'அமுதாவும் அன்னலட்சுமியும்'.. அனைவரும் பார்க்க வேண்டிய தொடர்! ஏன் தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரின் புதிய முன்னோட்டம் (புரோமோ) மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. 
அமுதாவும் அன்னலட்சுமியும்
அமுதாவும் அன்னலட்சுமியும்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரின் புதிய முன்னோட்டம் (புரோமோ) மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. 

சின்னத்திரை தொடர்களில் யாரும் பேசாத, பலர் பேசத்தயங்கிய விஷயத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால், பல பெண்களுக்கு ஆதரவு அளித்து அரவணைக்கும் தொடராக அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் மாறியுள்ளது. 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வார நாள்களில் இரவு 7 மணிக்கு அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஜூலை 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட 100 எபிஸோடுகளை மட்டுமே தாண்டியுள்ள நிலையில், இதில் பல ஆழமான முற்போக்கு கருத்துகள் பேசப்படுவதால், மக்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது. 

கதைக்களம்

அன்னலட்சுமி என்ற பாத்திரத்தில் கண்மணியும், செந்தில் என்ற பாத்திரத்தில் மனோகரனும் நடிக்கின்றனர். செந்திலின் அம்மா அன்னலட்சுமியாக, ராஜஸ்ரீ நடிக்கிறார்.

படிக்காததால் பல அவமானங்களை அனுபவித்த அன்னலட்சுமி, திருமணம் செய்தால் ஒரு வாத்தியாரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். 

வாழ்ந்துகெட்ட குடும்பத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி, தன் மகனை வாத்தியாராக்கி குடும்ப கெளரவத்தை மீட்டெடுக்கும் கனவோடு இருக்கிறார். ஆனால் அவரின் மகன் செந்தில், பக்கத்து கிராமத்து பள்ளிக்கூடத்தில் பியூனாக வேலை செய்கிறார். 

செந்திலை வாத்தியார் என நினைத்து காதல்கொள்ளும் அமுதா, மகனை நினைத்து பெருமைகொள்ளும் அன்னலட்சுமி இவர்களுக்கு இடையிலான கதைக்களமே அமுதாவும், அன்னலட்சுமியும்....

மனங்களை வெல்லும் காட்சி

இந்நிலையில், இந்த தொடரில் வரும் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வுக்கான காட்சிக்கான புரோமோ மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.  
 
தொடரில் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில், அமங்கலியாக பூவும் பொட்டும் இல்லாம முன்ன நின்று தாலி எடுத்துக்கொடுத்தா, எதிர்காலத்தையே பாதிக்கும் என அன்னலட்சுமியை நிகழ்ச்சியில் இருந்தவர்கள் புறக்கணிக்கின்றனர். 

அப்போது குறுக்கே வரும் அமுதா, கணவனை இழந்த தன் மாமியாரை (அன்னலட்சுமியை) அழைத்து வந்து, அவருக்கு பூவும் பொட்டும் வைத்து விடுகிறார். (அன்னலட்சுமி அதிர்ச்சியில் உறைகிறார்) பின்னர் அமுதா பேசும் வசனங்கள்தான் பலரின் மனங்களை கொள்ளைக்கொண்டுள்ளது. 

''புருஷன் என்பவன் வெறும் தாலி மட்டும்தான் கட்டுகிறான். அவன் போயிட்டா, அதனால தாலிய கழட்டுறது சரி. ஆனால், பிறந்ததிலிருந்தே வைத்திருக்கும் பூவையும், பொட்டையும் எடுக்க வேண்டும் என நினைப்பது எந்தவகையில் நியாயம்'' என கேள்வி எழுப்புகிறார். 

மனிதி வெளியே வா என்ற பின்னிசைப் பாடலுடன் வெளியான புரோமோ உணர்ச்சிகரமாக மக்கள் மனதில் பதிந்துள்ளது. இது அமுதாவுக்கான குரல் மட்டுமல்ல அனைத்து பெண்களுக்கான குரல் என்ற வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

சின்னத்திரை தொடர்களில் மதத்தை முன்வைத்து சம்பிரதாயங்கள் / சடங்குகள் என்ற பெயரில் பல மூடநம்பிக்கை செயல்களை காட்சிகளாக வைக்கும் பல தொடர்களுக்கு மத்தியில் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் முற்போக்கான காட்சிகள் மூலம் தனித்துவம் பெறுகிறது. 

தமிழ் சினிமா மட்டுமல்ல, சின்னத்திரை தமிழ் தொடர்களும் அடுத்தக்கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com