
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - டாக்டர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன. தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. தற்போது - டாக்டர், அயலான் என இரு படங்களில் அவர் நடித்து முடித்துள்ளார்.
டாக்டர் படம் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு ரமலான் சமயத்தில் வெளியாகும் என அதன் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டது. அனிருத் இசையில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக அதன் வெளியீடு மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டாக்டர் படத்தின் அப்டேட் குறித்து தினமும் கேட்கிறீர்கள். முழுப் படமும் கையில் உள்ள நிலையில் கரோனாவால் ஏற்பட்ட வணிக ரீதியிலான கட்டுப்பாடுகளை நான் தாங்கிக்கொண்டிருக்கிறேன். படம் நல்ல முறையில் வெளிவர என் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து வருகிறேன். மற்றொரு பக்கம் கரோனாவால் நமக்கு நெருக்கமானவர்களை இழந்து வருகிறோம்.
எதுவும் உறுதியில்லாத இதுபோன்ற தருணங்களில் டாக்டர் படத்தின் வெளியீடு பற்றி பேச விரும்பவில்லை. இதைப் புரிந்துகொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.