நினைவு தினம்: விசுவுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரபலங்கள்!

இருவரும் தனித்தனியாக வந்து எங்கள் பாதையில் சென்று கொண்டிருந்தோம்...
நினைவு தினம்: விசுவுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரபலங்கள்!

நடிகரும் பிரபல இயக்குநருமான விசு (75), உடல்நலக்குறைவால் 2020-ம் வருடம் மார்ச் 22 அன்று சென்னையில் காலமானாா். 

விசுவுடனான அனுபவங்களைப் பிரபலங்கள் பகிர்ந்துகொண்டபோது...

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்

எங்களிடம் வசனகர்த்தா இயக்குநர் விசு பல படங்களுக்கு வேலை செய்துள்ளார். சில படங்களுக்குஅவரது யோசனைகளை நாங்கள் கேட்டபோது எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் சொல்லியுள்ளார். அப்படி சொன்னதால்தான் "ஷங்கர் குரு' மற்றும் "போக்கிரி ராஜா' படங்கள் வெற்றி பெற்றன. அவர் எங்களிடம் வேலை செய்த மற்றொரு படம் "நல்லவனுக்கு நல்லவன்'.

இந்த படத்தில் வேலை செய்த அவருக்கு நான் ஒப்புக்கொண்டதை விட இரு மடங்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தேன். அப்பொழுது அவர், ""சம்பளம் உயர்த்தி கொடுப்பதை விட, எனக்கு ஒரு படம் கொடுங்கள். அது எனக்கு மகிழ்ச்சியை தரும்'' என்றார். அப்பொழுது நான், ""நீங்கள் ஒருநாளைக்கு இரண்டு, மூன்று படங்களுக்கு வேலை செய்கிறீர்கள். அப்படி இல்லாமல் எப்பொழுது, எங்கள் படத்திற்கு மட்டும், நீங்கள் வேலை செய்ய முடியுமோ, அப்பொழுது வாருங்கள், நான் உங்களுக்கு படம் கொடுக்கிறேன்'' என்று சொன்னேன். ""சரி'' என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். சில மாதங்கள் கழித்து என்னிடம் வந்த அவர், ""நீங்கள் அன்று சொன்ன வார்த்தை இன்றும் அப்படியே இருக்கிறதா?'' என்று கேட்டார்.

""நான் சொன்னது அப்படியே இருக்கிறது. உங்களுக்கு ஒரு படம் கொடுக்கிறேன். நீங்கள் ஒரு கதை கூறுங்கள்'' என்று சொன்னேன். அவர் சில கதைகளைக் கூறினார். அவை என்னைக் கவரவில்லை. ""நீங்கள் குடும்பக் கதைகளைப் படமாக்குவதில் வல்லவர். அப்படிப்பட்ட ஒரு கதை சொல்லுங்கள்'' என்றேன்.

""ஒரு கதை இருக்கிறது. ஆனால் அது படமாக்கப்பட்டு வெளிவந்து விட்டது. ஆனால் அந்த படம் சரியாக போக வில்லை'' என்றார். ""சொல்லுங்கள் கதையை'' என்று கேட்டேன். கதையை அவர் சொன்னவுடன், நான், ""இந்த கதையில் நகைச்சுவை இல்லை. வீட்டில் ஒரு வேலைக்காரி கதாபாத்திரத்தை உருவாக்குங்கள். அந்த வேலைக்காரி பாத்திரம் இந்த குடும்பத்திற்கு உதவுவதாக காண்பியுங்கள்'' என்றேன். ஒரு நான்கு நாளைக்குப் பிறகு திரும்பி என்னிடம் வந்து முழுக் கதையையும் கூறினார்.

அதில் வேலைக்காரி பாத்திரம் சரியாக பொருந்தி இருந்தது. பிறகு, “""நடிகை மனோரமாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வையுங்கள்'' என்றும் யோசனை கூறினேன். அதுதான் மேடை நாடகமாக நடிக்கப்பட்டு வந்த “"உறவுக்கு கை கொடுப்போம்'” என்ற நாடகம். அதற்குப் பிறகு அதுதான் “"சம்சாரம் அது மின்சாரம்'” ஆகியது.

""உங்களுக்கு படம் பண்ண எவ்வளவு பணம் தேவை?'' என்று அவரிடம் கேட்டேன். “""ஒரு பதினைந்து லட்சம் ரூபாய் இருந்தால் படமாக எடுத்து உங்களிடம் என்னால் தரமுடியும்'' என்றார். அதற்கு நான் ,“""உங்களுக்கு அந்த பணத்தை தருகிறேன். நீங்கள் படமெடுத்து தாருங்கள்'' என்றேன்.

சிறிய சிறிய கதாபாத்திரங்கள் ஏதும் இப்படத்தில் இல்லை. நடனமும் நடன கலைஞர்களும் இல்லை. அதே போல் சண்டை கலைஞர்களும் இல்லை. அவர் கேட்டது ஒரு வீட்டிற்கான செட்டை மட்டும் போட்டுக் கொடுத்தேன். அதுவும் இந்த பணத்தில்தான் அவர் முடித்துக் கொண்டார். அவ்வளவு சிக்கனமாக செலவு செய்தார். அவர் 35 நாட்களில் 34 ரோலில் படத்தையே முடித்து விட்டார்.
படத்தை எனது விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காண்பித்தேன். யாருமே இந்த படத்தை வாங்க முன் வரவில்லை. ஆனாலும் அவர்களுக்கு நாங்கள் பல்வேறு விஷயங்களை சொல்லி விற்றோம். படம் வெளியானது. வெள்ளி விழா படமாகியது.

விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்தைவிட பத்து மடங்கு அதிகமாக பணத்தைத் அவர்களுக்கு பெற்று தந்தது. அது மட்டும் அல்ல, மத்திய அரசின் தேசிய விருதில் இந்தபடத்திற்கு Best Popular Film Providing Wholesome Entertainment என்ற விருதும் முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு தங்கப்பதக்கமும் கிடைத்தது என்றால் அது இந்தப்படத்திற்குத்தான்.

எங்கள் படத் தயாரிப்பு நிறுவனத்தில் எங்களுக்குக் கிடைத்த ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் (பாக்யராஜை தவிர்த்து) என்றால் அது விசு தான். ஒரு சிறந்த திரைப்பட வசனகர்த்தாவை மட்டும் அல்ல; ஒரு நல்ல இயக்குநரையும் தமிழ் திரைப்பட உலகம் இழந்து விட்டது என்று தான் சொல்லுவேன்.

நடிகை கமலா காமேஷ்

கமலா காமேஷ் என்று ஒருவர் இன்று இருக்கிறார். அவர் நடிக்கிறார் என்றால் அதுற்கு காரணம் விசு என்ற மாமனிதர்தான்.

அவர்தான் என்னை நடிக்க வைத்தார். முதலில் நான் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தேன். அதுவும் எப்படி? திடீரென்று யாராவது ஒரு நடிகை வராமல் போய் விடுவார்.

நான் அவருக்கு மாற்றாக நடிக்கப் போய் விடுவேன்.

இப்படி நான் நடிக்க ஆரம்பித்த போது ஒரு நாள் நான் காலை ஒரு நாடகத்தில் நடிக்க, மாலையிலும் நான் வேறு ஒரு நாடகத்தில் நடிக்க, என்னைப் பார்த்த இயக்குநர் பாரதிராஜா, "என்னிடம் வந்து வேறு நடிகைகளே இல்லையா'
என்றார்.

நான் சொன்னேன், காலையில் வேறு ஒருவருக்கு மாற்றாக நடித்தேன். மாலையில் எனது வேடத்தில் நடித்தேன் என்று சொன்னேன்.

என்னை தனது "அலைகள் ஓய்வதில்லை' என்ற படத்தில் நடிக்க அழைத்தார், இயக்குநர் பாரதிராஜா. அதற்குக் காரணமாக அமைந்தது விசுவின் நாடகங்கள்தாம்.

விசு எப்பொழுதுமே பெண்களை உயர்வாகப் பார்த்தே பழகியவர். எனது கணவர் காமேஷ் இறந்த பொழுது நான் நிர்க்கதியாக நின்றேன்.

அப்பொழுது விசுவும், அவரது சகோதரர்களும் சேர்ந்து எல்லா வேலைகளையும் அவர்களாகவே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து எனக்கு ஆறுதல் கூறினார்கள். அவரது இழப்பு என்னைப் போன்றவர்களுக்குப் பேரிழப்
பாகும்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

தயாரிப்பாளர் மணி என்னிடம் வந்து ஒரு நாடகம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.

""குடும்பம் ஒரு கதம்பம் என்ற நாடகம் நன்றாக இருக்கிறது. நீங்கள் அதைப் பார்த்து விட்டு ஒப்புதல் அளித்தால், அதையே படமாக்கலாம்'' என்று சொல்ல, நான் நாடகம் பார்க்க சென்றேன்.

எனக்கும் பிடித்திருந்தது. நாடகத்தைப் படமாக்க முடிவு செய்ததுடன் மற்ற விஷயங்களைப் பேச முடிவு செய்து விசுவை அலுவலகம் அழைத்தோம்.
விசு நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தில், அவரையே நடிக்க வைக்க முடிவு செய்தேன். படத்தில், அது கதையின் நாயகன் பாத்திரம்.
அவருக்கே முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

இதன் மூலம் அவரை ஒரு நடிகனாக திரையில் நாங்கள் அறிமுகப்படுத்தினோம் என்றும் சொல்லலாம். அவரது எழுத்துகள், அது நாடகமாக இருந்தாலும் சரி, படமாக மாறினாலும் சரி ஒளி வீசக்கூடியவை.
அது நடுத்தர மக்களையும், அவர்களின் அன்றாட வாழ்க்கையையும் பிரதி பலிக்கும் வகையில் அமைந்திருந்தது.

என்னுடைய பல படங்களுக்கு அவர் திரைக்கதையையும், வசனங்களையும் எழுதி இருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் “"ஊருக்கு உபதேசம்' மற்றும் “"நல்லவனுக்கு நல்லவன்'” ஆகியவற்றைக் குறிப்பிடலாம். நாங்கள் இருவரும் இணைந்து இயக்குநர் கே.பாலசந்தர் பட நிறுவனத்திற்காக "நெற்றிக்கண்' ” என்ற படத்தை செய்துள்ளோம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இரட்டை வேடம்.

விசுவின் வசனங்கள் ரஜினிகாந்தை ஸ்டைலாகக் காட்டியது என்று சொன்னால் அது மிகையில்லை. அவரது படங்கள் அவரது பெயரைச் சொல்லும்படி இருக்கும் என்று தாராளமாக சொல்லலாம். எனக்கு பட்ஜெட்டில் படம் பண்றவன் என்று பேரு உண்டு. ஆனால் எனக்கே விசு பட்ஜெட்டை சொல்லி தந்தார் என்றும் கூறலாம். அந்த அளவிற்கு சிக்கனம்.

"அரட்டை அரங்கமும்', "மக்கள் அரங்கமும்', நாட்டையும் மக்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியினால் பல்வேறு உதவிகளைப் பலருக்கும் விசு செய்தார் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அவர் தான் ஓர் எழுத்தாளர் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுபவர்.

என்னிடம் தனது பேனாவைக் காட்டி, "" இது இருக்கும் வரை எனக்குப் பிரச்னை இல்லை'' என்று மகிழ்ச்சியுடன் கூறுவார். அவர் மனைவி தான் அவருக்கு எல்லாமே. அவரது எழுத்து, சினிமா உள்ளளவும் நிலைத்து நிற்கும் என்பது நிச்சயம்.

நடிகர் டெல்லி கணேஷ்

நான் டெல்லியில் இருந்து சென்னை வந்த சமயம். இங்கு முதலில் நான் ஒரு நாடகத்தில் நடிக்க இருந்தேன். அதுதான் "டவுரி கல்யாண வைபோகமே'. அதில் ஒரு காட்சியில் என்னை வெளியே போ என்று சொல்லாமல் அடித்து விரட்டுவது போல காட்சியை அமைத்திருந்தார்கள்.

நான் காத்தாடி ராமமூர்த்தியிடம் சென்று "இப்படி செய்ய மாட்டார்கள். உரக்க திட்டி அனுப்பி வைத்து விடுவார்கள்' என்று கூறினேன். அவர் என்னை விசுவிடம் சென்று சொல்ல சொன்னார். நான் சொன்னவுடன் என்னைக் கூர்ந்து பார்த்து விட்டு என்னைப் பற்றிய விவரமெல்லாம் கேட்டார். நானும் சொன்னேன். நான் மாற்றி எழுத வைக்கிறேன் என்றார். அவர் பெரிய திரைக்குச் சென்ற பொழுது என்னையும் கூட்டிக் கொண்டு சென்றார்.

ஒரு முறை என் கதாபாத்திரம் ஓர் இடத்தில் அவமானப்படும் நிலையில் நான் சோகத்தில் உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று "கட்' என்று அவர் சொல்ல, ஏதேனும் தவறாக செய்து விட்டோமோ என்று நான் யோசிக்க, அவரோ, ""நாங்கள் எல்லாரும் படம் முழுக்க வந்து நடித்துக் கொண்டிருப்போம். நீங்கள் ஒரு நொடியில் நடித்து விட்டு எங்களை எல்லாம் சாப்பிட்டு விட்டு எல்லா கைதட்டலையும் ஒரு சேர வாங்கிக் கொண்டால் எப்படி?'' என்று கூறினாரே பார்க்கலாம்.

நல்ல மனிதர். சிறந்த எழுத்தாளர். திறமையான இயக்குநர்.

இயக்குநர், நடிகர் மெளலி

நானும் விசுவும் 1963-64 முதல் இணை பிரியாத நண்பர்கள். எங்களைப் பல இடங்களில் ஒன்றாகத்தான் பார்க்கலாம். நான் முதலில் சினிமாவிற்கு வந்தால் விசுவை கூடக் கூட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்றும் அவர் முதலில் நுழைந்தால் என்னை கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது எழுதாத சட்டம். இருவரும் தனித்தனியாக வந்து எங்கள் பாதையில் சென்று கொண்டிருந்தோம்.

அப்பொழுதெல்லாம் விசு ஒரு டிராவல் ஏஜென்சியில் வேலை செய்து கொண்டிருந்தார். மலேசியாவிற்கு செல்லும் விமானம் நடு இரவு தான் கிளம்பும். அதனால் அவரது பணி இரவு சுமார் 11 மணிக்குத்தான் முடியும். நாங்களும் வீட்டுக்கு கிளம்புவோம். ஏழு நாட்களில் சுமார் 5 அல்லது 6 நாட்கள் இந்த நிலை தொடரும்.

உண்மையைச் சொல்லப் போனால் தினமும் இதையே பார்த்ததனால் தோன்றிய யோசனைதான் "ஃப்ளைட் 172'. நாடகமாக உருப் பெற்றது. குழுவில் உள்ள எல்லோருக்கும் இந்த நாடகத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் இருந்தது. ஆனால் யாரால் நான் இந்த நாடகத்தை எழுதினேனோ, அந்த விசுவிற்கு இந்த நாடகத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் இல்லை என்ற போது அது எனக்கே சரியாகப் படவில்லை.

அவருக்காக நான் உருவாக்கியது நிருபர் கதாபாத்திரம். முதலில் இந்த நாடகம் முழுக்க முழுக்க சிரிப்பதற்காகவே எழுதிய ஒரு நாடகம். மற்ற நாடகங்களில் ஒரு கதை இருக்கும். சிரிப்பதற்காக ஒரு 5 அல்லது 6 காட்சிகள் இருக்கும். ஆனால் முதல் முறையாக இப்படி ஒரு நாடகத்தை முதலில் பயத்துடனேயே எழுதினேன். என்னைப் பொருத்தவரை விசு, சிறந்த நண்பர் மட்டும் அல்ல, நல்ல எழுத்தாளர், திறமையான இயக்குநர்.

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்

நானும் விசுவும் 1966 முதல் நண்பர்கள். எங்கள் யுஏஏ குழுவில் மெளலி -விசு இருவரும் சேர்ந்து முதல் எங்கள் நட்பு தொடந்தது. அந்தக் காலத்தில் எல்லாம் நானும் விசுவும் பல இடங்களுக்கு இருசக்கர வாகனத்திலே சென்று வருவோம்.
விசுவின் தந்தை இறந்தபோது, எனது அப்பா ஒய்.ஜி.பி அவரது தந்தையின் உடலை வீட்டிற்குக் கொண்டு வந்து இறுதி மரியாதைகள் செய்ய பல்வேறு உதவிகள் செய்தார். அதற்கு என்றென்றும் தான் நன்றி கடன் பட்டிருப்பதாகப் பல முறை என்னிடம் சொல்லியிருக்கிறார்.

அவர் எழுதிய "உறவுக்கு கை கொடுப்போம்' என்ற நாடகத்தை எந்தக் குழுவும் போட விரும்பாத நிலையில், விசுவே ஒரு புதிய நாடகக்குழுவைத் தொடங்க, அதற்கு என் தந்தை பல்வேறு வகையில் உதவிகள் செய்தார். நான் அந்த நாடகத்தை இயக்க ஒப்புக் கொண்டேன். "விஸ்வ சாந்தி' என்ற பெயரில் அவரது சொந்த குழு உருவாயிற்று.

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரிக்க விரும்பினார். நான் இயக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் கே.எஸ்.ஜி. பல்வேறு வகையில் யோசனை தெரிவித்து செய்ததால் படம், தோல்வியை தழுவியது. ஆனால் அதே கதையை "சம்சாரம் அது மின்சாரம்' என்று ஏவிஎம் தயாரிக்க அதை வெள்ளிவிழா படமாக மாற்றினார் விசு.

நடிகர் எஸ்.வி.சேகர்

நானும் விசுவும் 50 ஆண்டுகால நட்பு. அவரது நாடகத்திற்கு நான் ஒலிகள் அமைக்கும் பணியில் இருந்த போதிலிருந்தே எங்கள் பழக்கம் தொடர்ந்தது. அவர் என்னை விடப் பல வயது பெரியவர் என்பதால் எனக்கு அண்ணா முறையாகும் என்று கூட சொல்லலாம். ஒரே நாளில் எனக்காக எழுதி தந்த நாடகங்களும் இருக்கின்றன. ஒரு முறை நாங்கள் இருவரும் ஓர் எழுத்தில்லா உடன்படிக்கை செய்து கொண்டோம். யாருக்கு யார் தேவைபட்டாலும் மற்றவர் அவருக்குத் துணையாக வந்து நிற்க வேண்டும். அவர் அதை மிகவும் சிறப்பாக கடைப்பிடித்தார். அதனால் தான் அவரது 20 படங்களில் என்னால் நடிக்க முடிந்தது.

இன்று பலவற்றிக்கு இரண்டாம் பாகம் வருகிறது. அவர் இயக்கிய முதல் படமான "மணல் கயிறு' மிக சிறப்பாக ஓடிய படம்.

அந்தப் படத்திற்கு ஓர் இரண்டாம் பாகத்தை எடுக்க எனது விருப்பத்தைத் தெரிவித்தேன்.

முதல் படத்தில் நடித்த எல்லாரும் இதிலும் நடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.

அவரது உடல் நிலை சரியில்லாத போதும் நான் வந்து நடித்து கொடுக்கிறேன் என்று கூறினார். ""நீங்கள் என்று பூரணமாகக் குணம் அடைகிறீர்களோ, அன்று வைத்து கொள்ளலாம். அதுவரை நான் காத்திருக்கிறேன்'' என்று அவருக்குத் தெரிவித்தேன்.

(2020 மார்ச் மாத தினமணி கதிர் இதழில் வெளியானது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com