பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி (76), உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார்.
பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்


பெங்களூரு: தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஜெயந்தி (76), உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட 6 மொழிகளில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகை ஜெயந்தி. கடந்த சில ஆண்டுகளாக முதுமை காரணமான உடல்நலக் குறைபாடுகளுக்கு இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பெங்களூரு, ஜெயநகரில் உள்ள தனது வீட்டில் திங்கள்கிழமை நடிகை ஜெயந்தி காலமானார். 

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். கன்னட திரையுலகின் பிரபலங்கள் நடிகை ஜெயந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்பட்டது.

வாழ்க்கை குறிப்பு: கர்நாடக மாநிலம், பெல்லாரியில் 1945-ஆம் ஆண்டு ஜன. 6}ஆம் தேதி ஆங்கில பேராசிரியர் பாலசுப்பிரமணியம், சந்தானலட்சுமி தம்பதிக்கு கமலாகுமாரி (எ) ஜெயந்தி மகளாகப் பிறந்தார். 

1963}ஆம் ஆண்டு வெளியான "ஜேனுகூடு' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். அந்தப் படம் வணிகரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால், திரைத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. அதன்பிறகு, நடிகர் ராஜ்குமாருடன் இணைந்து "சந்தனவள்ளிய தோட்டா' படத்தில் நடித்தார். நடிகர் ராஜ்குமாருடன் இணைந்து 40 படங்களில் நடித்திருக்கிறார். இதில் பெரும்பாலான படங்கள் பெரும் வெற்றி பெற்றன. 
கன்னடம் தவிர, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயந்தி. தேசிய விருதையும் பெற்றுள்ளார்.  

சுமார் 20 ஆண்டுகள் வெள்ளித் திரையில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர். இப்படி பல மொழிகளில் நடித்திருந்தாலும் கன்னடத் திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தினார். 7 முறை கர்நாடக அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார்.

பிரபல நடிகர்களான எம்.ஜி.ஆர்., நாகேஷ், ஜெமினி கணேசன், ராஜ்குமார், என்.டி.ராமராவ், முத்துராமன், ஜெய்சங்கர் போன்றவர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் இவர் நடித்த எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா, படகோட்டி, முகராசி போன்ற படங்கள் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதவை.

முதல்வர் இரங்கல்: முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நடிகை ஜெயந்தியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சிஅடைந்தேன். திரை உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அவரது மறைவால் கன்னடத் திரையுலகத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

அவரது மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com