''சூர்யாவை நன்றியோடு நினைவுகூர்வோம்'': நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி

நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
''சூர்யாவை நன்றியோடு நினைவுகூர்வோம்'': நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி

சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். 

ஜெய் பீம் படத்தால் உண்மையான ராசாக்கண்ணுவின் மனைவியான பார்வதியம்மாள் கவனம் பெற்றார். அவருக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்கு வீடு கட்டித்தருவதாக அறிவித்தார். 

இந்த நிலையில், தமிழ் நாடு அரசு சார்பாக பார்வதியம்மாளுக்கு சேர வேண்டிய நிலம் அவருக்கு வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் அவருக்கு வீடு கட்டித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பார்வதியம்மாள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். 

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''ஜெய் பீம் படத்தின் உண்மைக் கதை நாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதியம்மாள் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதை அறிந்த பிறகு பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக்கொடுப்பதாக உறுதியளித்திருந்தேன். 

பார்வதி அம்மாவை நேரில் சந்தித்தும் அவரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி கேட்டுக்கொண்டனர். 

அதன் படி சில நாட்களுக்குமுன் கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்தோம். விரைவில் வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் இருந்த நிலையில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ச்சியைடந்தேன். 

பார்வதியம்மாளின் இன்றைய வறுமை நிலையை அறிந்து அவருக்கு வாழ்விடத்தைக் கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக நான் ஒதுக்கிய ரூ.5 லட்சத்துடன் மேலும் ரூ.3 லட்சம் சேர்த்து பார்வதி அம்மாள், அவருடைய மகள் மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளேன். 

பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய் பீம் படக்குழுவினருக்கும், ஜெய் பீம் படத்தை தயாரித்த சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ.ஞானவேல் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்வோம்''. என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com