
வாரிசு திரைப்படத்திற்கு குறைவாக கிடைத்த திரையரங்க எண்ணிக்கை தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ உதயநிதி ஸ்டாலினை சந்திக்க உள்ளார்.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், யாருக்கு அதிக திரையரங்கம் ஒதுக்கப்படும் என்கிற கேள்விகள் எழுந்தன.
இதையும் படிக்க: ’பாபா’ மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?
இதுகுறித்து முன்னதாக, துணிவு படத்தினை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் ‘பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் சரி சமமான திரையரங்குகளில் வெளியாகும்’ எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போதைய நிலவரப்படி வாரிசு திரைப்படத்தை விட அதிக திரையரங்குகளில் துணிவு வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட திரைகளில் துணிவு திரையிடப்பட உள்ளதாகவும் தகவல்.
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ “அஜித்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய்தான் நம்பர்.1 இடத்தில் இருக்கிறார். ஆனால், வாரிசு படத்திற்கு குறைவான திரைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இது வியாபாரம். நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் குறித்துப் பேசப்போகிறேன்’ என நேர்காணல் ஒன்றில் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.