'கோப்ரா' பட விவகாரம் - இயக்குநர் புறக்கணிக்கப்படுகிறாரா ?

கோப்ரா பட நிகழ்வுகளில் இயக்குநர் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  
'கோப்ரா' பட விவகாரம் - இயக்குநர் புறக்கணிக்கப்படுகிறாரா ?

கோப்ரா பட நிகழ்வுகளில் இயக்குநர் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

டிமாண்டிக் காலனி, இமைக்கா நொடிகள் படத்துக்கு பிறகு விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பாக இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மிருணாளினி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கோப்ரா பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. 

வருகிற 31 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் சார்பாக இந்தப் படத்தை வெளியிடுகிறார். இந்தப் படத்தை விளம்பரப்படுத்த நடிகர் விக்ரம், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி உள்ளிட்டோர் திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்கள். 

அவர்களுடன் இயக்குநர் அஜய் ஞானமுத்து பங்கேற்கவில்லை. இதனையடுத்து அவர் புறக்கணிக்கப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் டி.சிவா, ''போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்துவிட்டு அதைத் தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித் குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்'' என்று ட்விட்டரில் பதிவிட்டார். 

அவருக்கு பதிலளித்த அஜய் ஞானமுத்து, ''கோப்ரா படத்தின் பட்ஜெட் அதிகரித்ததற்கு நான் காரணமில்லை. இதனை எங்கேயும் எப்பொழுதும் என்னால் நிரூபிக்க முடியும். ஆதாரம் வதந்திகளை விட சத்தமாக பேசும். நான் டீம் என்று குறிப்பிட்டது தயாரிப்பாளரையும்தான்'' என்று விளக்கமளித்துள்ளார். 

இதன் மூலம் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கு பிரச்னை இருந்துவந்தது தெரிகிறது. இந்த நிலையில் கோப்ரா நிகழ்ச்சிகளில் அஜய் ஞானமுத்து பங்கேற்காதது ஏன் என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த அஜய் ஞானமுத்து, ''மன்னித்துக்கொள்ளுங்கள். விரைவில் படக்குழுவினருடன் இணைவேன். கோப்ரா படத்தின் இறுதிகட்ட பணிகளில் இருக்கிறேன்'' என்று விளக்கமளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com