பழம்பெரும் நடிகை ரெங்கம்மாள் பாட்டி காலமானார்

பிரபலமான குணச்சித்திர நடிகை ரெங்கம்மாள் பாட்டி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 
பழம்பெரும் நடிகை ரெங்கம்மாள் பாட்டி காலமானார்

பிரபலமான குணச்சித்திர நடிகை ரெங்கம்மாள் பாட்டி உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 

அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கம்மாள் பாட்டி. இவர் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் நடித்த விவசாயி என்ற படத்தில் அறிமுகமாகி, சிவாஜி, ஜெயலலிதா உள்ளிட்ட அப்போதைய முக்கிய நடிகர்கள் முதல் அஜீத், விஜய் உள்ளிட்ட தற்போதைய முன்னணி நடிகர்கள் வரை இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக இவர் குணச்சித்திர நடிப்பினை தாண்டி நகைச்சுவையில் மிகவும் பிரபலம் அடைந்தவர். நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த ஏராளமான படங்கள் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தாலும் போறது தான் போற அந்த நாயை சூன்னு சொல்லிட்டு போ, காஞ்சனா படத்தில் லாரன்ஸ் உடன் அவர் நடித்த காட்சிகள் உள்ளிட்டவை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள காட்சிகளாகும். 

இது போன்ற நடிப்புகளில் மக்களை மகிழ்வித்த ரெங்கம்மாள் பாட்டி படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையத்தில் ஒரு சிமெண்ட் சீட் வைத்து மறைக்கப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வந்தார். தெலுங்குபாளையத்தில் உள்ள கூலி தொழிலாளியான அவரது சகோதரி தான் அவருக்கு உணவு அளித்து வந்தார். இருப்பினும் தன்னால் கடைசி வரை அவரை பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தமிழ் திரையுலகினர் உதவி செய்ய வேண்டும் என கடந்த மார்ச் மாதம் அவரது சகோதரி கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் ரங்கம்மாள் பாட்டியின் மகன் ராஜகோபால் தனது தாயுடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் சினிமா பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் வறுமையின் காரணமாகச் தங்கள் சொந்த ஊருக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

ரெங்கம்மாள் பாட்டி வசித்து வந்த வீடு. 

மேலும் உடல்நலக் குறைவு காரணமாக தனது தாய் ரெங்கம்மாள் இங்கேயே வசிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனது தாயாருக்கு, சினிமா உலகில் வறுமையில் வாடும் சக நடிகர்களுக்கும் நடிகர் சங்கம் உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே கடந்த சில நாள்களாகவே உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். பிரபலமான குணச்சித்திர நடிகை உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com