இயக்குநர் மகேந்திரன் எடுக்காத திரைப்படங்கள்!

இளையராஜா, பஞ்சு ஆகியோருடன் மகேந்திரன் நடிக்கத் திட்டமிட்ட மலரும் மாலையும் படம் என்ன காரணத்தாலோ...
இயக்குநர் மகேந்திரன் எடுக்காத திரைப்படங்கள்!


முள்ளும் மலரும் திரைப்படத்தின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணமான தன் திறமையை உதிரிப் பூக்கள் வழி மறுஉறுதி செய்தார் இயக்குநர் மகேந்திரன்.

இயக்குநர் மகேந்திரனுடைய அற்புதமான படங்களின் வரிசையை அறியாத தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் யார்? ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி, கை கொடுக்கும் கை...

மிகச் சிறப்பாக வந்திருக்கக்கூடிய சில படங்களைக் கைவிட்டிருக்கிறார் மகேந்திரன், என்ன காரணம் என்று தெரியவில்லை. 1980-களின் தொடக்கத்தில் இந்தப் படங்களுக்காகத் திட்டமிட்டுள்ளார்.

மூவேந்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் மலரும் மாலையும் என்றொரு படம். இந்த மூவேந்தர்கள் - நீண்ட கால நண்பர்களான மகேந்திரன், இளையராஜா, பஞ்சு அருணாசலம். 

இந்தக் கதையே இவர்கள் மூவரும் சம்பந்தப்பட்ட கதையென்றும் தங்களுடைய கேரக்டர்களிலேயே அவரவர் நடிக்கவிருப்பதாகவும் - மகேந்திரன் இயக்குநராகவும் பஞ்சு அருணாசலம் ஒரு வசனகர்த்தாவாகவும் இளையராஜா ஓர் இசையமைப்பாளராகவும் - சினிமா எக்ஸ்பிரஸுக்கான நேர்காணலொன்றில் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மூவரின் கதையென்றால், மனைவியரும் இருக்க வேண்டுமே என்ற கேள்விக்கு, இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் நடிக்கவில்லை. பதிலாகப் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கதை, வசனம் - பஞ்சு அருணாசலம், திரைக்கதை, இயக்கம் – மகேந்திரன் என்பது அவர் பதில்.

நீங்களே ஒரு வசனகர்த்தா, எதற்காக பஞ்சு வசனம் எழுத வேண்டும் என்று கேட்டபோது, ஜானி படத்துக்குக்கூட அவர்தான் திரைக்கதை - வசனம், தான் கதை, இயக்கம் என்று தெரிவித்த மகேந்திரன், தங்களுக்குள் அப்படியொரு புரிதல் என்றும் சில கதைகளுக்கு இவர் எழுதினால் நன்றாக இருக்கும் என்று கருதினால் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படத்துக்குக் கதையை எவ்வாறு தெரிவு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, 'அதற்கென்று சில நண்பர்கள் என்னிடம் உண்டு. அவர்கள் படித்து மகிழ்ந்ததாகச் சொல்லும் கதைகளை நானும் படிக்கிறேன். நானாகவும் படிக்கிறேன். அப்படிப் படித்த நாவல்களில் ஒன்றுதான் முள்ளும் மலரும். புதுமைப்பித்தனின் சிற்றன்னை கதையை நான் கல்லூரியில் படிக்கும்போதே படித்துவிட்டேன். அது கடந்த இருபது ஆண்டுகளாக என் நினைவில் ஊறிக் கொண்டிருந்துவிட்டு உதிரிப்பூக்களாக வெளிவந்தது' என்றார் மகேந்திரன்.

கதையைத் தேர்வு செய்து, திரைக்கதையை அமைத்த பின் மற்றவர்களிடம் ஆலோசனை பெறுவீர்களா? - "பெறுவேன். திரைக்கதையை நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் சொல்வேன். சொல்லி முடிக்க இரண்டு மணி நேரம்கூட ஆகும். என் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக உதிரிப்பூக்கள் ஸ்கிரிப்டை இரண்டு முறை மாற்றி எழுதியிருக்கிறேன். என் ஸ்கிரிப்ட்டை என் மனைவியே ரீச் செய்யவில்லையென்றால் சாதாரண ரசிகர்களை நான் எப்படித் திருப்திப்படுத்த முடியும்?"

[எல்லாக் கதைகளையும் என்னிடமும் குழந்தைகளிடமும் சொல்லிக்கொண்டுதான் இருந்தார். ஆனால், நெஞ்சத்தைக் கிள்ளாதே கதையையும் ஜானி கதையையும் இதுவரை எங்களிடம் சொல்லவில்லை என்று பின்னர் தெரிவித்திருக்கிறார் மகேந்திரனின் மனைவி ஜாஸ்மின்].

இதையும் படிக்க: கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நடிகர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

உதிரிப்பூக்கள் வெற்றியில் சந்தேகம் இருந்ததா? என்ற கேள்விக்குப் பதிலளித்த மகேந்திரன், நம்பிக்கை இருந்தது. என்னுடைய சந்தேகம், அதில் நான் வைத்த கடைசி ஷாட்டில்தான். ஆனால், நான் அஞ்சியபடி மக்கள் அந்த கடைசி ஷாட்டில் எழுந்துசெல்லவில்லை. எனக்கு அது உற்சாகமாக இருந்தது என்றார்.

இந்தக் காலகட்டத்தில்தான் நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்துக்கான பணிகளைச் செய்துகொண்டிருந்திருக்கிறார்.

ஜானியில் ரஜினியுடன் கங்கை அமரன், ஆர்ட்டிஸ்ட் ஜெயராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர் (ஆனால், இவர்கள் நடிக்கவில்லை) என்று தெரிவித்த மகேந்திரனிடம் நீங்கள் நடிக்கவில்லையா என்று கேட்டபோது, ஒரு படத்தில் (மலரும் மாலையும்) நடிப்பதே போதும். இதுவே ஃபர்ஸ்ட் அன்ட் லாஸ்ட். தொடர்ந்து நடித்தால் என் மனைவி என்ன சொல்லுவாரோ? என்று தெரிவித்திருக்கிறார் மகேந்திரன்.

உள்ளபடியே அப்போது, இளையராஜா, பஞ்சு ஆகியோருடன் அவர் நடிக்கத் திட்டமிட்ட மலரும் மாலையும் படம் என்ன காரணத்தாலோ எடுக்கப்படாமல்போய்விட அவரும் நடிக்காமல் விட்டுவிட்டார். ஆனால், காலம் அவரை மறுபடியும் நடிகராக மக்களிடையே பெரும் புகழ் பெறச் செய்தது - விஜய்யின் தெறியில் பயங்கர வில்லனாக.  ரஜினியுடன் பேட்ட, நிமிர், மிஸ்டர் சந்திரமௌலி, சீதக்காதி, பொன். மாணிக்கவேல், பூமராங்... அவர் மறைவுக்குப் பின் வந்தது சசிகுமாருடன் நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா...

தாகம் தணியவில்லை, தமிழ்ப் பட வேகம் வளரவில்லை என்று வருத்தப்பட்டுப் பின்னொரு சினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலில் குறிப்பிட்டார் மகேந்திரன்.

1981, சுதந்திர நாளில் பேசிய அவர் கூறும்போது,

“எங்களைப் பொருத்தவரை எங்கே இருக்கிறது சுதந்திரம்? அப்படியே துணிச்சலா, சுதந்திரமா ஒரு படத்த டைரக்ட் செய்தாலும் நம்ம சென்சார் விட்டு வைக்கிறதில்ல, தப்பித் தவறி கட் பண்ணாம விட்டுவச்சாலும் அதிலே ஏ முத்திரையைக் குத்தாம விட மாட்டாங்க. ஆனால், இதெல்லாம் இந்த சமுதாயத்தில் நடக்கிறது... “...நாட்டின் உண்மையான பிரச்சினைகளைப் படமாக்கி, நாம் நினைக்கிற மாதிரி மக்களுக்குத் தர முடியலை. காலமாற்றத்திலே ஒருவேளை போகப் போக அதிலே மாற்றங்கள் ஏற்பட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். ஒருவகையில் பார்த்தா நாம நம்மையே ஏமாத்திக்கிறோம்னுகூட நினைக்கிறேன். எத்தனை நாளைக்குத்தான் மூடி மறைக்க முடியும்? உண்மை ஒருநாளைக்கு வெளிவரத்தான் போகுது. அதில சந்தேகமில்லை.”

அவர் நினைத்தமாதிரியே அவருடைய காலத்திலேயே ஓரளவுக்கு அந்த மாற்றத்தைக் கண்டுவிட்டார்.

ஒரு கலைஞனின் வளர்ச்சி பற்றிய இயக்குநர் மகேந்திரனுடைய பார்வைதான் இன்றைக்கும் திரைத்துறையினர் மட்டுமின்றி அனைவருக்குமான அளவுகோல், அறிவுறுத்தல், ஆலோசனை எல்லாம் எனலாம்.

“ஒரு நண்பர் முள்ளும் மலரும் படத்திலிருந்து நண்டு வரை எடுத்துக்கிட்டா டைரக்டர்ங்கிற முறையில வளர்ச்சி அடைந்திருக்கீங்களா என்று கேட்டார். வளர்ந்துவிட்டதா நான் எந்த சூழ்நிலையிலும் நினைக்கிறதேயில்லை. வளர்ந்திட்டோம்னு என்றைக்கு நினைக்கிறோமோ அன்றைக்கே தளர்ச்சியை நோக்கிப் போய்க்கிட்டிருக்கோம்னு அர்த்தம். எல்லாமே ஆரம்பம்தான்!

“என் மனசில எவ்வளவோ செய்யணும்னு நினைக்கிறேன். அதையெல்லாம் நினைச்சுப் பார்க்கும்போது இதுவரையில செஞ்சதையெல்லாம் ஆரம்பம்னுதான்னு நினைச்சுக்குவேன். மன நிறைவு இல்லாததே எனது மனநிறைவா நான் கருதுகிறேன். இன்னம் இதைஇதை செய்து முடிக்கலையேன்னு ஏற்படுற அதிருப்திதான் எனக்கு திருப்தி!

இதையும் படிக்க: துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்த நடிகர்!

“அதிருப்திதான் எனக்கு திருப்தியின்னு எந்த அர்த்தத்துல சொன்னேன்னா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலே ரன்னிங் ரேஸில் ஓடிக்கிட்டிருக்கிறவன் எப்படி, உலக ரெகார்டை உடைச்சு பெரிய சாதனையை ஏற்படுத்தணும்னு நினைக்கிறானோ அது மாதிரி நானும் நினைக்கிறேன். குறிப்பிட்ட தூரத்தை எப்படி ஐந்து வினாடிகளில் கடந்துவிட வேண்டும் என்று நினைத்து ஓட ஆரம்பித்தவன் வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஐந்து வினாடி, நான்கு வினாடியாகி, இறுதியில் மூன்று வினாடிகளில் ஓடி மிகப் பெரிய சாதனையை ஏற்படுத்திக் காட்ட நினைக்கிறானோ, அது மாதிரித்தான் என் நிலையும். அதனாலதான் அதிருப்தியான உணர்வோடதான் எப்போதும் இருப்பேன்!”

1, 2, 3, 4…

“என்னை நம்பிப் படம் எடுக்கிறவங்களுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில்தான் யூனிட் அமைச்சு டைரக்ட் செய்கிறேன். என் தனித்திறமையைக் காட்டறதுக்காக நான் விஷப் பரிட்சையிலே இறங்கத் தயாராக இல்லை. இப்பொழுது எடுக்கப் போற “1, 2, 3, 4” படம்கூட ஆக்ஷன் பிக்சர்தான். ஒருசிலர் அவங்க பாணியிலே ஒரே மாதிரியான படங்களையே டைரக்ட் பண்ணினா போதும்னு நினைப்பாங்க. நான் அப்படி இல்ல.

“எனது திரைக்கதையில் வரும் சம்பவங்களில் ஒருசில என் வாழ்க்கையில் நடந்தவைதான். வெளிவரவிருக்கும் மெட்டியிலும் அப்படித்தான். தத்ரூபமான காட்சிகளை அமைக்கிறதுக்கு அந்த அனுபவமும் ஒரு காரணம்.

“சிலர் சென்டிமென்ட், ஆன்டி சென்டிமென்ட் என்று குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆன்டி சென்டிமென்ட் என்பதாக ஒன்று கிடையவே கிடையாது. எல்லாமே சென்டிமென்ட்தான் – நீங்க ஒரு பழக்கத்தை விரும்பாம இருக்கலாம். இன்னொருத்தனுக்கு அந்தப் பழக்கம் பிடிச்சிருக்கலாம். உங்களுக்குப் பிடிக்கலேங்கறதுக்காக, ஆன்டி சென்டிமென்ட்னு சொல்லிவிடறதா? நமக்குப் பலவகை தேவைப்படுது. காலம் மாறிக்கிட்டு வருது”

இந்த நேர்காணலில் தன் உயர்வுக்குக் காரணமான பெரியவர்கள் என்று எம்.ஜி.ஆரையும் துக்ளக் ஆசிரியர் சோவையும் நன்றியுடன் குறிப்பிடுகிறார் மகேந்திரன்.

சென்னை வரும் மகேந்திரன், எம்ஜிஆர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தக் காலத்திலேயே பொன்னியின் செல்வன் நாவலுக்குத் திரைக்கதை – வசனம் எழுதினார். எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் எடுக்கத் திட்டமிட்டிருந்த இந்தப் படத்தை என்ன காரணத்தாலோ பின்னாளில் எம்ஜிஆர் கைவிட்டுவிட்டார்.

இயக்குநர் மகேந்திரன் (சிலவற்றைத் தயாரித்து) இயக்கத் திட்டமிட்டிருந்த, ஆனால், கைவிடப்பட்ட மலரும் மாலையும், 1, 2, 3, 4 படங்களைப் பற்றிக் கேட்டபோது, இயக்குநர் மகேந்திரனின் நண்பரும் புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான ‘யார்’ கண்ணன், எடுக்காமல் விட்டவை இரண்டு படங்கள் அல்ல, மூன்று படங்கள் என்று தினமணி இணையத்தளத்துக்காகப் பேசியபோது தெரிவித்தார்.

யார் கண்ணன் நினைவுகூர்கிறார்:

“மலரும் மாலையும் படத்துக்கு முதலில் வைத்த பெயர் பகலுமாச்சு, இரவுமாச்சு என்பதுதான். பரணி டிசைன் செய்து விளம்பரங்கள் எல்லாம்கூட வந்தது. அவர்கள் அவர்களாகவே (மகேந்திரன், இளையராஜா, பஞ்சு அருணாசலம் மூவரும்) நடிப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், படம் எடுக்கப்படவில்லை.

“1, 2, 3, 4 படம் டிராப் ஆன விதம் மிகவும் இன்ட்ரஸ்டிங். மகேந்திரனுடைய சொந்தத் தயாரிப்பு இந்தப் படம். கால்வாசிப் படம் ஷூட்டிங் முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட ஆறாயிரம் அடி. சரத்பாபுதான் ஹீரோ. ஆனால், அந்த நேரத்தில் அதேமாதிரி வேறொரு படம் வந்து வெற்றி பெறவில்லை என்பதால் இந்தப் படத்தை மகேந்திரன் கைவிட்டுவிட்டார்.

“இன்னொரு படம், எந்த ஊர், எந்த பஸ்? என்று டைட்டில். முதல் நாள் ஷூட்டிங்கும் நடந்தது. புத்தம் புதுகாலை பொன்னிற வேளை என்றொரு பாடல் எடுக்கப்பட்டது. (ஏற்கெனவே, அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக எடுக்கப்பட்டுப் பின்னர் படத்தில் இடம்பெறாமல்போன, பின்னர், அண்மையில் மேகா படத்தில் இடம் பெற்றதும் இந்தப் புத்தம்புது காலை பாடல்தானா?) ஆனால், படம் டிராப் ஆகிவிட்டது.”

இயக்குநர் மகேந்திரனே சிறந்த கதை – வசனகர்த்தா. சுமார் 25 படங்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார் (மாபெரும் கலைஞனான சிவாஜி கணேசனுக்கே சிகரம் வைத்தாற்போன்ற தங்கப் பதக்கம் திரைப்படத்துக்கு இவர்தான் கதை – திரைக்கதை – வசனம்!). ஆனால், அவருடைய படங்களுக்குத் தயங்காமல்  மற்றவர்கள் கதைகளைத் தெரிவு செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ரஜினிகாந்த்தின் தலைசிறந்த – அன்றும் இன்றும் என்றும் பேசப்படுகிற - மூன்று படங்களை (முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை) எடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். மிகப் பிரமாதமான கை கொடுக்கும் கை மட்டும் ஏனோ எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு கதையை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போய்விட்டிருக்கலாம் (பார்வையற்றவராக வரும் ரேவதி அப்படி நடித்திருப்பார்).

தமிழ்த் திரையுலகில் மறைக்கவோ, மறக்கவோ முடியாதது மகேந்திர காலம்!

ஜூலை 25 பிறந்த நாள் / ஏப்ரல் 2 நினைவு நாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com