தமிழன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் வெற்றபெற செய்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இருப்பினும் படம் வெற்றிபெறாததால் போதிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.
தொடர்ந்து அவர் இசையமைத்த விசில் படமும் ஒரு இசையமைப்பாளராக அவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்தது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடல் அன்றைய கால இளைஞர்களின் விருப்பப் பாடலாக இருந்தது.
தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள், குறைவான முதலீட்டில் உருவாகும் படங்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் வெற்றிப்பாடல்களை கொடுத்துவந்திருக்கிறார். அவர் இசையமைத்த திருவிளையாடல் ஆரம்பம், கிரி போன்ற ஒரு சில படங்களே வெற்றிபெற்றன. படங்களின் வெற்றி மட்டுமே ஒருவருக்கு வாய்ப்புகளை வழங்கும் என்பது எழுதப்படாத விதி.
இந்த நிலையில் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான மைனா திரைப்படம் டி.இமான் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்று சொல்லலாம். தனது பாணியை முற்றிலும் மாற்றி ஒரு கிராமத்து படத்துக்கு தேவையான இசையை கணகச்சிதமாக வழங்கினார். அந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பினால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
தொடர்ந்து சாட்டை, மனம் கொத்தி பறவை, கும்கி, தேசிங்கு ராஜா, வருத்தப் படாத வாலிபர் சிங்கம், ஜில்லா உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றார்.
திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களின் முகப்பு பாடல்களுக்கும் டி.இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கிருஷ்ணதாசி, சிகரம், மந்திர வாசல், கோலங்கல், கல்கி, திருமதி செல்வம் என நாம் ரசித்த பல தொடர்களின் முகப்பு பாடல்களுக்கு டி.இமான் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு விழா மேடையில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா டி.இமானின் இசையில் தனது அப்பாவின் (இளையராஜா) சாயலை உணர்வதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திகில் படங்கள், விறுவிறுப்பு குறையாத திரில்லர் படங்கள், கிராமத்து படங்கள், காதல் படங்கள், நகரத்தை மையப்படுத்தி உருவாகும் படங்கள் என அனைத்து வகைப்படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். இன்று இமானின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.