அதர்வாவுக்கு கைகொடுக்குமா ‘பட்டத்து அரசன்’? திரைவிமர்சனம்

களவாணி, வாகை சூட வா, நய்யாண்டி, சண்டிவீரன் படங்களை இயக்கிய இயக்குநர் சற்குணம் நடிகர் அதர்வாவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் பட்டத்து அரசன்.
அதர்வாவுக்கு கைகொடுக்குமா ‘பட்டத்து அரசன்’? திரைவிமர்சனம்

களவாணி, வாகை சூட வா, நய்யாண்டி, சண்டிவீரன் படங்களை இயக்கிய இயக்குநர் சற்குணம் நடிகர் அதர்வாவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் பட்டத்து அரசன்.

நடிகர் அதர்வாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் ராதிகா சரத்குமார், ஆஷிகா ரங்கநாதன், ஜெயபிரகாஷ், சிங்கம் புலி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுபாஸ்கரன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

கபடி விளையாட்டு வீரராக வாழ்ந்து ஊருக்கு பெருமை சேர்த்த பொத்தாரியை (ராஜ்கிரண்) ஊரே சேர்ந்து ஒதுக்கி வைக்கும் சூழல் ஏற்படுகிறது. அதிலிருந்து மீள மீண்டும் கபடி போட்டியில் ராஜ்கிரண் மற்றும் அவரது குடும்பத்தினருடன் களமிறங்குகிறார் பேரன் அதர்வா. அவர்கள் கபடி போட்டியில் வென்று தங்களது குடும்பத்தின் மீதான களங்கத்தை நீக்கினார்களா இல்லையா என்பதே கதை. 

தமிழ் சினிமாவில் ஏற்கெனவே பழகிப் போன குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்படும் நபராக இருக்கிறார்கள் அதர்வாவும், அவரது தாய் ராதிகாவும். மீண்டும் தங்களது குடும்பத்தினருடன் இணைய போராடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் நடிகர் அதர்வா. ஆனால் அது போதவில்லை. கபடி போட்டியில் வென்றால்தான் நீதி போன்ற கதை வரிகள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டே வருவதால் எத்தகைய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் நகர்கிறது படம். சூழ்ச்சியால் தற்கொலை செய்துகொள்ளும் தம்பியாக நடித்துள்ள ராஜ் அய்யப்பா ஆறுதல். 

நாயகியாக வரும் ஆஷிகா ரங்கநாத் படத்தின் தொடக்கத்தில் வருகிறார். திடீரென காணாமல் போகிறார். பிறகு மீண்டும் வருகிறார். போட்டியில் கலந்துகொள்ள ஆள் தேவை என்பதால் அதற்கு திடீரென திருமணம் நடத்தி அதன் மூலம் ராஜ்கிரணின் குடும்பத்து ஆள் எனும் தகுதியில் போட்டியில் சேர்கிறார் நாயகி. 

கபடி வீரராக ஒட்டு மொத்தமாக படத்தை நகர்த்தி செல்லும் பொறுப்பு ராஜ்கிரணுக்கும், அதர்வாவுக்கும். அதே ஊர் பெரிய தலைக்கட்டு தோற்றத்தில் நன்றாக நடித்துள்ளார் ராஜ்கிரண். தொய்வான காட்சி அமைப்புகள், வழக்கமான வசனங்கள், சுவாரஸ்யமின்மையுடன் கூடிய எழுத்து என படத்தை பின்னுக்கு இழுப்பவை ஏராளம். 

படம் முழுக்க கபடி காட்சிகள் இடம்பெறுகின்றன. கபடி வீரர்களாக வருபவர்கள் எப்போதும் கபடி பனியன்களுடனே உள்ளனர். மக்கள் உட்கார்ந்து கபடி பயிற்சி காட்சிகளை பார்த்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த ஊர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பே இல்லையா என கேட்கும் அளவிற்கு இருக்கிறது காட்சிகள்.  

முதல்பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதி சற்று விறுவிறுப்பாக உள்ளது. பின்னணி இசை சற்று ஆறுதல். எனினும் அவ்வப்போது தொலைக்காட்சியில் நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடிவதில்லை. தோகை மயில்தோகை பாடல் முணுமுணுக்கும் ரகம்.

வழக்கமான கதையை சுவாரஸ்யமாக நகர்த்த முடியாமல் தவித்திருக்கிறார் இயக்குநர் சற்குணம்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com