நடிகர் புனித்ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்

மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும், பிரபல நடிகருமான புனித் ராஜ்குமார் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்

பெங்களூரு: மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும், பிரபல நடிகருமான புனித் ராஜ்குமார் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார்.

கன்னட திரைப்படத்துறையில் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் ராஜ்குமார். இவரது இளைய மகன் நடிகர் புனித்ராஜ்குமார் (46). பவர்ஸ்டார் என்ற அடைமொழியுடன் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் புனித்ராஜ்குமார். வெள்ளிக்கிழமை காலை தசாசிவநகரில் உள்ள உடற்பயிற்சிக்கூடத்தில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தப்போது, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி வசந்தநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வரும் வழியில் அவரது இதயத்துடிப்பு நின்றுள்ளது. இருப்பினும் அவருக்கு தனியார் மருத்துவமனையில் 3 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அது பலனளிக்காமல், அவர் இறந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்தனர்.

1975-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி சென்னையில் பிறந்த புனித்ராஜ்குமார், சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக கன்னடத் திரைப்படங்களில் நடித்து வந்தார். பெட்டத ஹூ திரைப்படத்திற்காக அவருக்கு குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது. பிரேமத கானிகே மூலம் அரிதாரம் பூசி நடித்த அவர் இதுவரை 49 திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்பு படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமான அவர், அபி, வீரகன்னடிகா, அஜயா, ராம், ஜாக்கி, அன்னாபாண்ட், ராஜ்குமாரா உள்பட இதுவரை 28 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 1999-ஆம் ஆண்டு அஸ்வினி என்பவரை திருமணம் செய்து கொண்ட அவருக்கு, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நடிகர் புனித்ராஜ்குமார் ஏற்கெனவே தனது கண்களை தானம் செய்திருந்ததையடுத்து, அவரது கண்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. 

இதையும் படிக்கலாமே.. கீழடி அகழாய்வுத் தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மருத்துவமனையிலிருந்து தசாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்ட  அவரது உடல், பின்னர் 5 மணியளவில் கன்டீருவா உள்விளையாட்டு அரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உடல் ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக‌ வைக்கப்பட்டது.

நடிகர் புனித்ராஜ்குமாரின் உடலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் ஆர்.அசோக், வி.சோமண்ணா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி, அவரது மகன் விஜயேந்திரா, நடிகர்கள் யஷ், தர்ஷன், துருவா சர்ஜா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகரும், அவரது அண்ணனுமான சிவராஜ்குமார், நடிகர் தர்ஷன், நடிகையும், முன்னாள் அமைச்சருமான‌ ஜெயமாலா உள்ளிட்ட நடிகர்கள், அரசியவாதிகள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். 
சனிக்கிழமை நடிகர் புனித்ராஜ்குமாரின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகௌடா, முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திராசேவாக், ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் புனித்ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் பசவராஜ்பொம்மை பின்னர்  செய்தியாளர்களிடம் கூறியது: அரசு முழுமரியாதையுடன் புனித்ராஜ்குமாரின் இறுதிச்சடங்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சனிக்கிழமை வரை புனித்ராஜ்குமாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கன்டீருவா உள்விளையாட்டு அரங்கத்தில் வைக்கப்படும். பின்னர் அவரது குடும்பத்தினர் முடிவு செய்யும் இடத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும். அவரது ரசிகர்கள் அமைதியாக புனித்ராஜ்குமாரின் இறுதிச் சடங்கு நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இளைஞர்களின் அடையாளமாகத் திகழ்ந்த‌ புனித்ராஜ்குமார் மறைவு திரைத்துறைக்கு மட்டுமின்றி நாட்டிற்கே பேரிழப்பாகும். வெள்ளிக்கிழமை என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு புனித்ராஜ்குமார் கேட்டிருந்தார். அவர் என்னை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தேன். அதற்குள் அவர் மறைந்துள்ளது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com