ஹிந்தி தேசிய மொழியா?: ட்விட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்ட இரு பிரபல நடிகர்கள்

ஹிந்தி இப்போதும் எப்போதும்  எங்களுடைய தாய்மொழி, தேசிய மொழி என்றார்.
ஹிந்தி தேசிய மொழியா?: ட்விட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்ட இரு பிரபல நடிகர்கள்

ஹிந்தி தேசிய மொழியா என்கிற விவாதத்தில் ட்விட்டர் தளத்தில் இரு பிரபல நடிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப், தென்னிந்திய ரசிகர்களைக் கவர்வதற்காக ஹிந்திப் படங்கள், தென்னிந்திய மொழிகளில் டப் ஆகின்றன, தென்னிந்தியாவில் வெளியாகின்றன, இதனால் ஹிந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக இனியும் கருத முடியாது என்றார். ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கிச்சா சுதீப்பின் பேச்சுக்குப் பதிலளித்தார். ட்விட்டரில் ஹிந்தியில் அவர் கூறியதாவது:

சகோதரருக்கு, உங்களைப் பொறுத்தவரை ஹிந்தி தேசிய மொழி கிடையாது எனில் உங்களுடைய தாய்மொழிப் படங்களை எதற்காக ஹிந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? ஹிந்தி இப்போதும் எப்போதும்  எங்களுடைய தாய்மொழி, தேசிய மொழி என்றார். அஜய் தேவ்கனுக்குப் பதில் அளித்து கிச்சா சுதீப் கூறியதாவது:

நான் எதற்காக அப்படிப் பேசினேன் என்பதை நீங்கள் புரிந்துகொண்ட விதம் வேறு என  நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்கும்போது எதனால் அப்படிப் பேசினேன் என்பதைக் கூறுகிறேன். காயப்படுத்துவதற்காகவோ தூண்டுவதற்காகவோ விவாதம் எதையும் தொடங்குவதற்காகவோ அப்படிப் பேசவில்லை. நான் ஏன் அப்படிச் செய்யவேண்டும்? நம் நாட்டின் ஒவ்வொரு மொழியையும் நான் விரும்புகிறேன், மதிப்பளிக்கிறேன். இந்த விவாதம் முடிவுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் நான் வேறு அர்த்தத்தில் அதைக் கூறினேன். விரைவில் உங்களைக் காண விரும்புகிறேன். நீங்கள் ஹிந்தியில் எழுதியதை நான் புரிந்துகொண்டேன். ஏனெனில் நாங்கள் ஹிந்திக்கு மதிப்பளித்து அதைக் கற்றுக்கொண்டதால். ஒருவேளை நான் கன்னடத்தில் பதில் அளித்திருந்தால் இப்போது நிலைமை என்ன ஆகியிருக்கும்? நாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இல்லையா சார் என்றார். 

இதற்குப் பிறகு சமாதான நிலைக்கு வந்தார் அஜய் தேவ்கன். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

கிச்சா சுதீப், நீங்கள் என் நண்பர். தவறான புரிதலைச் சரிசெய்ததற்கு நன்றி. நம் திரைத்துறை என்பது ஒன்று என்றுதான் எப்போதும் நினைப்பேன். அனைத்து மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். அதேபோல எங்கள் மொழியையும் அனைவரும் மதிக்கவேண்டும் என விரும்புகிறோம். மொழிபெயர்ப்பில் ஏதோ தவறாகிவிட்டது என்றார். 

ஹிந்தி தேசிய மொழியா என்கிற விவாதத்தில் கிச்சா சுதீப்பும் அஜய் தேவ்கனும் கருத்து மோதலில் ஈடுபட்டது சமூகவலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருடைய ட்வீட்களை வைத்தும் பல்வேறு வகையான விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com