க முடியாத இடம்!

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த தளபதி படம் குறித்து சிறப்பு பார்வை
மகாநடிகரான மாஸ் ஹீரோ! : 'தளபதி' கொடுத்தத் தவிர்க்க முடியாத இடம்!

கிளாசிக் திரைப்படம் என்பது எப்போதுமே தன்னை போற்றி கொண்டாடக்கூடிய படமாக அறிவித்துக்கொள்ளும். அந்தவகையில் ரஜினிகாந்த் முதன்மை பாத்திரத்தில் நடித்து 1991-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான 'தளபதி' திரைப்படம் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. 

கடந்த நவம்பர் மாதம் இத்திரைப்படத்தின் 30-ஆம் ஆண்டு கொண்டாட்டமும் நடைபெற்றது.

மணிரத்னம் இயக்கிய முக்கிய திரைப்படங்களுள் ஒன்றாக 'தளபதி' தற்போது வரை இருந்து வருகிறது. இவர் இதற்கு முன்பு 'நாயகன்' என்ற கேங்ஸ்டர் திரைப்படத்தை உருவாக்கியிருந்தாலும், மகாபாரதம் என்ற புராணக் கதையில் வரும் கர்ணன் பாத்திரத்தைப் பின்னூட்டமாகக் கொண்டு நிஜ வாழ்வுடன் பொருந்தும் வகையிலான கேங்ஸ்டர் படமாக இருந்ததுதான் இப்படத்தைத் தனித்துக்காட்டுகிறது.

ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு 85 படங்கள் நடித்திருந்தார். எனினும் ரஜினிகாந்த் திரைப்பயணத்திலும் இன்றுவரை 'தளபதி' படத்திற்கு முக்கிய இடமுண்டு. 'தளபதி' ரஜினியை மாடலாக வைத்துத்தான் பின் நாளில் அனிமேஷனில் உருவான 'கோச்சடையான்' பாத்திரத்தின் உருவம் அமைக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்காக திரையரங்குகளில் அதிகாலைக் காட்சிகள் ஒளிபரப்பப்படுவது வழக்கம். 1991 நவம்பர் 5-ஆம் நாள் வெளியான இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து 15 நாள்கள் அதிகாலைக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. தமிழ் சினிமாவில் இத்தனை நாள்கள் அதிகாலைக் காட்சி ஒளிபரப்பப்பட்டதும் 'தளபதி' படத்திற்குத்தான்.

படத்தில் கர்ணனாக ரஜினிகாந்த் நடிக்கிறார். துரியோதனனாக மம்மூட்டி நட்டிக்கிறார். அர்ஜுனனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்று வெளியான விளம்பரங்கள்தான் இந்த திரைப்படத்தின் மீது இத்தனை பெரிய ஆரம்பக்கட்ட வரவேற்பு எழுந்ததற்கான முக்கிய காரணம். 

சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இக்காலகட்டத்திலும் ஒரு படத்திற்கு இத்தனை பெரிய ஓபனிங் கிடைக்கும் அளவிற்கான விளம்பரங்களைச் செய்யமுடிவதில்லை. அது சாத்தியமில்லை என்பது வேறு. அப்படி சாத்தியப்படுத்தினாலும், ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்காமல் இருக்க வேண்டியது மிக அவசியம். ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான கபாலி அதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் கதையிலும், இசையிலும், காட்சிகள் வழியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், வலுவான படமாக இருந்தது 'தளபதி'. பிரசவ வேதனையில் துடித்த இளம்பெண், குழந்தையை இறுக்கத்துடன் ரயிலில் வைத்துவிட்டு நகர்வதாய், ரயிலோசையில் தொடங்கும் படம், ஒரு ரயில் நிலையத்திலேயே முடியும். 

கர்ணன் சூரியனுக்குப் பிறந்ததால், படம் முழுக்க சூரியனின் ஆதாரக் காட்சிகள். சூர்யா என்ற பெயரில் வளரும் ரஜினிகாந்த். அதுவரை சிவப்பு நிறங்களில் இல்லாத தமிழ் சினிமாவின் டைட்டில் நிறங்கள், முழுக்க முழுக்க சிவப்பு நிறத்திலேயே வைக்கப்பட்டது. படம் நெடுகவும் முக்கியமான காட்சிகளிலெல்லாம் சூரிய ஒளி நேரடியாக கையாளப்பட்டிருக்கும். இளஞ்சிவப்பும் கருப்பும் சேர்ந்த நிறக்கலைவைதான் தளபதி படம். 

சூரியன் மறையும் மாலை நேரத்தில் காதலை முறித்துக்கொண்டு ரஜினிகாந்தை விட்டு ஷோபனா பிரிந்துசெல்லும்போது சூரியன் பின்புறம் இருக்க, இடுப்பில் கைவைத்துக்கொண்டு திரும்பிப்பார்க்கும் ரஜினிகாந்தின் காட்சியை யாராலும் மறந்திருக்க முடியாது. 

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ''நானுனை நீங்க மாட்டேன்..'' என்ற வரி இளையராஜாவின் இசையில் வயலினாகவும், புல்லாங்குழலாகவும் அப்போது ஒலிக்க மணிரத்னம் கையாண்டிருக்கும் மெளனம் இயக்கத்தின் உச்சம்.

 இப்படத்தில் வெளியான ''ராக்கம்மா கையத்தட்டு..'' பாடல் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. உலகில் அவசியம் கேட்க வேண்டிய ஆயிரம் பாடல்களின் வரிசையில் முதல் 10 இடத்தில் ஒன்றாக இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

போகி கொண்டாட்டத்தில் பாடப்படும் ''காட்டுக்குயிலு மனசுக்குள்ள..'' பாடல் உலகின் மிகப் பிரபலமான பாடல்கள் என பிபிசி வெளியிடுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இசைஞானியின் இசை ஒருபுறம் இதற்கு காரணமென்றால், ரஜினிகாந்த் - மம்மூட்டி சேர்ந்து ஆடியது மற்றொரு காரணம். ரஜினிக்கு எஸ்.பி.பி.யும், மம்மூட்டிக்கு யேசுதாஸும் என்று இந்தப் பாடலைப் பாடியிருப்பார்கள்.

அந்த ஆண்டில் ரஜினிகாந்துக்கு 'தர்மதுரை', 'நாட்டுக்கு ஒரு நல்லவன்', 'தளபதி' ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகியிருந்தன. இதில் தளபதி படத்தில்தான் நடிப்பிற்கு அதிகம் தீனிபோடும் காட்சிகள் இருந்தன. ரஜினியும் அதனை இயக்குநர் மணிரத்னத்தின் பாத்திரத்திற்குட்பட்டு சிறப்பாக செய்திருப்பார். 

 நண்பன் தேவாவுக்காக (மம்மூட்டி) எதையும் செய்யும் சூர்யா (ரஜினிகாந்த்) காதலி பிரிந்துசெல்லும்போது கூட அழாமல் மெளனம் காத்து நிற்பார். ஆனால் பிற்பாதியில் 'கலெக்டரை ஏன் கொல்லமாட்ட? என்று நண்பர் சந்தேகத்துடன் கேட்கும்போது, அது தாங்காமல் முட்டி நிற்கும் அழுகையோடு 'நட்புன்னா என்னனு தெரியுமா! நண்பன்னா என்னனு தெரியுமா! சூர்யானா என்னனு தெரியுமா?' என்று ஆக்ரோஷத்துடன் பேசும் காட்சிகள் புல்லரிக்க வைக்கும்.

'அடுத்தவங்க குழந்தைய நாம பாத்துக்கிட்டா, நம்ம குழந்தைய யாராச்சும் பாத்துப்பாங்கனு ஒரு நம்பிக்கைதான்' என்று மகனைத் தொலைத்த ஸ்ரீவித்யா சொல்ல ...'உன் குழந்தைக்கு என்ன தாயி, அவன் ராசா' என்று ஒரு பெண் சொல்லி முடிக்க.... அடுத்த காட்சியே ரஜினி, கைம்பெண்ணாக இருக்கும் பானுபிரியாவின் நிலைக்கு நான் தான் காரணம் என்ற குற்றவுணர்ச்சியில் தலைகுனிந்து நின்றுகொண்டிருப்பார்.

பின்னர் இதே காட்சி மம்முட்டியிடம் தொடரும். 'இந்த ஊர்ல நிறைய ஆம்பிளைங்க இருக்காங்க, அதனால நான் இந்த ஊரைவிட்டுபோறேன்' என்று பானுப்பிரியா சொல்லும்போது, மம்முட்டி, ரஜினியிடம் சென்று பானுப்பிரியாவிற்கு 'குங்குமம் வைடா' என்று சொல்வார். கருத்தியல் ரீதியாக இது பிற்போக்குத்தனமாக இருந்தாலும், நண்பன் சொன்ன வார்த்தைக்காக அதனை செய்யும் நட்பின் நம்பிக்கைதான் இதில் பிரதானப்படுத்த வேண்டியது. இக்காட்சியில் ரஜினிகாந்தின் தயக்கம் எதார்த்தமான நடிப்பாக வெளிப்பட்டிருக்கும். 

'கலக்டர் அம்மாதான் உனக்கும் அம்மா' என்று ஜெய்சங்கர் சொல்ல.... 'இல்ல. இருக்காது' என்று ரஜினி படும் தவிப்பும், அழுகையும் ரஜினியின் நடிப்பு திறமையை உலகுக்குக் காட்டும். 'இவங்க என் அம்மா இல்ல. என்ன காவால இருந்து எடுத்தாங்களே அவங்க என் அம்மா, பசிக்கும்போது சோறு போட்டாங்களே அவங்க என் அம்மா. இவங்க என் அம்மா இல்ல', என்று அழும்போது தன் அம்மாவை தெரிந்துகொண்ட சந்தோஷத்தையும், ஆனால் ரவுடியாக மாறிவிட்ட தன் வாழ்வையும் எண்ணிய துக்கத்தையும் அழுகையையாக வடிக்கும் ரஜினிகாந்தின் திறமையான நடிப்புகள் அடங்கிய காட்சிகள் அவை.

 'உன்ன ரயில்ல விட்டது அவ தப்பு இல்ல. அப்போ அவளுக்கு 14 வயசு. என்ன பன்றதுனு தெரியல... அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் அவ அழாம இருந்ததே கிடையாது' என்று ஜெய்சங்கர் சொல்லி முடிக்கும்போது குழப்பத்துடன் ரஜினி சிந்தும் கண்ணீர்த்துளிகள்... ''சின்னத் தாயவள்..'' பாடலில் கடவுளிடம் வேண்டி நிற்கும்போது ஸ்ரீவித்யா சிந்தும் கண்ணீர்த் துளிகளின்போது ரஜினிக்கு விடையாக கிடைக்கும்...

வாழ்வில் தனக்காக யாருமில்லாதபோது உடன்வந்து நின்ற நண்பனா?, இத்தனையாண்டுகள் கழித்து கிடைத்துள்ள குடும்பமா? என்ற இக்கட்டான சூழலில் 'இந்த உயிர் உனக்காகத் தான் எடுத்துக்கோ' என்று நண்பன் பக்கம் நிற்கும் ரஜினிகாந்த் நம் எல்லோர் மனதிலும் நிற்கிறார்.

ஒரு பாத்திரம் படம் முடிந்து இத்தனையாண்டுகள் கழித்தும் மனதில் நிற்கிறது என்றால், அது அந்த பாத்திரத்தில் நடித்த, பாத்திரத்திற்காக உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் போய்ச்சேரும் அழியாத அங்கீகாரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com