நாகேஷுக்குப் புது வாழ்வளித்த சர்வர் சுந்தரம் - அசோகமித்திரன்

தமிழ் சினிமா என்றால் பேச்சு - அதுவும் உரத்த குரலில்- என்று அர்த்தப்படுத்திக்கொண்டார்.
படங்கள் - twitter.com/avmproductions
படங்கள் - twitter.com/avmproductions
Published on
Updated on
5 min read

நான் ஜெமினி ஸ்டுடியோவில் 1952-இல் சேர்ந்தபோது எனக்கு மோட்டார் கம்பெனிகளோடு தொடர்பு ஏற்படும் என்று நினைத்ததில்லை. என் முதலாளி வண்டி மாரிஸ் மைனர் அல்லது மாரிஸ் டென், ஒரு செவரலே ஸ்டேஷன் வாகன், இதர வண்டிகள் ஃபியட். இவற்றை உரிய காலத்தில் முழுப் பரிசோதனை புரியவும் பழுது ஏற்பட்டால் சரிபார்க்கவும் உரிமை பெற்றவர்கள் சுந்தரம் மோட்டார்ஸ். அப்படித்தான் அந்த நிறுவனத்தின் பல பணியாளர்கள் எனக்குத் தெரிந்தவர்களானார்கள். பலர் ஓரளவு பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். ஒருவர் தி.நகர் பர்கெட் சாலையில் பெற்றோருடன் வசித்தார். அந்தக் குடும்பத்தார் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்களானார்கள். என் நண்பர் மூலம் நாகேஷும் தெரியவந்தார்.

அன்று சிவ-விஷ்ணு ஆலயத்தின் எதிரில் தனி நபர்கள் வாடகைக்குத் தங்கக் கூடிய கிளப் ஹவுஸ் என்று ஓர் அமைப்பு இருந்தது. அந்த கிளப் ஹவுஸில் ஒரு பெரிய அறையில் டேபிள் டென்னிஸ் விளையாட வசதி இருந்தது. இப்போது கபில்தேவ் கால்ஃப் ஆடுவதுபோல ரஞ்சி டிராபி பந்தயங்களில் ஆடிய நண்பர் கிளப் ஹவுஸில் டேபிள் டென்னிஸ் ஆடத் தொடங்கினார். அந்த ஆட்டமும் நான் சுமாராக ஆடுவேன்.

நாகேஷும் ஸ்ரீதருக்கு உதவியாளராக இருந்த ஓர் இளைஞரும் அங்கு டேபிள் டென்னிஸ் ஆடும் சாக்கில் மணிக் கணக்கில் நண்பர்களுடன் பேச வருவார்கள்.

அப்போது நாகேஷ் மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் சாலையில் ஒரு வீட்டில் இருந்தார். நான் அவர் வீட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தாலும், அவருடன் வசித்தவர்கள் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியவில்லை. நாகேஷ் ஓரிரு நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார்.

பொதுவாக நடிப்பைப் பற்றி நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தாலும் அன்று தமிழ் நடிகர்களில் நகைச்சுவையில் யார் சிறந்தவர் என்று விவாதம் வந்தது. அப்போது சந்திரபாபு நட்சத்திரமாக ஆகவில்லை. ஆனால் டி.ஆர்.ராமச்சந்திரன் கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி (1954) படத்தில் சிவாஜி கணேசனுக்குச் சரி சமமானவராகவும் பின்னர் அடுத்த வீட்டுப் பெண் (1960) படத்தில் நகைச்சுவை நடிகர்கள் தங்கவேலு, கருணாநிதி ஆகியோரை விஞ்சும் விதத்திலும் நடித்திருந்தார். எல்லாப் படங்களிலும் டி.ஆர். ராமச்சந்திரன் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு முகபாவமும் தெரியாதபடி பார்ப்பார். இந்த blank stare நடிப்பில் சார்லி சாப்ளினும் பஸ்டர் கீட்டனும் மிகச் சிறந்தவர்கள். நாகேஷுக்கும் இந்த blank stare பயன்படுத்த வேண்டும் என்று விருப்பம்.

அவருக்கு முதன்முதலாகத் திரைப்பட வாய்ப்புக் கிடைத்த தாமரைக் குளம் படத்தில், ஏழை படும்பாடு படத்திற்குப் பிறகு ஒரு பெரிய வேடமாக வி. கோபால கிருஷ்ணனுக்குக் கிடைத்தது. படம் ஓடவில்லை. அதற்கு ஒரு காரணத்தையும் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் அதில் நடித்தவர்கள் ‘ராசியில்லாதவர்கள்’ என்று தீண்டப்படாதவர்களாகிவிட்டார்கள். அதன் பிறகு வி. கோபாலகிருஷ்ணன் சிறிது காலம் சகஸ்ரநாமம் நாடகங்களில் நடித்தார். பின்னர் அவருடைய வாழ்க்கை மாறி மாறி சிவாஜி கணேசன் அல்லது எம்.ஜி.ஆர். அவர்களின் செயலராக இருப்பதில் கழிந்தது. கிடைத்த தொலைக்காட்சி, திரைப்பட வாய்ப்புகள் விசேஷமாக அமையவில்லை.

நாகேஷ் என்வரை தொலைந்து போய்விட்டார். ஆனால் கே. பாலச்சந்தரின் சர்வர் சுந்தரம் அவருக்குப் புது வாழ்வு அளித்தது. அவருக்கு ‘Silent’ or ‘blank stare’ சரிப்படாது எனத் தோன்றியிருக்க வேண்டும். தமிழ் சினிமா என்றால் பேச்சு - அதுவும் உரத்த குரலில்- என்று அர்த்தப்படுத்திக்கொண்டார். அவருடைய மகத்தான படங்கள் என்று தேர்ந்தெடுக்கப்படுவதில் எல்லாம் அவர் கத்தியிருப்பார். அதுதான் வெற்றிக்குச் சூத்திரமாக இருந்திருக்கிறது. அவருடைய உற்ற போஷகர்களாகப் பாலச்சந்தரும் ஸ்ரீதரும் இருந்தார்கள். ஸ்ரீதர் அவருடைய கண்டுபிடிப்புகள் எவரையும் கைவிட்டதில்லை. உண்மையில் அன்று கிளப் ஹவுஸில் எங்களுடன் மணிக் கணக்கில் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதர் உதவியாளருக்கு ஒரு திரைப்படத்தை இயக்கக்கூட ஏற்பாடு செய்தார். ஆனால் சக்கிரவர்த்திகள் மகுடங்களை இழந்துவிடும் காலம் வந்துவிட்டது.

நாகேஷின் அபாரத் தன்னம்பிக்கை அவருக்கு வாய்ப்புத் தேடித்தந்தது. ஆனால் வாய்ப்பைப் பூரணப் பயனுள்ளதாக மாற்ற நாகேஷுடைய கற்பனை தேவைப்பட்டது. அவர் மனத்தில் ஏராளமான சூழ்நிலைகள், முன்மாதிரிகள் உண்டு. சிறிது காலம் ஜெர்ரி லூயிஸ் என்னும் ஹாலிவுட் நடிகனை இலக்காகக் கொண்டார். விரைவிலேயே சற்றே மிகையான உடல் அசைவுகளுடன் சொல்லும் வசனம் அனைவர் காதையும் எட்டிவிட வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்தார். இது அன்றைய கதாநாயக நட்சத்திரங்களாக இருந்த இருவருக்கும் பொருந்திப்போய்விட்டது.

நாகேஷுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்தது காதலிக்க நேரமில்லை (1964). அதில் இரு கதாநாயகர்கள், இரு கதாநாயகிகள், வண்ணத்தில் அழகிய வெளிப்புறக் காட்சிகள் இருந்தும் படத்தின் அபார வெற்றிக்குக் காரணம் நாகேஷா? பாலையாவா? என்று இன்றுகூடக் கூறுவது கடினம். பாலையாவின் எதிர்வினையில்லாவிட்டால் நாகேஷின் வசனமும் நடிப்பும் கவனம் பெற்றிருக்குமா என்பதும் சந்தேகமே. இது வெளிவந்து பத்து மாதங்களில் சர்வர் சுந்தரம் ஓராண்டுக்குள் திருவிளையாடல் (1965). இதில் சிவாஜி கணேசன், சாவித்திரி, பாலையா போன்ற நட்சத்திரங்கள் பங்குபெற்றிருந்தாலும் சிவனிடமே ஒரு கவிதை பெற்று அதை மன்னன் சபையில் பாடிப் பொற்கிழி பெற முயன்ற ஏழைக் கவிஞனாகத் தோன்றிய நாகேஷ், படத்தில் பத்து நிமிடங்கள்தான் தோன்றினார். ஆனால் படத்தின் மகத்தான வெற்றிக்கு அவர் முக்கிய, ஒருவேளை முதல் காரணமாயிருந்தாரோ என்று யாரையும் நினைக்கவைக்கும்.

அதே போல பாமா விஜயம் என்ற படம் (1967). எனக்குத் தெரிந்து இப்படத்தில் நாகேஷுக்கு ஒரு தனிக் கனவுக் காட்சிகூட இருந்தது. கே. பாலச்சந்தரின் வெற்றிப் படங்களில் இது ஒன்று. இது தெலுங்கு, இந்தியில்கூட எடுக்கப்பட்டது. அதற்கு ஓராண்டு முன்புதான் ஒரு படத்தில் சிவாஜி கணேசனை முதலில் நடிக்கவைத்தாலும், அதன் கதாசிரியர் ஜெயகாந்தன் நடிகை, நடிகையர்களை மாற்றி நாகேஷுக்குத் தலைப்பு வேடம் கொடுத்துப் படத்தை முடித்தார், யாருக்காக அழுதான் (1966) படத்தில் நாகேஷுக்குப் பார்ப்போர் பரிதாபம் கொள்ளும் பாத்திரம். என்னைப் பார்த்து ‘ஐயோ, பாவம்’ என்று சொல்லுங்கள் என்ற செய்தி சற்று மிகையாக இருந்தது. ஆதலால் கலைப்படமாகக்கூட இதை ஒரு சாதனை என்று கூற முடியாதபடி போயிற்று. திருமணம் என்று உறுதியளித்துக் கைவிடப்பட்ட பெண்ணாக வரும் கே.ஆர். விஜயா ‘நான் இழந்ததையெல்லாம் திருப்பித் தர முடியுமா?’ என்று ஒருவரி கூறிப் படத்தையே தன் வசமாக்கிக்கொண்டார். திருவிளையாடல் படத்தை நினைவுபடுத்தும் வகையில், தில்லானா மோகனாம்பாள் (1968) படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள் மத்தியில் ஒரு சிறு வேடத்தில் வந்த நாகேஷ் படத்தை ஒரு கலக்குக் கலக்கினார். பலர் அந்த வேடத்திற்குக் கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்புதான் சரியான பொருத்தம் என்று கூறினாலும் நாகேஷ் அப்பாத்திரத்தின் விசேஷப் பரிமாணங்கள் எதையும் இழக்காமல் பங்குபெற்றார்.

நாகேஷ் நானூறு ஐந்நூறு படங்களில் நடித்துள்ளார் என்று கூறுகிறார்கள். நான் எண்ணிப் பார்க்கவில்லை. நாகேஷின் பரபரப்பான ஆண்டுகள் 1980 அளவில் முடிந்துவிட்டன. அப்போதிலிருந்து அடிக்கத் தொடங்கிய அலையில் நாகேஷ், டில்லி கணேஷ், வி.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் தேவையில்லாதவர்களாகிவிட்டார்கள். ஏழை படும்பாடு படத்திற்குப் பிறகு கோபாலகிருஷ்ணனை நாடிப் பல தயாரிப்பாளர்கள் வந்தபோது அவருடைய தகப்பனார் எம்.ஏ. முடித்த பிறகுதான் என்று கூறிவிட்டார். அந்த இடைவெளி அவருடைய திரைப்பட வாழ்க்கையை மிகவும் பாதித்துவிட்டது.

நாகேஷும் ஒரு காலகட்டத்தில் மரணத்தின் விளிம்பில் இருந்தார். ஆனால் தப்பியபின் பெரிய வேடங்கள் கிடைக்கவில்லை. ஆனால் கமல்ஹாசன் தயாரிப்பாளராக இருந்த படங்களில் நாகேஷுக்குத் தவறாது ஒரு வேடம் இருந்தது. நாகேஷுக்கும் அந்த வேடங்கள் பொருந்திப் போய்விட்டன.

உதாரணமாக மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பல லட்சங்கள் கையாண்ட கணக்கராக இருப்பார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஓர் இரக்கமற்ற தீயவனாக இருப்பார். தசாவதாரம் படத்தில்கூட ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். எப்போதுமே கமல்ஹாசன் படங்கள் வித்தியாச மாகவும் சிறந்த தொழில்நுட்பமும்/ கொண்டவையாக இருக்கும். தவறாது நகைச்சுவை இருக்கும்.

‘ஓடுவது துரத்துவது’ மௌனப் படங்களிலிருந்து இன்றும் சற்றும் அலுக்காத அம்சம். தசாவதாரம் படம்கூட இந்தப் பிரிவைச் சேர்ந்ததுதான். இம்மாதிரிப் படங்களில் எந்த இடத்திலும் ‘ஓடுவது துரத்துவது’ தளர்ச்சி அடையக் கூடாது. அதற்கு தசாவதாரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மைக்கேல் மதன காமராஜனிலும் இந்த அம்சம் படம் முழுவதிலும் இருக்கும்; நாகேஷ் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். குழந்தையில் ஆண், பெண் வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பார்கள், ரொம்ப சரி. குழந்தையாக இருக்கும்போது பெண் குழந்தையை விதவிதமாக உடுத்தி அலங்கரித்து மகிழலாம். ஆனால் இன்றும் பெற்றோர் பெண்ணுக்குத் திருமணம் செய்யும்போது மிகச் சாதாரண மணமகன் என்றால்கூட நிறையச் செலவாகிறது. அந்தக் கவலை தெரிய நாகேஷ் அப்படத்தில் தெரிவார். அவருக்குப் பெண்ணே கிடையாது என்று அஞ்சலிக் குறிப்புகளிலிருந்து தெரிகிறது. ஆதலால் கற்பனை மூலம்தான் வயது வந்த பெண்ணின் தகப்பனாக அவர் தன்னை வருத்திக்கொண்டிருப்பார். இப்படிப்பட்ட கலைஞன் திரைப்படத் துறையால் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தான்!

பத்ம விருதுகளில் பத்மஸ்ரீதான் முக்கியத்துவம் குறைந்தது. இதற்குக்கூட நாகேஷ் சிபாரிசு செய்யப்படவில்லை என்று தினமணி பத்திரிகையில் கலாரசிகன் சற்றுக் கோபமாகவே எழுதியிருப்பார்.

இந்தப் பத்ம விருதுகளைப் பெரிதாக நினைக்கக் கூடாது. தமிழ் மொழி என்றில்லை, இதர மொழிகளிலும் பல பெயர்கள் வியப்பையே தரும். இந்தப் பத்ம விருதுகளைக் கேலிசெய்வதுபோல யாரோ காஷ்மீர் எழுத்தாளர் என்று சிபாரிசு செய்து அவருக்கு விருதும் அறிவிக்கப்பட்டது. அப்படி ஒரு எழுத்தாளரே கிடையாது என்று பின்னர் தெரிந்தது. இந்திரா பார்த்தசாரதி ‘கலைமாமணி’ விருது தனக்கு வேண்டாமென்று அது அறிவிக்கப்பட்ட போதே திருப்பி அனுப்பிவிட்டார்.

நம் மரபுப்படி கௌரவிக்க வந்தவர்களைச் சங்கடப்படுத்துவது சரியல்ல. ஆதலால் ‘இல்லாத’ அந்த எழுத்தாளரும் பத்மஸ்ரீ விருதை ஏற்றுக் கொண்டு பத்ம விருதுகளைக் கவுரவிப்பதுதான் சரி. தனியார் நிறுவனப் பரிசுகளும் விருதுகளும் இதே ரகம்தான். நாகேஷுக்குக் கிடைத்த ஓரிரு விருதுகள்கூட அவர் கலைஞன் என்றில்லாமல் அவர் புகழ்பெற்றவர் என்பதால் இருக்கக்கூடும்.

எனக்கு இன்னும் நினைவில் இருப்பது அவர் டி. ஆர். ராமச்சந்திரனின் Blank Stare பற்றி அவ்வளவு தெளிவாகக் கூறியது அது நாகேஷுக்குச் சாத்தியமாக இருந்ததா? இருந்திருக்கலாம்.

- எழுத்தாளர் அசோகமித்திரன் 

(நாகேஷின் பிறந்த நாள் இன்று.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com