
ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை படமாக்க எம்ஜிஆர் துவங்கி, கமல்ஹாசன் வரை பலரும் முயற்சித்தனர். ஆனால் பொருட் செலவு அதிகமாகும் என்பதால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.
இயக்குநர் மணிரத்னம் முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய், மகேஷ் பாபு, ஆர்யா நடிப்பில் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க திட்டமிட்டார். ஆனால் அந்த முயற்சியும் நடக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி ராஜராஜ சோழனாகவும், நடிகர் கார்த்தி வந்தியத் தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், திரிஷா குந்தவி தேவியாகவும் நடித்துள்ளனர். இவர்களது தோற்றப் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனக்கு எப்பொழுதும் குதிரைகள் மீது அதீத ஈர்ப்பு இருக்கும். காஷ்மோரா படத்துக்காக குதிரை சவாரியைக் கற்றுக்கொண்டேன். பொன்னியின் செல்வன் படம் முழுக்க நான் குதிரையின் மேல் தான் இருந்தேன். குதிரைகளோடு இருக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சியை விவரிக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.