நினைவலைகள்: கிரேஸி மோகனைப் பற்றி பிரபலங்கள்

கிரேஸி மோகனைப் பற்றி தினமணி கதிர் இதழில் பிரபலங்கள் கூறியவை
நினைவலைகள்: கிரேஸி மோகனைப் பற்றி பிரபலங்கள்
Published on
Updated on
6 min read

நடிகர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்களைக் கொண்ட கிரேஸி மோகன் (66) மாரடைப்பு காரணமாக சென்னையில் 2019, ஜூன் 10 அன்று காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி மோகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிரேஸி மோகனைப் பற்றி 2019 ஜூன் மாத தினமணி கதிர் இதழில் பிரபலங்கள் கூறியவை:

நடிகை சச்சு

நாடகமும் சினிமாவும் அவருக்கு இரு கண்கள் மாதிரி. இரண்டிலும் வெற்றி பெற்ற கலைஞர் என்றால் அது கிரேஸி மோகன்தான். ஆபாசம், இரட்டை அரத்த வசனங்கள் இல்லாத நகைச்சுவையைத் தந்த கலைஞன். எப்போதுமே நல்ல நகைச்சுவைதான் அவரது பாணி. "சித்ராலயா கோபு சார்தான் என் குரு' என ஒரு முறை என்னிடம் சொல்லியிருக்கிறார். "காதலிக்க நேரமில்லை' மாதிரியான கதைதான் என்னை நல்ல நகைச்சுவையை நோக்கி இழுத்து வந்தது எனவும் சொன்னார். நகைச்சுவை என்பது எல்லாருக்கும் வந்து விடாது. ஒரு விநாடிக்குள் நம்மைச் சிரிக்க வைத்து விடும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆயிரம் ஜோக்குகள் சொன்னாலும், அந்த ஆயிரமும் அப்படியே தரமாக இருக்கும். அவரிடத்தில் பிடித்த விஷயம் ஒன்று உண்டு. சக கலைஞர்களை மதிக்கக் கூடிய கலைஞன். முன்னோடிகளின் நகைச்சுவைகளை ரசிப்பது, மதிப்பது என அவர் தனித்துவம். கமலுக்கும், அவருக்குமான உறவு என்பது பூர்வ ஜென்ம பந்தம் என நினைக்கிறேன். அது மாதிரி கூட்டணி இனி சினிமாவில் அமையுமா என்று தெரியவில்லை.


 சிவகுமார்

கிரேஸி மோகன் அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரி. டிவிஎஸ்ஸில் வேலை பார்த்தவர். என்னுடைய 45 ஆண்டுகால நண்பர். அவர் எழுதிய முதல் நாடகம் எஸ்.வி. சேகரின் நாடகப்பிரியா குழுவுக்காக எழுதிய "கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' தான். நல்ல ஓவியர். அவரைப் போல ஒரு நகைச்சுவை எழுத்தாளர்கள் இனி கிடைப்பது மிகவும் அரிது. கமல்ஹாசனின் பல படங்களில் அவருடைய பங்களிப்பு மகத்தானது. "அபூர்வ சகோதரர்கள்' படத்திலிருந்து கமலுடன் இணைந்து பணி புரிய ஆரம்பித்தார். மிகப் பெரிய இசை ஆர்வம். அவருக்குத் தெரிந்த மாதிரி தமிழ்ப் பாடல்களை அறிந்தவர்கள் குறைவு. கூட்டுக்குடும்பத்தின் பெருமைக்கு அவர்கள் குடும்பம் தான் ஓர் எடுத்துக்காட்டு. அவர் தம்பி மாது பாலாஜிதான், தன் அண்ணிக்காக தன்னுடைய ஒரு சிறுநீரகத்தையே தானமாக கொடுத்தவர். கிரேஸி மோகனின் மனைவி நளினி ஒரு நல்ல மூத்த அண்ணிக்கு ஒரு முன்னுதாரணம். அந்த கூட்டுக்குடும்பத்தை மூத்த மருமகளாகக் கட்டிக் காத்தவர் கிரேஸி மோகனின் மனைவி. மோகனைப் போல எளிய புகழ் பெற்ற ஒரு மனிதரைப் பார்ப்பது அரிது.


 ஈவெரா மோகன் - பத்திரிகையாளர்

கிரேஸி மோகனின் 500-ஆவது நாடக விழா நடந்த சமயம். அதுவரையில் அவர் அரங்கேற்றிய நாடகங்களின் தொகுப்பை அந்த விழாவில் நடத்திக் காட்டினார். 20 வருடங்களுக்கு முன்பு நடந்த விழா அது. அப்போது நலிந்த கலைஞர்களை, அவருடன் பயணித்த கலைஞர்களை மதித்து சன்மானம் வழங்கினார். அது மறக்க முடியாத சம்பவம். நாடகக் கலைஞர்கள் என்றாலே பெரிய மதிப்பு இருக்காது. சம்பளம் பெரிதாக இருக்காது. அதிலும் அவர் சக கலைஞர்களுக்கு சன்மானம் கொடுத்தது பெரிய விஷயமாக இருந்தது. என்னைப் போன்றவர்களுக்கு அவர் பெரிய கதாநாயகனாகத் திகழ்ந்தார். பெரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும், எளியவர்களைப் போற்றுவார். எப்போதும் கூட்டுக் குடும்பம் பற்றி பேசிக் கொண்டே இருப்பார். குடும்ப வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அதுதான் அவரின் நகைச்சுவையில் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. நாடகக் குழுவையும் குடும்பமாகப் போற்றுவார். வெற்றிலை, பாக்கு அதிகமாக போடுவார். அவரோடு பேசினாலே, ஏதோ உறவினரிடம் பேசுவது போல் இருக்கும். அவர் ஒரு நகைச்சுவையின் தொழிற்சாலை.


 எஸ்.வி.சேகர்

1960-களிலேயே எங்களின் இருவருக்குமான நட்பு தொடங்கியது. மிகவும் நெருங்கிய நட்பு அது. இருவரும் ஒரே பள்ளியில்தான் படித்தோம். 76-இல் என்னுடைய நாடகத்தை எழுதும் வாய்ப்பை அவருக்குக் கொடுத்தேன். அந்த நாடகத்தின் பெயர்தான் "கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்'. அந்த நாடகத்துக்குப் பின்புதான் அவர் கிரேஸி மோகன் ஆனார். நல்ல மனிதர். ஈடு இணையில்லாத நகைச்சுவை உணர்வு அவருக்கு உண்டு. காமெடி என்றாலே அது இரட்டை அர்த்த வசனங்கள் என்றாகி விட்டது. ஆனால், ஆபாசம் இல்லாத நகைச்சுவையைக் கொண்டு வந்தவர் அவரே. கூட்டுக் குடும்பத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை கொண்டவர். எப்போதும் உறவுகள் சூழ இருப்பார். அவருக்கு எதிரிகள் என்று யாருமே இல்லை. யாரோடும் விரோதம் கொள்ள மாட்டார். அத்தகைய நல்ல மனிதர் அவர். எல்லாவற்றையும் தாண்டி சிறந்த ஆன்மிகவாதி. கடவுள்களின் படங்களை தத்ரூபமாக வரையும் ஓவியர். வெண்பாக்கள் எழுதக் கூடியவர். கடவுளுக்கு மிக நெருக்கமானவர். அதனால்தான் அவர் இவ்வளவு சின்ன வயதில் போய் சேர்ந்து விட்டார் என நினைக்கிறேன்.


 ஹரிசங்கர் - நாரத கான சபா

"சாக்லேட் கிருஷ்ணா' என்ற நாடகம்தான் கிரேஸி மோகனின் முக்கியமான நாடகம். அந்த நாடகம் கிட்டத்தட்ட 500 தடவைகளுக்கும் மேல் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதில் 290 நாடகம் எங்களின் நாரத கனா சபாவில் அரங்கேறியுள்ளது. அது எங்களுக்குக் கிடைத்த பெருமை. ஒவ்வொரு நாடகத்தின் போதும் என் அப்பா கிருஷ்ணசாமி கூடவே இருந்தார். மோகன் மேக்கப் போடும் போதெல்லாம் அவர் கூடவே சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருப்பார். நாடகத்தின் போது அந்த சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்வார் மோகன். சில இடங்களில் ""நான் என்ன கிருஷ்ணரா... இல்லை நாரத கனா சபா கிருஷ்ணசாமியா...'' என நகைச்சுவையாக்கி நெகிழ வைப்பார். தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்கள் அடுத்தடுத்த வசனங்களை மறக்க விடக் கூடாது என்பதற்காக, இவரே அதை அவர்களுக்கு எடுத்துக் கொடுப்பார். அது எந்த நாடக கலைஞனுக்கும் இல்லாத பெருமை. அவரது நகைச்சுவை யாரையும் புண்படுத்துவது போல் இருக்காது. மோகனின் நகைச்சுவையை, வசனங்களை யாரும் தவறாக சித்திரிக்க முடியாது. அது அவருக்கான தனி இடம். அவர் சித்திரங்கள் வரைவது யாருக்கும் பெரிதாகத் தெரியாது. கடந்த ஆண்டு டி.கே.பட்டம்மாள் நூற்றாண்டு விழாவில் பட்டம்மாளின் சித்திரம் வரைந்து, அதை நித்யஸ்ரீ மகாதேவனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அந்த படம் ஏதோ கருப்பு, வெள்ளை புகைப்படம் மாதிரி இருந்தது. அனைத்து துறைகளிலும் திறமையான கலைஞர் கிரேஸி மோகன்.


 பிரபு - ஸ்ரீ கிருஷ்ண கான சபா

கிரேஸியின் வசனப் படைப்பு கள், நாடகங்கள்... குறிப்பாக "சாக்லேட் கிருஷ்ணா' நாடகம் குறித்தெல்லாம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், கிருஷ்ணனுக்கு 4000 வெண்பாக்கள் பாடியிருக்கிறார் கிரேஸி மோகன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
 அதுபற்றி பேசலாம் என்று நேரில் சென்றால், அவருக்கே உரிய பாணியில் சிரிப்பாக சிலிர்ப்பாக பகிர்ந்து கொள்வார்.
 கிருஷ்ணன் மீதான தனது பக்தியை, அதற்கான காரணங்கள் எல்லாம் குறித்து விளக்குவார். ""கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு நிற்கும் கோலத்தைப் பார்த்தால், ஒரு கால் நல்லா அழுத்தமா தரையில பதிஞ்சிருக்கும். இன்னொரு காலில், விரல்கள் மட்டும்தான் தரையில பதிஞ்சிருக்கும். அழுத்தமா பதிஞ்சிருக்கற பாதம்தான் தர்மம். விரல்கள் மட்டும் பதிஞ்சிருக்கற பாதம் சத்தியம். இதோட அர்த்தம் என்னன்னா, தர்மம்தான் எல்லாத்தை விடவும் பெரிசு. அதுதான் என்னைக்கும் நிலைச்சிருக்கும். தர்மத்துக்காக சத்தியத்தைக்கூட விட்டுத் தரலாம். ஆனா, எதுக்காகவும் தர்மத்தை விட்டுத் தரக்கூடாது.
 நாம் செய்யற தர்மம்தானே நம்மோடகூட வரப்போறது. இந்தத் தத்துவத்தை உணர்த்தற வேணுகோபாலனின் அருள்கோலம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்'' என்று எழுதியிருப்பார். யாராலும் எதிர்பார்க்க முடியாத காமெடி அவரது சிறப்பு. "பஞ்ச தந்திரம்' படத்தில் வரும் முன்னாடி.. பின்னாடி... காமெடி யாராலும் யோசித்து எழுத முடியாத ஒன்று.
 அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.


 சாரி - வாணிமகால்

நானும் அவரும் இருபது ஆண்டுகளாக நண்பர்கள். நாடகம் தவிர்த்து அவர் பாசத்தோடும் - அன்போடும் பழகுவார், பேசுவார். ஒருமுறை அமெரிக்காவிற்கு நான் சென்றிருந்தபோது, இவரது குழு ஃபீனிக்ஸ் என்ற இடத்தில் நாடகம் போடுவதற்காக வந்தது. அங்கே அவர் என்னைப் பார்த்ததும், ஆச்சரியப்பட்டுப் போனார். அங்கே பலமணி நேரம் உரையாடினோம். அந்தச் சந்திப்பு மறக்க முடியாத ஒன்று. அன்பான கிரேஸி இவ்வளவு சீக்கிரம் நம்மைவிட்டுச் சென்றது வருத்தத்தை அளிக்கிறது.


 ஓவியர் மணியம் செல்வன்

நானும் கிரேஸி மோகனும் அடுத்தடுத்த வீட்டில் வசிப்பவர்கள். எங்கள் இருவருக்குமான நட்பு பள்ளியில் படிக்கும்போதே தொடங்கியது. நான் அவரது வீட்டிற்குச் சென்று விளையாடுவதும், அவர் எங்கள் வீட்டிற்கு வருவதும் என்றும் உண்டு. இருவரும் ஓவியம் வரைவோம். ஆனால் கதை, திரைக்கதை, வசனம், நாடகம், சினிமா என்று கலைத்துறையின் வேறு வேறு பாதைகளில் போய்விட்டார். நான் ஓவியம் என்று மற்றொரு பாதையில் பயணித்தேன். பல நாட்கள் நான் ஓவியம் வரைவதைப் பார்த்துக் கொண்டு இருப்பார். நான் கூட என் மகனிடம் கூறுவதுண்டு. ""மோகன் சாரே பார்த்துக் கொண்டு இருக்கிறார். நீ ஏன் வெளியே போய் விளையாடுகிறாய்?' என்று கேட்பேன். இருவர் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுக்கெல்லாம் நாங்கள் இருவரும் இருப்போம். என்னைப் பொருத்தவரை அவர் ஒரு சிறந்த மனிதர். நான் ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்றுதான் கூறுவேன்.
 

நித்யஸ்ரீ மகாதேவன்

நான் அவரின் நகைச்சுவைக்கு முதலில் ரசிகை. கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நான் அவரின் எல்லா சிறப்பான நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளேன். என்னைப் பொருத்தவரை கமல் ஹாசன்-கிரேஸி மோகன் இருவரின் நகைச்சுவையும் காலத்தால் மறக்க முடியாதவை. அவரது நடிப்பு, ஓவியம், எழுத்துகள் என்று அவர் எதையெல்லாம் செய்தாரோ அதில் எல்லாம் முதலிடத்தைப் பெற்றார். இப்படிப்பட்டவர் மிகவும் எளிமையாகப் பழகக் கூடியவர். அவரது இழப்பு கலை உலகத்திற்கே மிக பெரிய இழப்பு என்று கூறலாம்.
 

பத்மா சுப்ரமணியம்

இன்றும் அவரது காமெடி எல்லாம் எல்லாராலும் கேட்டு ரசிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு தான் நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் நாட்டிய நாடகமான கிருஷ்ணாய துப்யம் நமஹபற்றி ரொம்ப உயர்வாகக் கூறினார். அந்த சிடியைத் தேய்ந்து போகும் அளவிற்கு பலமுறை பார்த்ததாகச் சொன்னார். என்னைப் பொருத்தவரை அவர் வெறும் நாடக ஆசிரியர், வசன கர்த்தா மட்டும் அல்ல. அவரும் ஆன்மிகத்தில் தோய்ந்தவர். கிருஷ்ணரின் பக்தர். மகாபாரதத்தைப் படித்து கிருஷ்ணரின் லீலைகளைத் தெரிந்து கொண்டவர். ரமணரின் வாழ்க்கைச் சரிதத்தை வெண்பாக்களால் எழுதிய ஆற்றல் பெற்றவர். இதில் சிறப்பு என்னவென்றால், ஒரே இரவில் இந்த வெண்பாக்களை இவர் எழுதினார் என்பதுதான். நானும் அவரும் பேசும் போதே வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை வரும். அவரது மறைவு என்னைப் போன்ற கலை ரசிகர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு.
 

லெனின் - டைரக்டர்-எடிட்டர்

அவர் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர். ஒரு முறை நான் ஒரு படம் எடிட் செய்துகொண்டிருந்தேன். எனக்குப் பக்கத்தில் அவரும் அமர்ந்திருந்தார். நான் எப்படி படத்தைத் தொகுக்கிறேன் என்று பார்த்துவிட்டு, "உண்மையிலேயே படத் தொகுப்பாளரின் வேலை மிகவும் சிறப்பானது. ஒரு படத்தின் திரைகதையையே மாற்றி விடுகிறீர்கள்'' என்றார். "என்னைக் கிண்டல் எதுவும் செய்யவில்லையே'' என்று சிரித்துக் கொண்டே சொன்னவுடன், "உண்மையைச் சொன்னால் என்ன சார் இப்படி நீங்கள் கேட்கிறீர்கள்?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அந்த அளவிற்கு குழந்தை உள்ளம் கொண்டவர். என்னைப் பொறுத்தவரை அவருக்கு எல்லாமே தெரியும். நல்லாவே தெரியும். யாரையும் எதிர்த்துப் பேசமாட்டார். "தான் உண்டு தான் வேலை உண்டு' என்று இருப்பார். சிறந்த வசனகர்த்தா என்று எல்லாருக்கும் தெரியும். அதை விட நல்ல மனிதர் என்று கூறலாம்.
 

ரமணன் - ஜயஸ்ரீ பிக்சர்ஸ்

நானும் மோகனும் நீண்ட நாளைய நண்பர்கள். எனக்கு தோன்றினால் நான் அவரிடம் உரிமையோடு தொலைபேசியில் கூப்பிடுவேன். அவரும் அப்படியே. அவருடைய எல்லா நாடகத்தையும் என்னைப் பார்க்க கூப்பிடுவார். நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போய்ப் பார்த்துவிட்டு எனது பாராட்டுகளைத் தெரிவித்து விட்டு வருவேன். என்னுடன் பல கதைகளை அவர் விவாதித்ததுண்டு. அப்போதெல்லாம் அவர் விருப்பத்திற்கு மாறாக, நமது விமர்சனத்தை சொன்னாலும் அவர் பொறுமையுடன் கேட்டுக் கொண்டு, காரண காரியங்களை நமக்குப் பதில் கூறும் முகமாக எடுத்துச் சொல்வார். எள்ளளவு கோபமும் கொள்ளமாட்டார். தனது நாடகத்தின் மூலம் எவ்வளவு பேருக்கு உதவி இருக்கிறார் என்று கேட்டால் அது எண்ணில் அடங்காது. நான் நல்ல நண்பரையும் திரை உலகம் ஒரு சிறந்த வசனகர்த்தாவையும் இழந்து நிற்கிறது என்று கூறலாம்.
 

தொகுப்பு: எஸ்.ஆர்.ஏ - ஜி.ஏ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com