மணி ரத்னம் வைத்த கோரிக்கை; அதிர்ந்து போன திரையரங்கு உரிமையாளர்கள்: அப்படி என்ன கேட்டார்?

திரையரங்குகளின் உரிமையாளர்களைச் சந்தித்த இயக்குநர் மணி ரத்னம் வைத்த கோரிக்கையைக் கேட்டு அதிர்ந்து போனதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மெட்ராஸ் டாக்கீஸ் டிவிட்டர் படம்
மெட்ராஸ் டாக்கீஸ் டிவிட்டர் படம்

பொன்னியில் செல்வன் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக படக் குழுவினர் மும்பை சென்றிருந்தனர். அங்கு மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளின் உரிமையாளர்களைச் சந்தித்த இயக்குநர் மணி ரத்னம் வைத்த கோரிக்கையைக் கேட்டு அதிர்ந்து போனதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பையில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில், பொன்னியின் செல்வன் படத்துக்கு ஒரு டிக்கெட் விலை ரூ.100 என நிர்ணயிக்குமாறும், அவ்வாறு நிர்ணயித்தால் மட்டுமே, ஏழை, எளிய, சாமானிய மக்கள் கூட இந்தப் படத்தை வந்து பார்க்க ஏதுவாக அமையும் என்று மணி ரத்னம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மணி ரத்னத்தின் கோரிக்கைக்கு என்ன முடிவெடுத்தார்கள், ஒப்புக் கொண்டார்களா, மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பதெல்லாம் இதுவரை தெரியவரவில்லை. ஆனால், மணி ரத்னம் வைத்த கோரிக்கையைக் கேட்டதும் மல்டிப்ளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் தூக்கிவாரிப்போட்டதாக தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.

அதாவது, பாலிவுட் திரையுலகில், பெரும்பாலான படங்கள் சரியாக ஓடாததற்கு, திரையரங்குக் கட்டணம் கடுமையாக இருப்பதும் ஒரு காரணமாகக் கூறப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் படத்தின் பட்ஜெட்டைக் குறைக்க வேண்டும், நடிகர், நடிகைகள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டாலும் அது தொடரப்க பெரிதாக இதுவரை பேசப்படவில்லை.

இவை நேரடியாக திரையரங்குகளைத்தான் தாக்குகின்றன. அதன் அடிப்படையில் அது டிக்கெட் விலையின் மீது எதிரொலிக்கிறது. பிறகென்ன, சாதாரண குடும்பத்தினர், குடும்பத்தோடு வந்து படம் பார்க்கும் வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது. சுமாராக ஒரு டிக்கெட் 500 என்று வைத்துக் கொண்டால், 4 பேர் கொண்ட குடும்பம் டிக்கெட்டுக்கு மட்டும் ரூ.2000 செலவிட முடியுமா?  சரி டிக்கெட்டோடு முடிந்து விடுமா.. பாப்கார்ன், ஐஸ் அல்லது காஃபி என நினைத்துப் பார்த்தால் சராசரி குடும்பத்தலைவரின் பர்ஸ் பழுத்துவிடும். இவர்களால் படம் பார்க்க முடியவில்லை,.

சரி பணக்காரர்களாவது திரையரங்குக்கு வருகிறார்களா?  என்றால் இல்லையே. அவர்கள் வீட்டிலேயே மினி திரையரங்கை அமைத்துக் கொண்டு படம் பார்த்து விடுகிறார்கள்.  பிறகு படங்கள் எப்படித்தான் ஓடும்? ஓடிடியில்தான் ஓடுகிறது.

இந்த நிலையில்தான் மணி ரத்னம் தனது கோரிக்கையை மும்பை திரையரங்கு உரிமையாளர்களிடம் நேரடியாக பதிவு செய்துவிட்டு வந்துள்ளார். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று..

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்துக்கான விளம்பரப் பணிகள் கடந்த இரண்டு நாள்களாக மும்பையில் நடைபெற்று வந்தது.

பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது. படத்தைப் போலவே படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் படக்குழுவினர் வெகு பிரமாண்டமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

தமிழகத்தில் மட்டுமல்ல, அண்டை மாநிலங்களுக்கும் படக்குழுவினர் நேரடியாகச் சென்று மிகச் சிறப்பான முறையில் பொன்னியின் செல்வன் படத்துக்கு பிரமோஷன் செய்து வருகிறார்கள்.

எப்போதும் மக்கள் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் படக்குழுவினரும், படத்தில் நடித்தவர்களும் உறுதியாக இருக்கிறார்கள். அதற்காக பல யுக்திகளையும் கையாள்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராக தங்களது டிவிட்டர் முகப்புப் பக்கப் பெயரை பொன்னியின் செல்வன் படத்தின் கதாப்பாத்திரங்கள் பெயரில் மாற்றுவது, தங்களது வசனங்களைச் சொல்லி உரையாடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்தனர்.

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக கார்த்தியும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். இதில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் சகோதர, சகோதரிகளாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ராஜ ராஜ சோழன் யார்?
ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? அவர் தஞ்சை பெரிய கோயிலை எப்படிக் கட்டினார் தெரியுமா? என்று மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் விளம்பர நிகழ்ச்சியில் தனது ஆவேசப் பேச்சால் அசர வைத்தார் சீயான் என அவரது ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் விக்ரம்.

மும்பையில் நடந்த விழாவில், ராஜ ராஜ சோழனின் பெருமைகளை, ரமணா படத்தில் விஜயகாந்த் புள்ளி விவரங்களோடு சொல்லி கைத்தட்டலைப் பெற்ற காட்சி போல, ராஜ ராஜ சோழன் கட்டிய அணை முதல், ஊர்களுக்கு பெண்களின் பெயர்களை சூட்டியது என அனைத்தையும் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அதுவும் மும்பை வாழ் மக்களுக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்தில் பேசி அங்கே இருந்த அனைவரையும் அசர வைத்துள்ளார் விக்ரம்.

நேராக நிற்காத பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், நம்மிடம் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. தஞ்சை பெரிய கோயில் இருக்கிறது. அவற்றுக்கெல்லாம் எந்த பிளாஸ்டரும் பயன்படுத்தவில்லை.

கிரேன் அல்லது பிளாஸ்டர் போன்றவை எல்லாம் இல்லாத காலத்திலேயே, மிகப்பெரிய கோபுரத்தைக் கட்ட 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாய்வுதளம் அமைத்து பல டன் எடைகொண்ட கற்களை கோபுரத்தில் ஏற்றியிருக்கிறார்கள்.  அது மட்டுமல்ல, சுமார் 6 நிலநடுக்கங்களைத் தாண்டியும் கோயில் நிலையாக நிற்கிறது என்று கூறினார் விக்ரம்.

மிக முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணி ரத்னம் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடமேற்று நடித்திருப்பவர் விக்ரம். இவரது விடியோதான் நேற்று முழுக்க எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும் ஓடிக் கொண்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com