சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் 'எதற்கும் துணிந்தவன்' கடந்த மார்ச் 10 ஆம் தேதி வெளியானது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
'ஜெய்பீம்' படத்துக்கு பிறகு சூர்யா இந்தப் படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். பொள்ளாச்சி குற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், சூரி, புகழ், இளவரசு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படத்தின் மொத்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படம் ரூ.179 கோடி வசூலித்துள்ளதாம்.