அரசியல் சர்ச்சைகளும் புதிய படங்களும்: 2022-ல் என்ன செய்தார் இளையராஜா?

இந்த வருடம் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்றார். காசி- தமிழ் சங்கம நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அரசியல் சர்ச்சைகளும் புதிய படங்களும்: 2022-ல் என்ன செய்தார் இளையராஜா?


இந்த வருடம் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்றார். காசி- தமிழ் சங்கம நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 13 வருடங்களுக்குப் பிறகு சகோதரர் கங்கை அமரனை நேரில் சந்தித்து உரையாடினார். துபையில் உள்ள ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு வருகை தந்தார். வழக்கம்போல இந்த வருடமும் சர்ச்சைகளில் இளையராஜாவின் பெயர் அடிபட்டது. 

இந்த வருடம் இளையராஜா இசையமைப்பில் மருதா, கடைசி விவசாயி, கிளாப், அக்கா குருவி, மாயோன், மாமனிதன் ஆகிய தமிழ்ப் படங்கள் வெளியாகின. 

2022-ல் இளையராஜாவை மையப்படுத்திய செய்திகள் இவை:

ஜனவரி 7: இளையராஜாவுடன் இணைந்த சுசி கணேசன்

பிரபல இயக்குநர் சுசி கணேசன் முதல்முறையாக இளையராஜாவுடன் இணைகிறார். வஞ்சம் தீர்த்தாயடா என்கிற சுசி கணேசன் இயக்கும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாக ட்விட்டரில் சுசி கணேசன் தெரிவித்தார். 

ஜனவரி 24: இளையராஜாவின் முதல் மாணவர்

இளையராஜாவின் முதல் மாணவர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் லிடியன் நாதஸ்வரம்.

கடந்த 2019-ம் ஆண்டு சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பியானோ திறமையை வெளிப்படுத்தி உலகளவில் கவனம் ஈர்த்தார் சென்னையைச் சேர்ந்த 13 வயது லிடியன் நாதஸ்வரம். அந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் லிடியன் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 6 கோடியே 96 லட்சம் பரிசுத்தொகையை வென்றார். லிடியனின் தந்தை வர்ஷன் சதீஷ் இசையமைப்பாளராக உள்ளார். மேலும், லிடியனும் இசையமைப்பாளராகியுள்ளார். பிரபல மலையாள நடிகர் மோகன் லால் இயக்கும் Barroz என்கிற 3டி படத்துக்கு இசையமைக்கிறார் லிடியன். அத்கன் சத்கன் (Atkan Chatkan) என்கிற ஹிந்திப் படத்தில் நடித்துள்ளார். 

ட்விட்டரில் லிடியன் கூறியதாவது: 

என்னுடைய இசை ஆசிரியர், மேஸ்ட்ரோ இளையராஜா அங்கிள் இன்று என்னிடம் கூறினார், நான் தான் அவருடைய முதல் மற்றும் ஒரே மாணவனாம். இதை மகிழ்ச்சியுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். ஒவ்வொரு நாளும் அன்பும் அக்கறையுடனும் எனக்குக் கற்றுத் தருகிறார் என்றார். 

பிப்ரவரி 6: லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா

வசீகர குரலால் தெற்காசிய மக்களைப் பல தலைமுறைகளாக மகிழ்வித்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா் (92), மும்பையில் மறைந்தாா். அரசு மரியாதையுடன் மும்பையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமா் மோடி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனைத் தலைவா் ராஜ் தாக்கரே, நடிகா்கள் ஷாருக்கான், அமீா் கான், கிரிக்கெட் வீரா் டெண்டுல்கா் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினா். அவரது மறைவுக்கு மத்திய அரசு இரண்டு நாள் துக்கம் அறிவித்துள்ளது. கடந்த 80 ஆண்டுகளில் தமிழ், ஹிந்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 36 இந்திய மொழிகளில் 25,000-க்கும் அதிகமான பாடல்களை அவா் பாடியுள்ளாா்.  பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே மற்றும் பல தேசிய விருதுகளையும், பல திரைப்பட விருதுகளையும் லதா மங்கேஷ்கா் பெற்றுள்ளாா்.

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விடியோ வெளியிட்டு இளையராஜா கூறியதாவது: 

இந்தியத் திரைப்பட இசையுலக வரலாற்றில் கடந்த 60, 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய தெய்வீகக் குரலால் உலக மக்களையெல்லாம் மயக்கி தன் வசத்தில் வைத்திருந்த லதா மங்கேஷ்கரின் மறைவு என்னுடைய மனத்தில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வேதனையை எப்படிப் போக்குவேன் எனத் தெரியவில்லை. அவருடைய இழப்பு இசை உலகத்துக்கு மட்டுமல்ல, இந்த உலகுக்கே மாபெரும் இழப்பாகும் என்றார். 

பிப்ரவரி 9: சென்னையில் ராஜா இசைக் கச்சேரி

ராக் வித் ராஜா என்கிற இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பற்றி அறிவிப்பு வெளியானது. மார்ச் மாதம் இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

பிப்ரவரி 14: இளையராஜாவின் 1422-வது படம் அறிவிப்பு

காதலர் தினத்தன்று இளையராஜாவின் 1422-வது படம் குறித்து அறிவிக்கப்பட்டது. 

ஏ பியூட்டிஃபுல் பிரேக்அப் என்கிற ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. அஜித்வாசன் இயக்கிய இப்படத்தில் கிரிஷ், மாடில்டா போன்றோர் நடித்துள்ளார்கள்.

பிப்ரவரி 16: 13 வருடங்களுக்குப் பிறகு இணைந்த சகோதரர்கள்

இன்று நடந்த சந்திப்பு... இறை அருளுக்கு நன்றி… உறவுகள் தொடர்கதை என்று ட்வீட் வெளியிட்டு இளையராஜாவுடன் இணைந்து எடுத்த படத்தைப் பகிர்ந்தார் அவருடைய சகோதரர் கங்கை அமரன். 13 வருடங்களுக்குப் பிறகு இருவரும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்கள். 

பிப்ரவரி 20: விரைவில் ஹவ் டு நேம் இட் 2

ஹவ் டு நேம் இட் இசை ஆல்பத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதாக இளையராஜா தெரிவித்தார். 

திரைப்படங்களில் எல்லாம் 2-ம் பாகம் வரும்போது இசையிலும் ஏன் வரக்கூடாது என ஒரு யோசனை வந்தது. அதனால் ஹவ் டு நேம் இட் 2 சீக்கிரமே வரப்போகிறது எனத் தகவல் தெரிவித்தார் இளையராஜா. 

பிப்ரவரி 23: துபையில் இசை நிகழ்ச்சி

மார்ச் 5 அன்று துபையில் எக்ஸ்போ 2022-ல் தன்னுடைய இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார் இளையராஜா. 

மார்ச் 6: இளையராஜாவுக்குக் கோரிக்கை வைத்த ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மானின் ஒரு ட்வீட் ராஜா, ரஹ்மான் என இரு தரப்பு ரசிகர்களையும் ஆச்சர்யப்பட வைத்தது.

எங்களுடைய ஃபிர்டாஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வருங்காலத்தில் எங்களுடைய ஸ்டூடியோவுக்காகப் பாடல் ஒன்றை இசையமைப்பார் என நம்புகிறேன் என்று கூறி ராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்தார் ரஹ்மான். துபை இசை நிகழ்ச்சிக்காக அங்குச் சென்ற இளையராஜா, துபையில் உள்ள ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கும் சென்றார். அங்கு இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் ராஜாவுக்கு ரஹ்மான் கோரிக்கை வைத்ததும் ரசிகர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை அளித்தது.

அடுத்த நாளே, ரஹ்மானின் கோரிக்கையை ஏற்பதாகவும் விரைவில் இசைப்பணியைத் தொடங்குவதாகவும் ராஜா ட்வீட் வெளியிட்டார். 

மார்ச் 18: சென்னையில் நடைபெற்ற இளையராஜா இசை நிகழ்ச்சி

இளையராஜாவின் ராக் வித் ராஜா இசை நிகழ்ச்சி சென்னையில் தீவுத்திடலில் நடைபெற்றது. இரு வருடங்களுக்குப் பிறகு சென்னையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றார்கள். இரவு ஏழு மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி இரவு 12 மணிக்குப் பிறகும் நடைபெற்றது. 

ஏப்ரல் 2: இளையராஜாவின் இசைக்குச் சர்வதேச விருது

ஆம்ஸ்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த அசல் இசைக்கான விருது இளையராஜா இசையமைத்த ஆங்கிலப் படத்துக்கு அறிவிக்கப்பட்டது. 

ஏ பியூட்டிஃபுல் பிரேக்அப் என்கிற ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. அஜித்வாசன் இயக்கிய இப்படத்தில் கிரிஷ், மாடில்டா போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் பின்னணி இசைக்கு ஆம்ஸ்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 4: இளையராஜா மேல்முறையீட்டு வழக்கு:  இசை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

கடந்த 1980-களில் வெளியான இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களின் இசையைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்து இசையமைப்பாளா் இளையராஜா தொடுத்த மேல் முறையீட்டு மனுவுக்கு இந்தியன் ரெக்காா்டு உள்ளிட்ட 3 இசை நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இளையராஜா இசையமைத்து, கடந்த 1978 முதல் 1980 வரையிலான ஆண்டுகளில் வெளியான 20 தமிழ், 5 தெலுங்கு, 3 கன்னடம், 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களின் இசைப் பணிகளை அந்தப் படங்களின் தயாரிப்பாளா்களிடமிருந்து காப்புரிமை பெற்றுள்ளதால், அந்தப் படங்களின் இசையையோ, பாட்டுகளையோ பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரி சென்னை அண்ணா சாலையிலுள்ள இந்தியன் ரெக்காா்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த 30 படங்களின் இசை, பாடல்களைப் பயன்படுத்த இளையராஜா மற்றும் மலேசியாவைச் சோ்ந்த அகி மியூசிக், ஹரியாணாவை சோ்ந்த யுனைசிஸ் இன்போ சொலியூஷன்ஸ் ஆகிய இரு மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்து 2020 பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து இளையராஜா தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், படத் தயாரிப்பாளா்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியன் ரெக்காா்டு உற்பத்தி நிறுவனத்துக்கு ஆதரவாக எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது.

படத் தயாரிப்பாளா்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளது. இசை, பாடல்களின் காப்புரிமை இசையமைப்பாளா்களுக்கே உள்ளது. அந்த வகையில் ஒரு படத்தின் இசை தொடா்பான பணிகளுக்கு முதல் உரிமையாளா் இசையமைப்பாளா் மட்டுமே. மேலும், இந்தியாவில் டிஜிட்டல் மீடியா உரிமம் என்பது 1996-ஆம் ஆண்டு முதல் தான் அமலில் உள்ளது. அந்த உரிமத்தை 1980-இல் வெளியான படங்களுக்கு கோர முடியாது என அதில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வில் நடைபெற்றது. அப்போது, இளையராஜா தரப்பில் வழக்குரைஞா்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோா் ஆஜராகி, இந்த வழக்கு வா்த்தகம் தொடா்பானது என்பதால், அதுதொடா்பான அமா்வே விசாரிக்க வேண்டும். ஆனால், தனி நீதிபதியின் உத்தரவு அந்த அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனா்.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடா்பாக இந்தியன் ரெக்காா்டு உற்பத்தி நிறுவனம், 2 இசை நிறுவனங்கள் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.

ஏப்ரல் 9: இளையராஜா இசையமைத்த காதல் செய் டிரெய்லர் வெளியானது 

கே. கணேசன் இயக்கத்தில் சுபாஷ், நேஹா, கணேசன், மனோ பாலா நடித்த காதல் செய் படத்துக்கு இசை - இளையராஜா. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. 

ஏப்ரல் 11: இளையராஜாவின் இசை பற்றி ஐஸ்வர்யா ரஜினி

இளையராஜாவுடன் ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார் ஐஸ்வர்யா ரஜினி. என்னுடைய திங்கள் கிழமை மதியம் இந்தளவுக்கு இசை ரீதியாகவும் மேஜிக்காகவும் இருக்க வாய்ப்பில்லை. அன்பான இளையராஜா அங்கிளுடன் நேரம் செலவழிப்பது எப்போதும் மகிழ்ச்சிகரமானது என்று ட்வீட் செய்தார் ஐஸ்வர்யா. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினி அடுத்து இயக்கும் படத்துக்கு ராஜா இசையமைப்பதாகத் தகவல் வெளியானது. 

ஐஸ்வர்யாவின் ட்வீட்டுக்குப் பதிலளித்த இளையராஜா, ஒருவருடைய வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறலாம். என்னுடைய அன்பு மட்டும் மாறாதது என்றார். 

ஏப்ரல் 15: மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட இளையராஜா, எழுந்த சர்ச்சை!

இளையராஜா பேசினால் மட்டுமல்ல எழுதினாலும் சிலசமயம்  சர்ச்சை ஏற்படும். 

அம்பேத்கர் அண்ட் மோடி என்கிற நூலுக்கு இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அம்பேத்கர், மோடி ஆகிய இருவருமே வறுமையையும் ஒடுக்கும் சமூக அமைப்பையும் அருகில் இருந்து பார்த்து அவற்றை உடைத்தெறிந்தவர்கள். இருவருமே இந்தியாவுக்காகப் பெரிய கனவு கண்டவர்கள். இருவருமே செயல்படுவதில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதிகள் என்று எழுதியிருந்தார். மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதுவதா என்று இளையராஜா மீது விமர்சனங்கள் எழுந்தன. முன்னுரை எழுதிய இளையராஜாவுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். 

இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவாக அவருடைய சகோதரர் கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறியதாவது:

இதுபற்றி இளையராஜாவிடம் பேசினேன். அதற்கு அவர், நான் என்னுடைய கருத்தைக் கூறினேன்.இதற்கு விமர்சனங்கள் வந்தால் ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய கருத்தைத் திரும்பப் பெற முடியாது. பதவிக்காக நான் மோடியைப் புகழவில்லை. நான் எந்தப் பதவியிலும் இல்லை. நான் பாஜகவிலும் இல்லை. தனிப்பட்ட முறையில் மோடி, அம்பேத்கரைப் பிடிக்கும். அதனால் முன்னுரையில் அவ்வாறு எழுதினேன் என்றார் என கங்கை அமரன் கூறினார். இதனால் மேலும் சர்ச்சை உருவானது. எனினும் சர்ச்சைகளுக்கு இளையராஜா எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

ஏப்ரல் 21: நான் உனை நீங்க மாட்டேன் என்று பாடிய ராஜா

முன்னுரை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் இளையராஜா ஒரு ட்வீட் வெளியிட்டார். நான் உனை நீங்க மாட்டேன், நீங்கினால் தூங்க மாட்டேன் என்கிற பாடல் வரிகளைப் பாடினார். 

ஏப்ரல் 22: இளையராஜாவின் காதல் செய் பாடல்கள் வெளியீடு

கே. கணேசன் இயக்கத்தில் சுபாஷ், நேஹா, கணேசன், மனோ பாலா நடித்த காதல் செய் படத்துக்கு இசை - இளையராஜா. இப்படத்தின் ஐந்து பாடல்கள் இன்று வெளியாகின. 

ஏப்ரல் 29: இளையராஜாவின் இசையைப் பாராட்டிய ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ பட இயக்குநர்

1997-ல் வெளிவந்த ஈரானியப் படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவனை இயக்கியவர், மஜித் மஜிதி. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. உலக சினிமா ஆர்வலர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்ட இந்தப் படம், தற்போது தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.

இளையராஜா இசையில் சாமி இயக்கத்தில் சில்ட்ரன் ஆஃப் ஹெவனின் தமிழ் ரீமேக், அக்கா குருவி என்கிற பெயரில் உருவாகியுள்ளது. மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துள்ளன. மாஹின் என்கிற சிறுவனும் டாவியா என்கிற சிறுமியும் இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களாக நடித்துள்ளார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களையும் இளையராஜா எழுதியுள்ளார். 

அக்கா குருவி படத்தைப் பார்த்த இயக்குநர் மஜித் மஜிதி, ஒரு பாராட்டுக் கடிதம் ஒன்றை படக்குழுவினருக்கு அனுப்பியுள்ளார். கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: என்னுடைய சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவாகியுள்ள அக்கா குருவி படத்தைப் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி. மூலப்படத்தில் உள்ள உணர்வுகளை, கதையை இப்படத்தில் கையாண்ட விதம் அற்புதமாக இருந்தது. மிக உண்மையான மறு உருவாக்கமாக படம் அமைந்துள்ளது. கிளைக்கதையாக வரும் காதல் கதை, உங்கள் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளதாக நம்புகிறேன். இப்படத்தின் இசையை மிகவும் ரசித்தேன். கதையின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புத இசை. முடிந்தால் உங்கள் அனைவரையும் சந்திக்கவும், இப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன்.  இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்று மஜித் மஜிதி தெரிவித்துள்ளதாகப் படக்குழு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. 

ஏப்ரல் 29: கேஜிஎஃப் 2 படம் பார்த்த இளையராஜா, கமல் ஹாசன் 

சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தை இளையராஜாவும் கமல் ஹாசனும் சென்னையில் கண்டுகளித்துள்ளார்கள். 

மே 4: இளையராஜா இசையமைத்த அக்கா குருவி பட டிரெய்லர் 

இளையராஜா இசையில் சாமி இயக்கியுள்ள அக்கா குருவி படத்தின் டிரெய்லர் வெளியானது.

மே 6: அக்கா குருவி பாடல்கள்

அக்கா குருவி படம் வெளியான நாளன்று (மே 6) படத்தின் அனைத்துப் பாடல்களும் இளையராஜாவின் யூடியூப் தளத்தில் மொத்தமாக வெளியிடப்பட்டன. அதற்கு முன்பு மூன்று பாடல்களும் தனித்தனியாக வெளியிடப்பட்டன. 

மே 24: சாமி ஏதாவது வேலை இருக்குதா?: இளையராஜாவிடம் கேட்ட ரஜினி

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்குக் காலை வருகை தந்தார் இளையராஜா. அதன்பிறகு இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையைப் பார்வையிட வந்தார் ரஜினி. இதுதொடர்பான செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை போயஸ் கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர். அப்போது இளையராஜா விடைபெறும்போது, சாமி ஏதாவது வேலை இருக்குதா என்று ரஜினிகாந்த் விசாரிக்க, என் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 2-ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடந்துகொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன் என இளையராஜா கூறியுள்ளார். அப்படியா... நானும் அங்கே வருகிறேன் என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்துச் சென்றார். ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ஒத்திகைப் பணிகளையும் சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த். இரண்டு மூன்று பாடல்களுக்குக் கைத்தட்டி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார் என்று கூறப்பட்டுள்ளது. 

மே 25: அமெரிக்க இணையத்தொடருக்கு தீம் இசை வழங்கிய இளையராஜா

நெட்பிளிக்ஸில் வெளியாகும் அமெரிக்க இணையத்தொடரான ஸ்டிரேஞ்சர் திங்ஸுக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தீம் இசை வழங்கியுள்ளார். இதன் விடியோ வெளியாகியுள்ளது. 

ஸ்டிரேஞ்சர் திங்ஸ் 4-ம் பாகத்தின் இணையத்தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இயக்கம் - டஃபர் பிரதர்ஸ். தமிழ், தெலுங்கிலும் இத்தொடரை ரசிகர்கள் காண முடியும். 

வழக்கமாகத் தனது படங்களைத் தவிர மற்ற படங்களின் இசையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத இளையராஜா, ஸ்டிரேஞ்சர் திங்ஸ் 4 தொடருக்கு தீம் இசையை வழங்கியுள்ளார். அதன் வழக்கமான பின்னணி இசையுடன் தன்னுடைய இசையையும் கலந்து தந்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஜூன் 5: இளையராஜாவுக்கு மரியாதை செலுத்திய ரஞ்சனி - காயத்ரி
 

பிரபல கர்நாடக இசைப் பாடகிகளான ரஞ்சனி - காயத்ரி ஆகிய இருவரும் கர்நாடக சங்கீதத்தை அடிப்படியாகக் கொண்ட இளையராஜாவின் பாடல்களை வைத்து இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்தினார்கள். இந்த விழாவில் இளையராஜா கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி நடந்த இரண்டு மணி நேரமும் இந்த உலகத்திலேயே நான் இல்லை என்று கூறி பாராட்டு தெரிவித்தார் இளையராஜா. 

ஜூன் 15: கடவுள் பணியில் இருக்கிறார் - விடியோவுடன் பிரபல இயக்குநர் ட்வீட்

பிரபல இயக்குநர் கிருஷ்ண வம்சி இயக்கி வரும் தெலுங்குப் படம் - ரங்க மார்த்தாண்டா. பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில் இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்தில் எடுக்கப்பட்ட காணொளிகளைப் பகிர்ந்தார் கிருஷ்ண வம்சி. இசைக்கலைஞர்களுக்குப் பாடலின் குறிப்புகள், இசையின் நுணுக்கங்கள் பற்றி இளையராஜா சொல்லித் தரும் தருணங்களாக அவை இருந்தன. பிறகு தன்னுடைய ட்வீட்டில், கடவுள் பணியில் இருக்கிறார். அமுதம் என்றார் கிருஷ்ண வம்சி. 

ஜூன் 19: எஸ்பிபி 75 நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா

விஜய் தொலைக்காட்சியில் எஸ்பிபி 75 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் இளையராஜா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்ச்சி ஜூன் 19 அன்று ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:

எஸ்பிபி 75. என்னை விட 5 வருடம் 2 நாள் தாமதமாகப் பிறந்துள்ளான். நீங்கள் என்ன பாடல் கேட்டாலும் நாங்கள் இருக்கிறோம். எங்களைத்தான் கேட்கிறீர்கள். இருவரும் பால்ய சிநேகிதர்கள். போடா வாடா என்று பேசுகிறவர்கள் தான். தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்பதற்காக நான் இசையமைத்த பாடல்களை எஸ்பிபியைப் பாட வைப்பேன். தயாரிப்பு நிறுவனங்களிடம் கொடுப்பதற்காக என் அண்ணன் பாஸ்கர் என்னிடம் பாடல்கள் கேட்டார். 4 பாடல்களை ஒலிப்பதிவு செய்தேன். 3 பாடல்களை எஸ்பிபியும் ஒரு பாடலை மலேசியா வாசுதேவனும் பாடினார்கள். அவ்வளவு நெருக்கமான நண்பர்கள் நாங்கள். ஒரே குடும்பம். எஸ்பிபியின் 75-வது பிறந்த நாளை அவருடைய மகன் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. எந்த நிகழ்ச்சிக்கும் போகாத நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் காரணமே, எனக்கும் எஸ்பிபிக்கும் இருக்கக்கூடிய நட்பும் அன்பும் அரவணைப்பும்தான். அது அப்படியே சரண் மீதும் எனக்கு உள்ளது. அவர் நன்றாக வரவேண்டும். நல்ல எதிர்காலம் அமையவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் எஸ்பிபி பாடிய இளமை எனும் பூங்காற்று பாடலின் சில வரிகளை இளையராஜா பாடிக்காட்டினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பல தருணங்களில் இளையராஜா கண்கலங்கினார். 

ஜூன் 24: இளையராஜா இசையமைத்த மாயோன் பட வெளியீடு

இளையராஜா இசையமைப்பில் உருவான மாயோன் படம் ஜூன் 24 அன்று வெளியானது. 

டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்தார். சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே.எஸ். ரவிக்குமார் போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - என். கிஷோர். 

ஜூன் 17: இளையராஜா என்னை அழைக்கவில்லை - இயக்குநர் சீனு ராமசாமி

விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த மாமனிதன் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி கூறியதாவது:

இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார் என்றதும் அவரால் மறக்க முடியாதது போல ஒரு விஷயத்தைச் செய்ய நினைத்தேன். அதனால் மாமனிதன் கதையைப் பண்ணைப்புரத்துக்கு மாற்றினேன். இளையராஜாவின் வீடு இருந்த தெருவில் கேமரா வைத்து படப்பிடிப்பைத் தொடங்கினேன். 

இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்திருக்கலாம். ஆனால் அவர் பிறந்த ஊரில் கேமரா வைத்த பெருமை எனக்குத்தான். இளையராஜா வாழ்ந்த ஊரைப் பதிவு செய்தேன். இக்காட்சிகளை இளையராஜா பார்த்தால் அவருடைய சிந்தனை எப்படித் தூண்டப்படும், அதனால் அவர் எப்படிப்பட்ட இசையை நமக்குத் தருவார் என்று நினைத்தேன். 

மேலும், யுவன் ஷங்கர் ராஜாவின் மீது இருந்த அன்பின் காரணமாக 37 நாள்களில் இந்தப் படத்தை முடித்துக்கொடுத்தேன். 

ஏற்கெனவே எடுக்கப்பட்ட படத்தை இளையராஜா பார்த்தார். பாடல்கள் பதிவுக்கும் பின்னணி இசை சேர்ப்புக்கும் நான் அழைக்கப்படவில்லை. அது ஏன் என எனக்குத் தெரியவில்லை. என்னிடம் ஒப்பந்தம்போடும்போதே இளையராஜாவுக்குப் பிடித்த கவிஞர்களுடன் தான் அவர் வேலை செய்வார் என்று சொல்லிவிட்டார்கள். நானும் ஒப்புக்கொண்டேன். என் படத்தில் வைரமுத்து தொடர்ந்து பாடல் எழுதியிருக்கிறார். யுவன் இசையிலும்தான் வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார். யுவனுடன் மட்டும் நீங்கள் சேருவீர்கள். என்னை மட்டும் தவிர்க்கிறீர்கள். இது என்ன நியாயம்? இது எனக்கு எவ்வளவு தவிப்பாக இருக்கும்?

பாடல் வரிகள் எனக்குத் தரப்படவில்லை. யுவன் பிறந்தநாளுக்குச் சென்றேன். அப்போது ஓர் இளைஞர் என்னிடம் வந்து, 'நான் பாடலாசிரியர் கருணாகரன். உங்கள் படத்தில் நான் பாடல் எழுதியிருக்கிறேன்' என்றார். என்ன படம் என்று கேட்டேன். மாமனிதன் என்றார். அவரை வாழ்த்திவிட்டு பாடல் வரிகளைத் தருமாறு கேட்டேன்.

இளையராஜாவின் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தால் இந்தப் படத்தை பண்ணைப்புரத்தில் படமாக்கியிருப்பேன்! இந்தப் படத்தையே ஜீவா இளையராஜாவுக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். ஆனால் என்னை ஏன் இளையராஜா தவிர்த்தார் எனப் புரியவில்லை. என் மனம் இப்போது வரை கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம், பின்னணி இசை சேர்ப்பின் போது என்னைக் கூப்பிடவே இல்லையே என்கிற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. பிறகு நான் கேட்டதற்கு, கார்த்திக் ராஜா தான் காரணம் என்று யுவன் அலுவலகத்தில் எனக்குத் தகவல் கிடைத்தது. மூன்று பேரின் பெயர்களை ஒன்றாக வைத்து, ஒரு பெயரை நீக்கிவிட்டீர்கள், அதனால் பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு இளையராஜாவும் வர மாட்டார் எனப் பதில் கிடைத்தது. நான் என்ன பாவம் செய்தேன்?  

இப்போதும் இளையராஜாவை இந்தப் படத்தின் முதல் மாமனிதனாக மதிக்கிறேன். மாமனிதன், யுவன் தயாரித்த படம் தானே, இந்தப் படத்தைப் பாராட்டி இளையராஜா ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கலாமே! இன்னும் பல படத்தில் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் நீங்கள் இசையமைப்பதை நான் பார்க்க வேண்டும், பின்னணி இசை சேர்ப்பின்போது நான் உடன் இருக்க வேண்டும். உங்கள் மீது பேரன்பு வைத்திருப்பவர்களைக் காரணம் இல்லாமல் நிராகரிக்காதீர்கள் என்றார். 

ஜூன் 21: சீனு ராமசாமி கண்டனம்! 

மாமனிதன் பட செய்தியாளர் சந்திப்பில் தான் பேசியதைப் பயன்படுத்தி இளையராஜாவை விமர்சித்தவர்களுக்குக் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் சீனு ராமசாமி கூறியதாவது:

இசைஞானியிடம் எனது அன்பை உணர்த்த வழியறியாத நான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதை உரைத்தேன். அதைப் பயன்படுத்தி சிலர் அவரைச் சிறுமை செய்யத் துணிவது மேலும் வருத்தமளிக்கிறது, அது என் நோக்கத்திற்கு எதிரானது. ஜூன் 24-ல் வெளிவரும் மாமனிதன் அவரது புகழ் பாடும், அவர் மீதான என் அன்பைப் பேசும் என்றார்.

ஜூன் 21: ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இளையராஜா

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் ரசிகர்களின் சில கேள்விகளுக்குப் பதிலளித்தார் இளையராஜா.

ஜூன் 22: கமலைப் பாராட்டிய இளையராஜா

கமல் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியாகி பெரிய வெற்றியை அடைந்தது. இந்நிலையில் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் இளையராஜா கூறியதாவது:

வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் சகோதரரே. மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக் காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே - அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம் என்றார். 

ஜூன் 23: இளையராஜா இசையமைத்த மாமனிதன் வெளியானது

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த மாமனிதன் படம் ஜூன் 23 அன்று வெளியானது. இசை - இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா.

ஜூன் 23: வெங்கட் பிரபுவுக்குத் தெலுங்கில் வாழ்த்து தெரிவித்த இளையராஜா

நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. இசை - இளையராஜா, யுவன் சங்கர் ராஜா.

இப்படத்தின் தொடக்க விழாவுக்காக ட்விட்டரில் வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தார் இளையராஜா. தெலுங்கில் அவர் கூறியதாவது:

என்னுடைய மற்றும் உன்னுடைய அப்பாவின் செல்வாக்கு எதுவும் இல்லாமல் உன்னுடைய சொந்த உழைப்பின் மூலமாகக் கிடைத்த வெற்றியைக் கொண்டு முதல் முதலாக தெலுங்குப் படம் எடுப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் பூஜைக்கு வர முடியாததற்கு எனக்கு மிகவும் வருத்தம். இருந்தாலும் என்னுடைய ஆசி எப்போதும் இருக்கும். உன்னுடைய படத்தில் இசையமைப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் கம்போசிங் முடிவடைந்து விட்டது. படம் வெற்றியடைய வாழ்த்துகள். கடவுள் உனக்கு ஆசி புரியட்டும் என்றார். 

ஜூன் 26: மதுரையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி

மதுரையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இந்த நாளில் நடைபெற்றது. வேலம்மாள் குளோபல் கேம்பஸில் நடைபெற்ற இசையென்றால் இளையராஜா எனும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வந்த இளையராஜா, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகர் வலுவேலு கலந்துகொண்டார். 

ஜூலை 6: மாநிலங்களவை நியமன உறுப்பினராக இளையராஜா தோ்வு

மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாக (எம்.பி.) பிரபல இசையமைப்பாளா் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டார்கள்.

கலை, இலக்கியம், விளையாட்டுத் துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்படுவது நடைமுறை. அந்த வகையில், இசையமைப்பாளா் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோா் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தோ்வுசெய்யப்பட்டார்கள். 

மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது ட்விட்டா் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்த பிரதமா் நரேந்திர மோடி, ‘தனது இசையால் தலைமுறை தலைமுறைகளாக மக்களைக் கவா்ந்தவா் தலைசிறந்த படைப்பாளரான இளையராஜா. அவருடைய படைப்புகள் பல உணா்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. எளிய பின்னணியில் இருந்து உயா்ந்து பல சாதனைகளைப் படைத்தவா். மாநிலங்களவை உறுப்பினராக அவா் தோ்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார். 

இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட இசைஞானி இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராகச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 

ஜூலை 25: மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்பு

இசையமைப்பாளா் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக (எம்.பி.) பதவியேற்றாா். அப்போது அவா் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா். அப்போது அவையை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வழிநடத்தினாா்.

ஆகஸ்ட் 11: லட்சுமி ராமகிருஷ்ணன் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தன்னுடைய அடுத்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பதாக அறிவித்து ராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார். 

ஆகஸ்ட் 27: விமான நிலையத்தில் ஏழு மணி நேரம் காத்திருந்த இளையராஜா

மோசமான வானிலை காரணமாக புறப்பட இருந்த விமானம் தாமதமானதால் இசையமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா சென்னை விமான நிலையத்தில் 7 மணி நேரம் காத்திருந்தாா்.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்துக்கு வரவேண்டிய விமானங்கள் ஆகஸ்ட் 27 அன்று இரவில் பெங்களூா் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. இந்தநிலையில் ஹங்கேரிக்குச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த இளையராஜா பயணிக்கவிருந்த ஐக்கிய அமீரகத்தின் எமிரேட்ஸ் விமானம் இரவு 9 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது.

ஆனால் மழையினால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் இரவு 9 மணிக்குப் பதிலாக தாமதமாக ஆகஸ்ட் 28 அன்று அதிகாலை 2.45 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்பட்டுச்சென்றது. இரவு 9 மணி விமானத்துக்கு 7 மணிக்கே வந்து காத்திருந்த இளையராஜா, மழையின் காரணமாக விமானம் மேலும் தாமதமானதைத் தொடா்ந்து சென்னை விமான நிலையத்தில் சுமாா் 7 மணி நேரம் காத்திருந்தார். 

ஹங்கேரிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக செல்ல வேண்டிய அவா், எம்.பி, என்பதால் விஐபி பகுதியில் காத்திருந்தாா். இந்த விமானத்தில் முதலில் துபை சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் ஹங்கேரிக்கு செல்ல திட்டமிட்டிருந்தாா்.

ஆகஸ்ட் 29: புதாபெஸ்ட் அழகைக் காண்பித்த இளையராஜா

ஹங்கேரி சென்ற இளையராஜா, புதாபெஸ்ட் நகரின் அழகைப் புகைப்படங்களின் வழியாக ட்விட்டரில் வெளிப்படுத்தினார்.

ஆகஸ்ட் 31: யுவனுக்கு விடியோவில் வாழ்த்து தெரிவித்த இளையராஜா

யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்த நாளன்று அவருக்காகத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டார் இளையராஜா. அதில் அவர் கூறியதாவது:

ஒரு காலகட்டத்தில் ஆழியாறு அணைப் பகுதியில் உள்ள விருந்தினர் அறையில் இரண்டு, மூன்று நாள்கள் தங்கியிருந்து 4, 5 படங்களுக்கு இசையமைப்பது வழக்கம். அப்படியொருமுறை இயக்குநர் மகேந்திரனும் தயாரிப்பாளர் கேஆர்ஜியும் என்னை ஆழியாறுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது என் குழுவினரோடு அங்குச் சென்றேன். பக்கவாத்தியம் வாசிப்பவர்களும் கூட வருவார்கள். தயாரிப்பாளர் கேஆர்ஜி கோயம்புத்தூரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று வருவார். ஒருநாள் மாலையில் திரும்பி வந்தபோது, உன் மனைவிக்குப் பிரசவம் ஆகிவிட்டது. உனக்குப் பையன் பிறந்திருக்கிறான் என்றார். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் மனைவி பிரசவிக்கும் தருணத்தில்கூட இசையமைத்துக்கொண்டிருந்திருந்தேனே தவிர அவர் அருகில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் எனத் தோன்றவில்லை. என் மனைவியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. குழந்தை பிறந்துவிட்டதாக கேஆர்ஜி சொன்னபோது மகிழ்ச்சியில் இசையமைத்த பாடல் தான் செனோரீட்டா என்ற பாடல். படத்தின் பெயர் ஜானி. ரஜினி நடித்த படம். இயக்குநர் மகேந்திரன். தயாரிப்பாளர் கேஆர்ஜி சொன்ன நேரத்தில் பிறந்த குழந்தை, யுவன். யுவன், ஹாப்பி பர்த்டே என்றார். 

செப்டம்பர் 26: இளையராஜா இரங்கல்

இயக்குநரும் வானொலி விளம்பரங்கள் மூலம் புகழ்பெற்றவருமான எஸ்.வி. ரமணன் காலமானார். அவருக்கு வயது 87. ரமணனின் மகள் லட்சுமியின் மகன்தான் பிரபல இசையமைப்பாளரான அனிருத். 

எஸ்.வி. ரமணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா கூறியதாவது:

என் இளமைக்கால வாழ்வில் முக்கியப் பங்களித்தவரும் என் நண்பருமான எஸ்.வி. ரமணன் காலமானதைக் கேள்விப்பட்டு நான் மிகவும் துக்கமடைந்தேன். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் எனக்கு மிகவும் நன்குப் பழக்கமானவர்கள். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

அக்டோபர் 8: பொன்னியின் செல்வன் படம் பார்த்த இளையராஜா
 

மணி ரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த படம் பொன்னியின் செல்வன். 

இப்படத்தை இளையராஜா பார்த்ததாக மணி ரத்னத்தின் மனைவியும் இயக்குநருமான சுஹாசினி இன்ஸ்டகிராமில் தெரிவித்து இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட படத்தையும் பகிர்ந்தார். எங்கள் படத்தை மாஸ்ட்ரோ பார்த்தது எங்களுடைய பெருமை என அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 23: லோயா்கேம்ப் வேத பாடசாலைக்கு இளையராஜா வருகை

தேனி மாவட்டம் லோயா் கேம்ப்பில் திரைப்பட இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவுக்குச் சொந்தமான வேத பாடசாலை மற்றும் இல்லம் உள்ளது. இங்கு இளையராஜாவின் தாயாா் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவா ஆகியோரின் சமாதிகள் உள்ளன.

அக்டோபர் 24 அன்று அமாவாசை தினம் என்பதால் தாயாா் மற்றும் மனைவி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இளையராஜா, அவரது மகன் காா்த்திக் ராஜா ஆகியோா் வந்தார்கள். அஞ்சலி நிகழ்வில் இளையராஜா குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் கலந்து கொண்டார்கள். 

நவம்பர் 8: மாநிலங்களவையின் 9 குழுக்கள் மறுசீரமைப்பு; விதிமுறைகள் குழுவில் இளையராஜா!

மாநிலங்களவையின் 9 குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்களை மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மறுசீரமைத்துள்ளார். இதில், விதிமுறைகள் குழுவில் இளையராஜா எம்.பி. உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றார்கள். 

கடந்த ஆகஸ்ட் மாதம் ஜகதீப் தன்கர் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாநிலங்களவைக்கும் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். தன்கர் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் மாநிலங்களவையின் பல்வேறு நிலைக் குழுக்களை மறுசீரமைத்து வருகிறார். மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் துறைரீதியாக பொதுவான நிலைக் குழுக்களும், தனித்தனியாக நிலைக் குழுக்களும் உண்டு. இருப்பினும், துறைரீதியான நிலைக் குழுக்களின் சிலவற்றின் தலைவர்கள் மாநிலங்களவைத் தலைவராலும், சில குழுக்களின் தலைவர்கள் மக்களவைத் தலைவராலும் நியமிக்கப்படுகின்றனர்.

மாநிலங்களவையின் உரிமைக் குழு, விதிமுறைகளுக்கான குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டு இந்த இரண்டுக்கும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங்கே தலைவராக நியமிக்கப்பட்டார். உரிமைக் குழுவில் ஜிவிஎல் நரசிம்மராவ் (பாஜக), ஜி.கே.வாசன்(தமாகா) உள்ளிட்ட 10 பேரும், விதிகளுக்கான குழுவில் என்.ஆர்.இளங்கோ (திமுக) நியமன உறுப்பினர் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட 15 பேரும் இடம்பெற்றார்கள். 

நவம்பர் 10: மீண்டும் இளையராஜா - ராமராஜன் கூட்டணி
 

சாமானியன் படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் ராமராஜன். இயக்கம் - ராகேஷ். இப்படத்தில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் போன்றோர் நடிக்கிறார்கள். 

செப்டம்பர் மாதம் வெளியான படத்தின் டீசருக்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருந்தார்.பிறகு சாமானியன் படத்துக்கு இளையராஜா இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 23 வருடங்கள் கழித்து ராமராஜன் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. கடைசியாக 1999-ல் வெளியான ராமராஜன் நடித்த அண்ணன் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். இளையராஜா - ராமராஜன் கூட்டணியில் உருவான கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் படங்களை ரசிகர்களால் மறக்க முடியுமா?

நவம்பர் 11: இளையராஜாவுக்கு கெளரவ டாக்டா் பட்டம் வழங்கிய பிரதமா் மோடி
 

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், இளையராஜா ஆகியோருக்குக் கெளரவ டாக்டா் பட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வழங்கினார். 

நவம்பர் 19: மோதியை வியந்து பார்க்கிறேன் - காசி - தமிழ் சங்கம விழாவில் இளையராஜா பேச்சு

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் புராதன பகுதியான காசிக்கும் தமிழகத்திற்குமிடையே உள்ள பழமையான தொடா்பை மீண்டும் கண்டறிந்து, உறுத்திப்படுத்திக் கொண்டாடும் நோக்கத்துடன் ’காசி- தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிகள் வாரணாசியில் (காசி) நவம்பா் 17 -ம் தேதி முதல் டிசம்பா் 16 வரை நடைபெற்றது. காசி- தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசின் கல்வி, கலாசாரம் உள்ளிட்ட 7 துறை அமைச்சகங்களுடன் உ.பி. அரசும் இணைந்து நடத்தியது.

இந்த நிகழ்ச்சியை நவம்பா் 19-ம் தேதி வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் முறைப்படி தொடங்கிவைத்தார் பிரதமா் நரேந்திர மோடி.

தொடக்க நாளில் இளையராஜாவின் கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:

பெருமைமிகுந்த காசி நகரில் தமிழ் சங்கமத்தை நடத்த வேண்டும் என்கிற எண்ணம் நமது பிரதமர் மோடிக்கு எப்படித் தோன்றியது என நான் வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன். காசியில் பாரதியார் இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்றுள்ளார். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த புகழும் வழங்க வேண்டும் என்றார். 

நவம்பர் 23: இளையராஜா - யுவன் இசையமைக்கும் வெங்கட் பிரபு படம்
 

நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. இசை - இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா.

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத் குமார், பிரியா மணி நடிக்கும் படத்துக்கு கஸ்டடி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் வெளியானது. 

டிசம்பர் 15: காசியில் இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சி

காசி விஸ்வநாதா் கோயிலில் திருவாசகம் பாடல்களுடன் இளையராஜாவின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரதமா் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. கடந்த நவம்பா் 19-ல் இதன் தொடக்க விழா, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அப்போது இளையராஜா தனது குழுவினருடன் இசைக் கச்சேரி நடத்தினாா்.

இதையடுத்து அவருக்கு காசிவிஸ்வநாதா் கோயில் உள்ளேயும் இசையுடன் பக்திப் பாடல்கள் பாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதற்கான அழைப்பு காசி விஸ்வநாதா் கோயில் அறக்கட்டளை சாா்பில் அனுப்பப்பட்டது.

இதை ஏற்ற இளையராஜா டிசம்பர் 15 அன்று காசி விஸ்வநாதா் கோயிலில் இசையமைத்து பக்திப் பாடல்களைப் பாடினாா். இதில் மாணிக்கவாசகா் இயற்றிய திருவாசகத்திலிருந்து 4 பாடல்கள் இடம்பெற்றன. மாலை 6 மணியளவில் தொடங்கி நடைபெற்ற இந்த நிகழ்சியில் இளையராஜாவுடன் அவரது இசைக்குழுவைச் சோ்ந்த சுமாா் 80 கலைஞா்களும் பங்கேற்றனா். சுமாா் 16 பாடல்களை மேடை ஏதுமின்றி இன்றி தரையில் அமா்ந்து இளையராஜா இசையமைத்துப் பாடினாா்.

இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளைச் சோ்ந்த பக்தா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். இந்த இசை நிகழ்ச்சிக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இளையராஜாவும் கோயில் நிர்வாகத்திடம் எந்தக் கட்டணமும் பெறவில்லை. 

டிசம்பர் 15: மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின், பதவியேற்றுக் கொண்டார். அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆடியோ மூலமாக வாழ்த்து தெரிவித்தார் இளையராஜா. அதில் அவர் கூறியதாவது:

நான் இளையராஜா. மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே... நீங்கள் பதவியேற்கும் இந்த நாளில் உங்களை வாழ்த்துவதில் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்... என்று வள்ளுவர் சொன்னதைப் போல் அம்மாவுக்குதான் நீங்கள் பதவியேற்பது சந்தோஷமாக இருக்கும். இது நிஜமாகும்போது உங்கள் அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். நானும் மகிழ்கிறேன். அரசியலுக்கு வந்துவிட்டீர்கள். அமைச்சர் பதவியை ஏற்கும்போது பொறுப்பு அதிகமாகிறது. இந்த அமைச்சர் பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும், புகழும் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். நன்றி, வணக்கம் என்றார். 

டிசம்பர் 18: நடிகர் திலகத்தின் நினைவுகளில் மூழ்கிய இளையராஜா

மருது மோகன் எழுதிய சிவாஜி கணேசன் என்னும் நூல் வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவுகளில் மூழ்கினார் இளையராஜா. அவர் பேசியதாவது:

சிவாஜி அண்ணன், என்னை ராசா என்றுதான் அழைப்பார். ஒருநாள் என் ஸ்டூடியோவுக்கு வந்து, ராசா உள்ளே வரலாமா... என்று கேட்டார். எனக்கு உடனே கண்ணீர் வந்துவிட்டது. அண்ணா, உங்கள் வருகைக்காகத்தான் காத்திருந்தேன். இதற்கெல்லாம் எவ்வளவு தவம் கிடந்திருக்க வேண்டும் என்றேன். உள்ளே வந்த அவர், உன்னைப் பற்றி நிறைய சொல்கிறார்களே என்றார். அப்படிச் சொல்கிறவர்களின் கதைகளை நம்பிக்கொண்டு நீங்களுமா என்னைக் கேட்கிறீர்கள் என்றேன். 

என்னிடம் ஒருநாள், சில பாடல்களைக் குறிப்பிட்டு நன்றாக இசையமைத்துள்ளாய். ஆனால் பெர்ஃபாமன்ஸ் இருக்க வேண்டும். அந்த மாதிரியான ஆள்களுக்குத்தான் இது போன்று இசை அமைக்க வேண்டும். சும்மா பாரதிராஜாவுக்கும் அவருக்கும் இவருக்கும் இசை அமைத்துக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம் என்று கேட்டார். 

தேவர் மகன் படத்தில் ‘போற்றிப் பாடடி பொண்ணே’ பாடலின் ஒலிப்பதிவு முடித்துவிட்டு சிவாஜி அண்ணனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அப்போது டக்கென்று எனக்கு ஒரு முத்தம் குடுத்தார். அதை வாலி சார் பாத்துவிட்டு, பத்மினிக்குக் கூட இப்படி அவர் முத்தம் கொடுக்கவில்லை என்றார். சிவாஜி அண்ணனுக்கு என் மேல் அவ்வளவு அன்பு.  சாதனை படத்தில் அவர் நடித்த ஒரு காட்சியில் நானும் இணைந்து நடித்ததை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. அது ஒரு பெருமையான தருணம். தமிழ்நாட்டில் உள்ள சிவாஜி கணேசனின் ரசிகர்களை ஒன்று திரட்டி ஒருநாள் முழுவதும் நடிகர் திலகத்தைப் பற்றி மருது மோகன் பேசுவதைக் கேட்க வேண்டும் என்பது என் ஆசை.

இதை வெளியே யாருக்கும் தெரியாத நிகழ்ச்சி. சிவாஜி அண்ணனுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அனைவரிடமும் பண வசூல் செய்து வந்தார். என்னிடம் வந்தார். ரஜினி, கமல் இவ்வளவு தொகை கொடுத்துள்ளார்கள். அதனால் நீங்களும் கொடுத்தால் சரியாக இருக்கும் என்றார். எவ்வளவு தொகை உங்களுக்கு வேண்டும் என்று கேட்டேன். ஒரு தொகை சொன்னார். சிவாஜி குதிரையில் அமர்ந்திருப்பது போல் ஒரு வெள்ளிச் சிலையை அவருக்குப் பரிசளிக்கக் கலை உலகினர் முடிவு செய்திருந்தார்கள். நடிகர்கள் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜி கணேசனின் பெயர் தான் இருக்கிறது. உங்கள் பெயர் அதில் இல்லை என நினைத்துக்கொள்ளுங்கள். நான் முத்துராமனிடம் சொன்னேன், அண்ணனுக்குக் கொடுக்கும் பரிசில் வேறு யாருடைய பெயரும் வரக்கூடாது, அந்தப் பணம் முழுவதையும் நானே கொடுத்து விடுகிறேன் என்று கூறி முழுத்தொகையையும் நானே கொடுத்து விட்டேன். என்னைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் சொல்லவில்லை. அந்தப் பரிசை வாங்கிய பிறகு சிவாஜி அண்ணன் கமலா அம்மாவிடம் சொன்னது, நாம் யாரை மறந்தாலும் இளையராஜாவை மட்டும் நாம் மறக்கக் கூடாது என்கிற ஒரு வார்த்தையை சொன்னார் அல்லவா, அந்த வார்த்தை எவ்வளவு சத்தியமானது. நானே முழுப்பணத்தையும் தருகிறேன் என்று கூறும் அளவுக்கு அவரை நான் எந்தளவு நேசிக்கிறேன் என்பதைத் தெரிவிக்கவே கூறினேன். அவருக்கு திரை உலகில் யாரும் மரியாதை செய்யவில்லை, எந்த அரசும் மரியாதை செய்யவில்லை. தனிப்பட்ட ஒருவன் செய்தான் என்றால் அது இளையராஜா ஒருவன் தான் என்றார். 

டிசம்பர் 23: மன் கி பாத் இதழில் இளையராஜா கருத்து

மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய இசை பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு நன்றி தெரிவித்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார் இளையராஜா. 

2014 முதல் மன் கி பாத் என்கிற மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டுக்கு மக்களிடம் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி. 2022 நவம்பர் மாதம் இந்திய இசை குறித்தும் தனது உரையில் பேசினார். மேலும் இந்த உரை மற்றும் உரையில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்த புத்தகம் ஒன்று இணையத்தில் டிசம்பர் 23 அன்று வெளியிடப்பட்டது. அதில், இளையராஜாவின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.