
நடிகர் நரேன் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
மலையாள நடிகரான நரேன் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் நரேன் நடித்த அஞ்சாதே திரைப்படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. தமிழின் குறிப்பிடத்தகுந்த படங்களில் அஞ்சாதே படமும் இருக்கிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு கைதி படத்தில் காவல்துறை அதிகாரியாக நரேன் அனுபவ நடிப்பைக் காட்டினார். கைதி படத்தின் தொடர்ச்சியாக உருவான லோகேஷின் விக்ரம் படத்திலும் நரேன் நடித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க | 'கோப்ரா' பட விவகாரம் - இயக்குநர் புறக்கணிக்கப்படுகிறாரா ?
50 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிய விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த நிலையில் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவி மகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், எங்கள் 15வது ஆண்டு திருமண நாளில் எனது மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு மஞ்சு என்ற தொலைக்காட்சி தொகுப்பாளரை நரேன் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 14 வயதில் மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...