''பெரியவரே.. பெரியாரே''! 'இனியா' சீரியலில் பெண்களை ஈர்க்கும் பெரியார் கருத்துகள்!

''இனியா'' தொடரில் பெரியாரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைக்கப்பட்ட காட்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
''பெரியவரே.. பெரியாரே''! 'இனியா' சீரியலில் பெண்களை ஈர்க்கும் பெரியார் கருத்துகள்!


சின்னத்திரை தொடர்களில் இறைவழிபாடு, பரிகாரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், ''இனியா'' தொடரில் பெரியாரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைக்கப்பட்ட காட்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஆல்யா மானசா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் 'இனியா' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடருக்குப் பிறகு ஆல்யா மானசா நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார். சமீபத்தில் இரண்டாவது குழந்தையை பிறந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'இனியா' தொடரில் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சின்னத்திரை தொடர்கள் நாள்தோறும் மக்களை அவர்களின் இல்லங்களிலேயே சென்று சந்திக்கிறது. இதனால் அதில் வரும் கருத்துகள் பெருமளவு மக்களிடம் சென்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சீரியல்களில் நடிகைகள் கட்டிவரும் புடவை, அணிகலன்களை தேடித்தேடி பெண்கள் வாங்குவதெல்லாம் அரங்கேறியது. 

அந்தவகையில் தற்போது 'இனியா' தொடரில், பெரியாரின் கருத்துகள் அடங்கிய வசனம் காட்சிகளாக இடம் பெற்றுள்ளது பலரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

கோயிலுக்குச் சென்ற நடிகை பிரவீனா, தேங்காயை உடைக்காமல் வீட்டுக்கு கொண்டு செல்லத் தயங்குவார். அப்போது ஆட்டோவின் கண்ணாடியில் பெரியார் ஈ.வே.ராமசாமியின் புகைப்படம் ஒட்டியிருக்கும். உடனே பெரியாரின் புகைப்படத்துக்கு தேங்காய் உடைத்து ஊதுபத்தி ஏற்றுவார். அப்போது அவர் பேசும் வசனங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

பொம்பளைங்க அடுப்படிய விட்டு வெளிய வரனும்னு சொல்லியிருக்கீங்களாமே, இனிமேலாச்சும் நான் உங்களப் படிக்குறேன். உங்களப் படிச்சிருந்தா என் வாழ்க்கை அடுப்படியிலயே போயிருக்காதோ என்னவோ? பெண்கள் அடுப்படிய விட்டு வெளிய வரனும். சுதந்திரம்னா என்னனு பொண்ணுங்க அனுபவிச்சி பாக்கனும் என்று அவர் செய்த காரியங்களின் தீவிரத்தை உணரும் வகையில் அந்த காட்சி அமைந்திருக்கும்.

அப்போது ஆட்டோ ஓட்டுநர் வெளியே வந்து, கடவுளே இல்லனு சொன்னவருக்கு, தேங்காய் உடைக்குறியேமா, விட்டா கோயில் கட்டு கும்பாபிஷேகம் செய்வீங்க போல என்பார். 

அதற்கு, சாமிய இவருக்கு புடிக்காம போயிருக்கலாம். ஆனா சாமிக்கு இவர புடிச்சிருக்கே. அதனாலதான் 94 வயசு வரைக்கும் வாழ்ந்துட்டு போயிருக்காரு. எல்லாரும் சாமிதான் என்று நகர்வார். 

இந்த காட்சிக்கு சமூக வலைதளங்களில் பலரிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

சின்னத்திரை தொடர்கள் என்றாலே வழிபாடும் பரிகாரங்களும்தான் என்ற வழக்கத்துக்கு மாற்றாக 'இனியா' தொடரின் இந்த காட்சிகள் அமைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com