நட்சத்திரம் நகர்கிறது: இடதுசாரிகளுடன் மோதுகிறாரா பா.ரஞ்சித்?

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மற்றும் காட்சிகள் இடதுசாரிகள் மற்றும் பா.ரஞ்சித் அணியினரிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. 
நட்சத்திரம் நகர்கிறது: இடதுசாரிகளுடன் மோதுகிறாரா பா.ரஞ்சித்?
நட்சத்திரம் நகர்கிறது: இடதுசாரிகளுடன் மோதுகிறாரா பா.ரஞ்சித்?

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மற்றும் காட்சிகள் இடதுசாரிகள் மற்றும் பா.ரஞ்சித் அணியினரிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் தமிழ் திரைச்சூழலில் அரசியல் உரையாடலை ஏற்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. அட்டகத்தி முதல் நட்சத்திரம் நகர்கிறது வரை இதற்கு விதிவிலக்கல்ல. அம்பேத்கரிய தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் அதையொட்டி வைக்கும் பிற அரசியல் கட்சியினர் மீதான விமர்சனங்கள் விவாதத்தை ஏற்படுத்துவது வழக்கம். 

அந்ந வகையில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் பேசியுள்ள கருத்துகள், இடதுசாரிகள் மீதான விமர்சனங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. 

யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. காதல் மற்றும் அதனைச் சுற்றிய அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், கலையரசன், சிந்துஜா விஜி, ஷபீர் என பலர் நடித்துள்ளனர். 

தொடக்கத்தில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வந்த இந்தத் திரைப்படமானது கடந்த சில தினங்களாக விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக படத்தில் பேசப்பட்டுள்ள சாதி குறித்த இடதுசாரிகளின் பார்வை, வர்க்கப் போராட்டம், சாதி ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து வைக்கப்பட்டுள்ள காட்சிகளை இடதுசாரிகள் விமர்சித்து வருகின்றனர். 

இடதுசாரி அமைப்புகள் நிலவும் சாதிய நடவடிக்கைகள் என பா.ரஞ்சித்தின் ஆதரவாளர்களும், நீலம் பண்பாட்டு மையமும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். தலித் மக்களுக்காக இடதுசாரிகள் களமாடுவதில்லை என்றும், அம்பேத்கரிஸ்ட் என தங்களை அழைத்துக் கொள்வதில் இடதுசாரிகளுக்கு என்ன பிரச்னை என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

திரைப்படத்தில் இடம்பெற்ற அம்பேத்கரியவாதி, கம்யூனிசவாதி இடையேயான ஒப்பீடு சமகால அரசியல்சூழலுக்கு அவசியமானதா என்கிற வகையில் முகநூல் தளத்தில் இடதுசாரி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

இயக்குநர் பா.ரஞ்சித் இடதுசாரிகள்  மீதான வன்மத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கும் இடதுசாரி ஆதரவாளர்கள் இதுகுறித்து ஆழமான உரையாடல் அவசியமானது என குறிப்பிடுகின்றனர். முந்தைய திரைப்படமான காலாவில் லெனின் எனும் கதாபாத்திரத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனம் தொடங்கி நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் இனியன் கதாபாத்திர வடிவமைப்பு வரை கம்யூனிசத்திற்கு எதிரான பா.ரஞ்சித்தின் எண்ண வெளிப்பாடு என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

மேலும் திரைப்படத்தில் பேசப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை சாதியவாதிகளே விமர்சிக்கின்றனர் என்கிற பார்வை பலருக்கும் மாறுபட்ட கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்க ஏதேனும் தகுதிகள் இருக்கின்றனவா? குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே ஒருவரை விமர்சிக்கக் கூடாதா? என்கிற கேள்விகளோடு விவாதங்கள் தொடர்கின்றன.   

பெளத்தம் சாதியை ஒழிக்குமா? வர்க்கப் போராட்டம் சாதியை ஒழிக்குமா? என்கிற விவாதத்தில் இணையத்தில் நடக்கும் மோதல்கள்  அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com