கறுப்பு வெள்ளை கலர்: இவர் கீர்த்தி சுரேஷ் அல்ல!

ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்தார் அம்மா, தங்கையாக நடித்திருக்கிறார் மகள், 40 ஆண்டுகளுக்குப் பிறகு!
கீர்த்தி சுரேஷ் அல்ல!
கீர்த்தி சுரேஷ் அல்ல!

நடிகை கீர்த்தி சுரேஷுக்குக் கறுப்பு - வெள்ளைப் படமா? ஒருவேளை மகாநடி பட ஸ்டில்லாக இருக்குமோ? என்னடா, திரைச் செய்திகளுக்கு வந்த சோதனை என்றிருக்கிறதா? அல்ல, இவர் கீர்த்தி சுரேஷ் அல்ல, அவருடைய அம்மா மேனகா!

1980 ஜனவரியில் பொங்கலையொட்டி இவருடைய முதல் திரைப்படம் - ராமாயி வயசுக்கு வந்துட்டா - வெளியானது. முழுக்க முழுக்கக் கிராமியப் படம். இயக்குநர் வேந்தன்பட்டி அழகப்பன்.

முதல் படத்திலேயே பரவலாகத் தமிழ் ரசிகர்களின் கவனம்பெற்றார் மேனகா.

வீட்டில் வைத்த பெயர் பத்மாவதி. திரைப்படத்தில் நடிப்பதற்காகத் தான் இந்தப் பெயர் மாற்றம். நாளிதழ் ஒன்றில் திரைப்படத்தில் நடிக்கப் புதுமுகம் தேவை என்று ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார் இயக்குநர்  வேந்தன்பட்டி அழகப்பன்.  அந்தக் காலத்தில் - சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் - இப்படியெல்லாமும் விளம்பரங்கள் அவ்வப்போது வரும்.

இந்தக் காலகட்டத்தில் தமக்கு ஏற்கெனவே அறிமுகமுள்ள இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்தைப் பார்த்து வாய்ப்புக் கேட்கச் சென்றிருக்கிறார் பத்மாவதி. அவரோ, வேந்தன்பட்டி அழகப்பனைப் பார்க்குமாறு சொல்லி பத்மாவதியை அனுப்பிவைத்தார்.

பத்மாவதியின் வெகுளித்தனமான முகத்தைப் பார்த்த உடனே வேந்தன்பட்டி அழகப்பனுக்குப் பிடித்துப் போக, ராமாயி வயசுக்கு வந்துட்டா படத்தின் கதாநாயகியானார் பத்மாவதி. அவருக்கு மேனகா என்ற புதிய பெயரையும் சூட்டினார் அழகப்பன்.

வத்தலக்குண்டுக்கு அருகே ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு. கிராமத்துப்  பெண்ணாக மேனகா நடித்ததைக் கண்டு ஊரே அதிசயித்தது. அவர்களில் ஒருவராகவே வலம்வந்தார் மேனகா.

அப்போதே இவருக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று நேர்காணல்களில் குறிப்பிட்டார் இயக்குநர் வேந்தன்பட்டி அழகப்பன்.

அதேபோல, அவர் நடித்துக்கொண்டிருந்த குறுகிய காலத்தில்  - ஆறு, ஏழு ஆண்டுகள் - 116 படங்களில் நடித்தார் மேனகா. இவற்றில் மலையாளம் அதிகம், அடுத்து தமிழ். தெலுங்கு, ஹிந்திப் படங்களும் இருக்கின்றன.

மலையாளப் பட இயக்குநர் பரதன் இயக்கத்தில் தமிழில் வெளியான  இவருடைய இரண்டாவது படமான சாவித்திரி மிக நன்றாகவே  இருக்கும் (யூடியூபில் இருக்கிறது). இந்தப் படத்துக்கு எம்.எஸ்.வி. இசையில் அத்தனை பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் சாவித்திரியின் கதையை ஏற்கக் கூடிய நிலையில் தமிழ் ரசிகர்கள் இல்லை. படம் ஊற்றிக்கொண்டது. ஆனாலும் மேனகா நிலைத்தார்.

இரட்டை வேஷங்களில் ரஜினிகாந்த் நடித்த நெற்றிக் கண் படத்தில் மகன் ரஜினிகாந்த்துக்கு ஜோடி மேனகாதான் (1981!). 40 ஆண்டுகளுக்குப் பின் அதே ரஜினிகாந்தின் தங்கையாக அண்ணாத்தேயில் நடித்திருக்கிறார் அவருடைய மகள் கீர்த்தி சுரேஷ் (2021!) திரையுலகில் சில பேர் மட்டும்தான்  வயசே ஆகாமல் மார்க்கண்டேயர்களாக  இருக்கிறார்கள், கொடுத்துவைத்தவர்கள்!

ராமாயி வயசுக்கு வந்துட்டா நடித்த காலத்தில் சினிமா எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியொன்றில் மேனகா சொல்கிறார்:

நெற்றிக்கண் படத்தில் ரஜினி - மேனகா
நெற்றிக்கண் படத்தில் ரஜினி - மேனகா

"சிறுவயதிலிருந்தே நான் இந்திப் படங்களைப் பார்ப்பேன். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருந்ததே இல்லை. அந்தப் படங்கள் என்னைக் கவர்ந்ததற்குக் காரணம் பிரமாண்டமான காட்சி ஜோடனைகளும் விறுவிறுப்பான மனதைக் கவரும் இசையும்தான்.  அதிலும் குறிப்பாக ஆர்.டி. பர்மன் இசை என்றால் எனக்கு உயிர்.

"நடிப்பில் என்னைக் கவர்ந்தவர்கள் அமிதாப் பச்சனும் ஜெயாபாதுரியும். தமிழில் எம்ஜிஆர் படங்களை ரசித்துப் பார்ப்பேன்.

"நான் சிறப்பாக நடிப்பதற்குக் காரணம் என் அப்பாதான். அவர் ஒரு மிகச் சிறந்த நடிகர். அவருக்குக் கோபம் வந்தால் பார்க்க வேண்டுமே,  அப்படிப்பட்ட நடிப்பில் பாதியாவது எனக்கு வராதா என்ன?

"கோலங்கள் மலையாளப் படப்பிடிப்பின்போது கொல்லத்தில் ஓர் ஆற்றில் குளிக்கும்போது ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டேன். நீந்தத் தெரியாததால்  நிறைய நீரைக் குடித்துவிட்டுப் பாதி பரலோகம் போய்விட்ட என்னைக் காப்பாற்றி இழுத்துக்கொண்டு வந்தவர் ஒரு காஸ்ட்யூமர்."

அண்ணாத்த படத்தில் ரஜினி - கீர்த்தி சுரேஷ்
அண்ணாத்த படத்தில் ரஜினி - கீர்த்தி சுரேஷ்

பின்னால், 1987வாக்கில் மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் குமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு நடிப்பிலிருந்து விலகினார் மேனகா.

இப்போது நாம் மேனகாவின் அச்சு அசலான நகலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் - அவருடைய மகள் கீர்த்தி சுரேஷ்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com