
யூடியூப் தளத்தில் நடிகைகளைப் பற்றி பேசியது தொடர்பாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் புகார் அளித்தார். இதையடுத்து தன்னைப் பற்றி தவறாகப் பேசி வரும் கே. ராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் இன்று புகார் அளித்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
பத்திரிகைத் துறையில் 45 ஆண்டு காலம் அனுபவம் உள்ளவன். என்றும் என்னை வாழ வைப்பது யூடியூப் சேனல் மட்டுமே. ராஜன் கூறுவது முற்றிலும் பொய். நான் இதுவரை எந்த சினிமா நடிகர், நடிகைகளிடமும் பணம் வசூலித்ததில்லை. மேலும் நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா பிரமுகர்கள் மீது தக்க ஆதாரங்களுடன் தகவல்களையும் செய்திகளையும் சமூகவலைத்தளங்களில் பேசி வருகிறேன். எனக்கு யூடியூப் சேனல்களில் மில்லியன் கணக்கான ஃபாலோயர்ஸ் உள்ளார்கள். யூடியூப் சேனலில் உண்மையை மட்டுமே பேசி வருகிறேன். தவறான தகவல்களை யூடியூப் மற்றும் சமூகவலைத்தளங்களில் தெரிவிப்பதில்லை.
நான் யூடியூப் சேனல்களில் அப்போதைய நடிகர் ஜெய்சங்கர் முதல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வரை பேசியுள்ளேன். என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து மட்டுமே யூட்யூபில் மற்றவர்களைப் பற்றிப் பேசி வருகிறேன். மக்கள் அதற்குப் பெருமளவு ஆதரவு அளித்து வருகிறார்கள். எனக்கு தனிப்பட்ட யூடியூப் சேனல் எதுவும் இல்லை. நான் பிற யூடியூப் சேனல் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் மட்டுமே பங்கேற்று பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.